AP Bus Fire: தீயில் கருகிய 20 உயிர்கள்.. கடைசி வரை காப்பாற்ற போராடிய ஓட்டுனர்கள் - பேருந்து விபத்தில் நடந்தது என்ன?
ஆந்திராவில் தனியார் ஆம்னி பேருந்து தீ விபத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்த விவகாரத்தில் பயணிகளை காப்பாற்ற ஓட்டுநர்கள் போராடியுள்ளனர்.

கடந்த 23ம் தேதி தெலங்கானாவின் ஹைதரபாத்தில் இருந்து கர்நாடக தலைநகர் பெங்களூர் நோக்கி வந்த தனியார் பேருந்து ஆந்திராவின் கர்னூல் அருகே அதிகாலையில் விபத்தில் சிக்கி 19 பயணிகள் மற்றும் பைக் ஓட்டி வந்தவர் உள்பட 20 பேர் பரிதாபமாக உடல்கருகி உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த ஆம்னி பேருந்து விபத்தில் சிக்கியபோது பேருந்தில் லஷ்மய்யா மற்றும் மற்றொரு ஓட்டுனர் இருந்துள்ளனர். பேருந்தை லஷ்மய்யா ஓட்டி வந்துள்ளார். இரு சக்கர வாகனம் பேருந்தின் மீது மோதி அடியில் சிக்கிய உடன் தீ மளமளவென பற்ற ஆரம்பித்துள்ளது.
காப்பாற்ற போராடிய ஓட்டுனர்கள்:
அப்போது, உடனடியாக லஷ்மய்யா மற்றொரு டிரைவரையும் எழுப்பியுள்ளார். அதற்குள் பேருந்தின் உள்ளே தீ பரவத்தொடங்கியதும் இருவராலும் பேருந்தின் உள்ளே சென்று பயணிகளை எழுப்ப முடியவில்லை. உடனடியாக டயர் மாற்றும் இரும்பு கம்பியை எடுத்து பேருந்தின் கண்ணாடியை உடைத்து பயணிகளை காப்பாற்றும் முயற்சியில் ஓட்டுனர்கள் இருவரும் ஈடுபட்டுள்ளனர். ஆனால், தீ மளமளவென பரவியதால் இவர்களால் ஏதும் செய்ய முடியவில்லை.
தங்கள் கண் முன்னே தாங்கள் அழைத்து வந்த பயணிகள் தீக்கிரையாவதை கண்ட இருவரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். லஷ்மய்யா அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகிய நிலையில், அவரை கர்னூல் போலீசார் கைது செய்தனர். மற்றாெரு ஓட்டுனர் காவல்துறையினரிம் சரண் அடைந்துள்ளார்.
20 பேர் மரணம்:
பேருந்து மீது மோதிய இரு சக்கர வாகனம் பேருந்தின் எஞ்ஜினுக்கு கீழே சிக்கிக் கொண்ட ஏற்பட்ட தீப்பொறி காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியானது. தற்போது இந்த விபத்திற்கு வேறு ஒரு காரணம் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
234 செல்போன்கள் காரணமா?
அதாவது, தீ விபத்திற்கு ஆளான பேருந்தில் மங்காநாத் என்பவரும் பயணித்தார். அவர் வியாபாரி ஆவார். அவர் இணையவழி வர்த்தகம் செய்து வருகிறார். அவர் இந்த பேருந்தில் ரூபாய் 46 லட்சம் மதிப்புள்ள 234 புதிய செல்போன்கள் அடங்கிய பார்சலை பெங்களூருக்கு பார்சலாக அனுப்பியுள்ளார்.
விபத்தில் பேருந்தின் முன்பக்கத்தில் தீ பற்றியதும் அது மளமளவென பரவியது. அப்போது, பேருந்தில் இருந்த 234 செல்போன்கள் அடங்கிய பார்சலில் தீ பரவியதும் செல்பாேன்களில் இருந்த பேட்டரிகள் வெடித்துச் சிதறியுள்ளது. இதனால், பேருந்தில் தீயின் வேகம் மளமளவென பரவியுள்ளதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அலுமினியம்:
எஞ்ஜினில் ஏற்பட்ட தீ மட்டுமின்றி பேருந்தில் இருந்த செல்போன்கள் வெடித்துச் சிதறியது மட்டுமின்றி, இந்த கொடூர தீ விபத்திற்கு மற்றொரு காரணமும் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, இந்த பேருந்தின் வடிவமைப்பு இரும்பிற்கு பதிலாக அலுமினியத்தில் செய்யப்பட்டுள்ளது. இதனால், தீ மிக எளிதாக மளமளவென பரவியுள்ளது என்றும் தீயணைப்புத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
மதுபோதையா?
மேலும், இந்த கொடூர விபத்திற்கு முக்கிய காரணமாக இருந்த அந்த இரு சக்கர வாகனத்தில் இருந்த நபர் மதுபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அவர் பெட்ரோல் பங்க் ஒன்றில் நண்பரை இறக்கிவிட்டு வாகனத்தில் செல்லும்போது நிதானம் இல்லாமல் வாகனத்தை ஓட்டிச் செல்வது பதிவாகியுள்ளது. இதனால், அந்த இளைஞர் மதுபோதையில் இருந்தாரா? என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.





















