"2 குழந்தைகளுக்கு மேல் பெத்துக்கணும்" தேர்தலில் போட்டியிட கண்டிஷன் போட்ட சந்திரபாபு நாயுடு!
2 குழந்தைகளுக்கு மேல் இல்லாதவர்கள், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியாது என ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கண்டிஷன் போட்டுள்ளார்.

அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளாதவர்கள், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியாது என ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கண்டிஷன் போட்டுள்ளார்.
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டுதான், மக்கள் தொகையில் சீனாவை இந்தியா பின்னுக்கு தள்ளியது. தற்போது, 145 கோடி மக்கள் தொகையுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
கண்டிஷன் போட்ட சந்திரபாபு நாயுடு:
வளர்ந்து வரும் மக்கள் தொகையை கட்டுக்கு கொண்டு வரும் நோக்கில், 1970-80களில் பல்வேறு மாநிலங்களில் இரண்டு குழந்தைகளை மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற விதி அமல்படுத்தப்பட்டது. இதனை, சிறப்பாக செயல்படுத்திய தென் மாநிலங்கள், மக்கள் தொகையை பெருமளவு கட்டுப்படுத்தியது.
இதன் விளைவாக, தென் மாநிலங்களின் மக்கள் தொகை தொடர்ந்து சரிந்து வருகிறது. மொத்த கருவுறுதல் விகிதம் 1.73 ஆக உள்ளது. அதாவது, தேசிய சராசரியான 2.1 ஐ விட மிகவும் குறைவாக உள்ளது. தென்னிந்தியாவில் மக்கள் தொகை விகிதம் குறைவது கவலை அளிக்கும் விதமாக உள்ளது என நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளும்படி, தென் மாநில முதலமைச்சர்கள், மக்களை அறிவுறுத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளாதவர்கள், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியாது என ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கண்டிஷன் போட்டுள்ளார்.
"தேர்தலில் போட்டியிட முடியாது"
இதுகுறித்து விரிவாக பேசிய சந்திரபாபு நாயுடு, "இரண்டு குழந்தைகளுக்கு மேல் இல்லாதவர்களே உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட அனுமதிக்கும் சட்டம் முன்பு எங்களிடம் இருந்தது.
இப்போது நான் சொல்கிறேன், குறைவான குழந்தைகள் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்பட மாட்டார்கள். வருங்காலத்தில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால்தான் சர்பஞ்ச், முனிசிபல் கவுன்சிலர், மேயர் ஆக முடியும்.
உங்கள் பெற்றோர் நான்கு முதல் ஐந்து குழந்தைகளைப் பெற்றெடுத்தனர். நீங்கள், அதை ஒரு குழந்தையாகக் குறைத்தீர்கள். இப்போது எல்லாம் இரட்டை வருமானத்தை ஈட்டுவதும், குழந்தைகள் இல்லாத வாழ்க்கை முறையைத் தேர்வு செய்வதும் வாடிக்கையாகிவிட்டது. உங்களின் பெற்றோர்கள் இதேபோல் நினைத்திருந்தால், இன்று நீங்கள் இருந்திருக்க மாட்டீர்கள்.
ஏற்கனவே வயதான மக்கள்தொகையாலும் சரிந்து வரும் வரும் பிறப்பு விகிதத்தாலும் ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள் பாதிப்படைந்துள்ளன. பிறப்பு விகிதத்தை அதிகரிக்க உடனடி நடவடிக்கைகள் தேவை" என்றார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

