"சொத்துல ஒரு பங்குகூட எனக்குத் தரல" ஜெகன்மோகனுக்கு எதிராக ஷர்மிளா பகிரங்க குற்றச்சாட்டு!
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி சொத்தில் தனது பங்கை தனக்குத் தரவில்லை என்று அவரது சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா குற்றம் சாட்டியுள்ளார்.
ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி. ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவரான இவருக்கு ஒய்.எஸ்.ஷர்மிளா என்ற மூத்த சகோதரி உள்ளார். ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாரிசுகளான இவர்கள் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது.
ஜெகன்மோகன் மட்டும் வாரிசு அல்ல:
ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவி வகித்தபோது இவர்கள் இருவர் இடையேயான மோதல் போக்கு உச்சத்திற்கு சென்றது. தற்போது வரை இவர்களது மோதல் போக்கு வலுவாக உள்ள நிலையில், ஜெகன்மோகன் ரெட்டி சொத்தில் தனது பங்கை தனக்குத் தரவில்லை என்ற குற்றச்சாட்டை அவரது அக்கா ஷர்மிளா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக, ஒய்.எஸ்.ஷர்மிளா கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது, “ ஒய்.எஸ்.ஆர். சார்பில் நிறுவப்பட்ட எங்கள் குடும்பத் தொழில்கள் அனைத்தும் அவரது நான்கு பேரக்குழந்தைகளுக்கும் சமமாக பகிரப்பட வேண்டும். அவை ஜெகன்மோகன் ரெட்டிக்கு மட்டுமே சொந்தமானவை அல்ல. ஜெகன் மோகன் ரெட்டி ஒரே வாரிசு அல்ல. அவர் வெறும் பாதுகாவலர். இந்த சொத்துக்களை நான்கு பேரக்குழந்தைகளுக்கும் சமமாக பகிர்ந்தளிப்பது அவரது பொறுப்பு ஆகும்.
என் பிள்ளைகளுக்கும் பங்கு உண்டு:
ஜெகன்மோகன் ரெட்டி உண்மையில் தனக்குச் சொந்தமானது என்று கூறும் சொத்துக்கள் உண்மையில் குடும்பச் சொத்துக்கள். இதுதொடர்பாக, நூற்றுக்ணக்கான கடிதங்கள் என் அம்மாவால் எழுதப்பட்டது. ஆனால், கல்போன்ற இதயத்தை உருக்கவோ, அசைக்கவோ முடியாது. இன்று வரை என் பிள்ளைகளுக்கு ஒரு சொத்துகூட சொந்தமில்லை. சட்டப்பூர்வமாகவும், நியாயமாகவும் அவர்களுக்கு அதில் பங்கு உள்ளது.
10 ஆண்டுகளில் 200 கோடிகள் என்பது எனது குழந்தைகளுக்கு சமமான பங்குகள் என்பதை ஒப்புக்கொண்டதை பிரதிபலிக்கிறது என்பதை ஒருவர் உணர வேணடும். அது நிறுவனங்களின் ஈவுத்தொகையின் பாதிப்பகுதியைத் தவிர வேறில்லை. எந்த வகையிலும் இதை ஒரு உதவியாகவே, பரிசாகவோ கருத முடியாது. கடனாக இருந்தாலும் அது எனக்கு சமமான பங்கிற்கு கிடைத்த அங்கீகாரம் ஆகும்.
சொத்து வழங்கவில்லை:
மறைந்த ஒய்.எஸ்.ஆரின் வீடு, சாக்ஷியில் 40 சதவீதம், பாரதி சிமெண்ட்ஸில் 49 சதவீதம், சரஸ்வதி பவரில் 100 சதவீதம், ஏலகங்கா சொத்தில் 100 சதவீதம் என்னுடை பங்காகும். அவரை ( ஜெகன்மோகன் ரெட்டி) விமர்சிப்பதை நிறுத்த வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அதை மறுத்ததால் சரஸ்வதி பவர் நிறுவனத்தில் மோசடியாக பங்குகளை எடுத்ததாக கூறி தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் தன் மீதும், தன் தாய் மீதும் வழக்குத் தொடர்ந்தார்.
புரிந்துணர்வு ஒப்பந்தம் 5 ஆண்டுகளாக இருந்தும் ஒரு சொத்து கூட எனக்கு வழங்கப்படவில்லை. இருந்தாலும் அதை நான் வெளிப்படுத்தவில்லை. கஷ்டங்கள் மற்றும் பொருளாதார சிக்கல்கள் இருந்தபோதிலும் சட்டத்தின் கதவுகளை தட்டவில்லை. ஒய்.எஸ்.ஆரின் கண்ணியத்தை நிலைநாட்ட கடுமையாக முயற்சித்தேன்.” இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.
ஷர்மிளாவின் இந்த கடிதம் ஜெகன்மோகனுக்கு பெரும் நெருக்கடியை அளித்துள்ளது. ஏற்கனவே, ஆளுங்கட்சி தொடர் நெருக்கடி தரும் சூழலில் ஷர்மிளாவின் இந்த நெருக்கடி அவருக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.