இவர்கள் திருமணம் தாண்டிய உறவில் ஈடுபடுவதை தடுக்கும் வழிமுறை வேண்டும்.. உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
திருமணம் தாண்டிய உறவில் ஈடுபடும் ராணுவ அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பாதுகாப்பு படைகள் ஏதேனும் ஒரு வழிமுறையைக் கொண்டிருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திருமணம் தாண்டிய உறவில் ஈடுபடும் ராணுவ அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பாதுகாப்பு படைகள் ஏதேனும் ஒரு வழிமுறையைக் கொண்டிருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திருமணம் தாண்டிய உறவால் ஒருவரின் வாழ்க்கையே ஆட்டம் காணும், அது குடும்பத்தில் வலியை ஏற்படுத்தும் என்றும் இதை இலகுவான முறையில் எடுத்து கொள்ளக் கூடாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, இதுகுறித்த வழக்கின் விசாரணையின்போது, "சீருடை அணிந்த சேவைகளில் (ராணுவம்), ஒழுக்கம் மிக முக்கியமானது. திருமணம் தாண்டிய உறவு என்பது அதிகாரிகளின் வாழ்க்கையையே புரட்டிப் போடக்கூடிய செயல்.
இறுதியில், ஒவ்வொருவரும் சமூகத்தின் ஒரு அலகான குடும்பத்தையே சார்ந்துள்ளனர். சமூகத்தின் ஒருமைப்பாடு ஒரு துணை மற்றொருவருக்கு விசுவாசமாக இருப்பதை அடிப்படையாகக் கொண்டது. இந்த உறவு, ஆயுதப்படைகளில் ஒழுக்கத்தை அசைக்கப் போகிறது. ஆயுதப் படைகள் தாங்கள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்க வேண்டும். நீங்கள் எப்படி ஜோசப் ஷைனை (தீர்ப்பு) மேற்கோள் காட்டி அது முடியாது என்று சொல்லலாம். திருமணம் தாண்டிய உறவுக்காக விதிக்கப்படும் தண்டனை அரசியலமைப்புக்கு முரணானது என அறிவித்த உச்ச நீதிமன்றத்தின் 2018 தீர்ப்பை காரணம் காட்டி குற்றவாளிகளுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கைகளை நிறுத்த முடியாது.
திருமணம் தாண்டிய உறவு, ஒரு குடும்பத்தில் வலியை உருவாக்குகிறது. உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளாக எத்தனையோ அமர்வுகளை நடத்தி, குடும்பங்கள் துண்டாடப்படுவதைப் பார்த்திருக்கிறோம். இதை இலகுவாக நடத்த வேண்டாம் என்று நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம்.
திருமணம் தாண்டிய உறவில் ஈடுபட்ட தாய், தனது குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்க கோரி ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்த சம்பவம் ஒன்று உள்ளது. அவர்கள் (குழந்தைகள்) தாயிடம் பேச மறுத்தனர். அந்த மாதிரி வெறுப்புதான் நடக்கும்" என தெரிவித்தது.
நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ரிஷிகேஷ் ராய் மற்றும் ரவிக்குமார் அடங்கிய அமர்வு, தற்போது இந்த கருத்தை தெரிவித்துள்ளது. என்ஆர்ஐ ஜோசப் ஷைன் தாக்கல் செய்த மனுவின் பேரில், உச்ச நீதிமன்றம் 2018 ஆம் ஆண்டில் இந்திய தண்டனைச் சட்டத்தின் 497 வது பிரிவை ரத்து செய்தது. திருமணம் தாண்டிய உறவை குற்றமாக கருதுவது அரசியலமைப்பிற்கு விரோதமானது என நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மாதவி திவான், 2018ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பு குறித்து விளக்கம் கேட்டு மனு தாக்கல் செய்தார். கடந்த 2018ஆம் ஆண்டு, திருமணம் தாண்டிய உறவை குற்றமாக கருதும் சட்டத்தை ரத்து செய்த தீர்ப்பு, ஆயுதப் படை வீரர்கள், அச்செயல்களுக்காகத் தண்டிக்கப்படுவதற்குத் தடையாக இருக்கிறது என பாதுகாப்பு அமைச்சகம் (MoD) உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.