"பெண்கள் மீதான வெறுப்ப நியாயப்படுத்துறது வெக்கமா இருக்கு" நாடாளுமன்றம் வரை சென்ற அனிமல் பட சர்ச்சை
மாநிலங்களவையில் பேசிய காங்கிரஸ் எம்பி ரஞ்சீத் ரஞ்சன், "பெண்கள் மீதான வெறுப்பை அனிமல் படம் நியாயப்படுத்துகிறது" என்றார்.
ரன்பீர் கபூர் , சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி வெளியானது அனிமல் திரைப்படம். அர்ஜூன் ரெட்டி திரைப்படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இப்படத்தை இயக்கியுள்ளார். அனில் கபூர், பாபி தியோல், ட்ரிப்தி டிம்ரி உள்ளிட்டவர்கள் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
அனிமல் திரைப்படத்திற்கு எதிராக எழும் விமர்சனங்கள்:
அனிமல் திரைப்படம் வெளியான 9 நாட்களில் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. ரன்பீர் கபூர் நடிப்பில் கேங்ஸ்டர் டிராமாவாக உருவாகி இருக்கும் இப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் மற்றொரு தரப்பு ரசிகர்கள் இப்படத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
அனிமல் படத்தில் பெண் வெறுப்பை ஊக்குவிக்கும் பல்வேறு விதமான கருத்துக்கள் இடம்பெற்றிருப்பதாக இப்படத்தின் மேல் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. முன்னதாக இந்திய அணி கிரிக்கெட் வீரர் ஜெயதேவ் உனட்கட் இந்தப் படத்தை கடுமையாக விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அனிமல் படத்தைப் புகழ்ந்து நடிகை த்ரிஷா பதிவிட்டதாக அவரது ஸ்டோரி ஸ்க்ரீன்ஷாட்கள் இணையதளத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டன . இதனைத் தொடர்ந்து அந்தப் பதிவை அவர் நீக்கினார்.
இந்த நிலையில், நாடாளுமன்ற வரை சென்றுள்ளது அனிமல் பட சர்ச்சை. மாநிலங்களவையில் பேசிய காங்கிரஸ் எம்பி ரஞ்சீத் ரஞ்சன், "பெண்கள் மீதான வெறுப்பை இந்த படம் நியாயப்படுத்துகிறது" என்றார்.
நாடாளுமன்றம் வரை சென்ற பிரச்சனை:
இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "சினிமா என்பது சமூகத்தின் கண்ணாடி. நாம் சினிமா பார்த்து வளர்ந்தவர்கள். அது இளைஞர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும். முதலில் கபீர் சிங், புஷ்பா போன்ற படங்கள் வந்தது. இப்போது அனிமல் வந்திருக்கிறது. என் மகள் தன் கல்லூரி நண்பர்களுடன் படம் பார்க்கச் சென்றாள். அழுகையை நிறுத்த முடியாமல் படத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினாள்.
படத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் காட்டப்படுகிறது. இது இளைஞர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும். கபீர் சிங்கைப் பாருங்கள், அவர் தனது மனைவி, மக்கள் மற்றும் சமூகத்தை எவ்வாறு நடத்துகிறார். மேலும் திரைப்படம் அந்த செயல்களை நியாயப்படுத்துகிறது. இளைஞர்கள், அவரை ஒரு முன்மாதிரியாகக் கருதத் தொடங்குகின்றனர். திரைப்படங்களில் நாம் பார்ப்பதால், சமூகத்திலும் இதுபோன்ற வன்முறைகளைப் பார்க்கிறோம்" என்றார்.
திரைப்படத்தில் இடம்பெற்ற அர்ஜன் வைலி பாடல் குறித்து பேசிய அவர், "முகலாயர்களுக்கு எதிராகவும் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போரிட்ட சீக்கியப் படையின் தலைமைத் தளபதி ஹரி சிங் நல்வா. அவருடைய மகன் அர்ஜன் சிங் நல்வா. பிரிவினைக்கு முன்பு, பாகிஸ்தானின் குஜ்ரன்வாலாவில் மாட்டி கொண்ட பல முஸ்லிம்களை அவர் காப்பாற்றினார். அவரை பற்றிய வரலாற்றுப் பாடல், படத்தில் வரும் கும்பல்களுக்கு இடையே சண்டை நடக்கும்போது போடப்படுகிறது. இது மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளது" என்றார்.