Andhra Dussehra | ரூபாய் தாள்களை மடித்து கட்டிய மாலை.. மொத்த மதிப்பு ரூ.5 கோடி... வாய்பிளக்க வைக்கும் போட்டோ!
ரூபாய் தாள்களைக் கொண்டு கடவுள் சிலைகளை அலங்காரம் செய்வது வழக்கமாக உள்ளது. நெல்லூரைப் பொருத்தவரை, இவ்வளவு பெரிய தொகையோடு அலங்காரம் செய்யப்படுவது இதுவே முதன்முறை என தெரிவிக்கிறார்கள் நெல்லூர் மக்கள்.
தசரா பண்டிகையை முன்னிட்டு ஆந்திர மாநிலத்தில் நெல்லூரில் உள்ள கோவில் ஒன்றில் உள்ள சிலை 5 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள ரூபாய் தாள்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
ஆந்திர மாநிலம் நெல்லூரில் கன்யகா பரமேஸ்வரி ஆலயம் அமைந்துள்ளது. இந்தக்கோவிலில் இந்த கோவிலில் ஆண்டின் வெவ்வேறு நேரங்களில் அம்மனின் பல்வேறு வடிவங்கள் வைத்து வழிபடப்படுகிறது. இந்நிலையில் நவராத்திரி- தசரா கொண்டாட்டங்களையொட்டி அம்மன், பணம் கொடுக்கும் தனலக்ஷ்மியாக வைத்து வழிபடப்பட்டார். வழிபாட்டிற்காக சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து ரூபாய் தாள்களால் அம்மன் சிலை அலங்கரிக்கபட்டிருந்தது. இந்தப் பணிக்காக 100க்கும் அதிகமான தன்னார்வலர்கள் ஈடுபட்டிருந்தினர். அதன்படி, 2000, 500, 200, 100, 50, 10 ரூபாய் தாள்களைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதற்காக மொத்தம் ரூ.5 கோடியே 16 லட்சம் மதிப்பிலான பணம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
4 வருடங்களுக்கு முன்பாக ரூ.11 கோடி செலவில் இந்தக்கோவில் மறுசீரமைப்பு செய்யப்பட்டது. நவராத்திரி தசரா பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் இந்தக்கோவிலில் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். நெல்லூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணைய தலைவர் முக்கல துவாரகாநாத் இந்த நிகழ்வுகளுக்கு பொறுப்பாளராக உள்ளார். இதுகுறித்து பேசிய அவர் அம்மனை அலங்கரிக்க 7 கிலோகிராம் தங்கம் மற்றும் 60 கிலோ வெள்ளி பயன்படுத்தப்படுகிறது என தெரிவித்தார்.
இதையும் படிக்க: 25 ஆண்டுகளுக்கு பின் அதிமுக கோட்டையைத் தட்டித் தூக்கிய திமுக... கொடுத்த வேலையை பக்காவாக செய்த மகேந்திரன்
பல இடங்களில் ரூபாய் தாள்களைக் கொண்டு கடவுள் சிலைகளை அலங்காரம் செய்வது வழக்கமாக உள்ளது. ஆனால் நெல்லூரைப் பொருத்தவரை, இவ்வளவு பெரிய தொகையோடு அலங்காரம் செய்யப்படுவது இதுவே முதன்முறை என தெரிவிக்கிறார்கள் நெல்லூர் மக்கள்.
கடந்த ஆண்டும் தெலங்கானா மாநிலத்தில் உள்ள கன்யகா பரமேஷ்வரி கோவிலில் ரூபாய் தாள்களைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. அப்போது ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தாள்கள் ஒரிகாமி மலர்கள் போன்று வடிவமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன. ரூ. 1,11,11,111 மதிப்பிலான வெவ்வேறு நிறங்களில் உள்ள கரன்சி நோட்டுகளைக் கொண்டு மாலை செய்யப்பட்டு அலங்காரமாக பயன்படுத்தப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்