Amit Shah Speech: அண்ணாமலை ஒரு ட்வீட் போட்டலே போதும்: திமுகவை சாடிய அமித்ஷா
பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை ஒரு டிவீட் போட்டாலே தமிழக அரசில் பூகம்பம் வெடிக்கிறது என, உள்துறை அமைச்சர் அமித் ஷா (BJP Padayatra) பேசியுள்ளார்.
பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை ஒரு டிவீட் போட்டாலே தமிழக அரசில் பூகம்பம் வெடிக்கிறது என, உள்துறை அமைச்சர் அமித் ஷா (BJP Padayatra) பேசியுள்ளார்.
அமித் ஷா தொடங்கி வைத்த பாதயாத்திரை:
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கடந்த 9 ஆண்டுகள் பாஜக செய்த சாதனையை மக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் நடைப்பயணம் மேற்கொள்கிறார். இந்த நடைப்பயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமநாதபுரத்தில் தொடங்கி வைத்தார். இதில், அதிமுக உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சிகளை சேர்ந்த பிரமுகர்களும் பங்கேற்றனர்.
”குடும்பத்தை வளர்ப்பதே இலக்கு”
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா”எதிர்க்கட்சிகளின் கூட்டணி நாட்டை வளர்க்க வேண்டும் என நினைக்கவில்லை. அவர்களது குடும்பத்தை வளர்க்க வேண்டும் என்றே நினைக்கிறார்கள். சோனியா காந்திக்கு ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும் என ஆசை. ஸ்டாலினுக்கு உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக்க வேண்டும் என்று விருப்பம். லாலு பிரசாத் யாதவிற்கு பீகார்ல் தனது மகன் தேஜஸ்வி யாதவை முதலமைச்சராக்க வேண்டும் என ஆசை. மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜிக்கு தனது மருமகனை முதலமைச்சராக்க ஆசை. மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்ரேவிற்கு தனது மகனை முதலமைச்சராக ஆசை. அவர்கள் நாட்டையோ, தமிழ்நட்டையோ வலுப்படுத்த விரும்பவில்லை, தனது குடும்ப உறுப்பினர்களை வளப்படுத்தவே விரும்புகிறார்கள், பிரதமர் மோடி மட்டுமே நாட்டையும், தமிழ்நாட்டையும் வளப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் நலத்திட்டங்களையும் வழங்கும் ஒரே தலைவர்.
”ஊழல் மிகுந்த திமுக அரசு”
தமிழ்நாட்டில் தற்போது நடைபெறும் அரசு ஊழல் மிகுந்ததாக உள்ளது. நாட்டிலேயே, உலகிலேயே ஊழல் மிகுந்த அரசாக உள்ளது. உங்களுடைய அமைச்சரவையை சேர்ந்த ஒருவர் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனால் தற்போதும் அவர் அமைச்சராக தொடர்கிறார். இதற்காக நீங்கள் வெட்கப்பட வேண்டும் ஸ்டாலின். சிறையில் இருப்பவர் அமைச்சராக நீடிக்கலாமா? அவர் ராஜினாமா செய்து இருக்க வேண்டாமா? ஆனால், ஸ்டாலின் அவரது ராஜினாமாவை ஏற்கமாட்டார். ஏனென்றால், அவர் ராஜினாமா கடிதத்தை வாங்கிவிட்டால், சிறையில் இருப்பவர் எல்லா ரகசியத்தையும் வெளியே சொல்லி விடுவார். இதனால் தான் ஸ்டாலின் ராஜினாமா கடிதத்தை வாங்க மறுக்கிறார்.
ஒரு டிவீட் போதும்..!
அண்ணாமலை ஒரே ஒரு டிவீட் போட்டால், திமுக ஆட்சியில் பூகம்பம் வெடிக்கிறது. பல கோடி ரூபாய்க்கான ஊழல் தற்போது தமிழக மக்கள் முன்னாள் வெளி வந்து இருக்கிறது. ஒரு டீவீட்டின் மூலமே பூகம்பம் வெடிக்கிறது என்றால், பல கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறாரே அதனால் என்ன நடக்கப்போகிறது என்பதை நினைத்து பாருங்கள். இந்த ஆட்சி ஊழல் பேர் வழிகளின் ஆட்சி, குற்றம்புரிவர்களின் ஆட்சி. இந்த அரசு ரேட் மாஃபியாவின் ஒரு அரசாக உள்ளது. இந்த அரசு தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஊழல் செய்திருக்கிற அரசு. ஏழை மக்களுக்கு விரோதமான அரச. திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் என்ன ஆனது? வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு பதிலாக, தரமான மருந்துகளை கொடுக்காமல் ஊழல் செய்து தமிழக மக்களை வஞ்சித்துள்ளீர்கள்.
தமிழ்நாட்டிற்கான திட்டங்கள்:
நான் காங்கிரசிடமும், திமுகவிடவும் ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறேன். 10 ஆண்டுகள் உங்கள் கூட்டணி ஆட்சியில் இருந்தது. அப்போது தமிழகத்திற்காக நீங்கள் எவ்வளவு நிதியை ஒதுக்கினீர்கள். நான் அந்த கணக்கை தருகிறேன். 2004 - 2014ம் ஆண்டு காலகட்டத்தில் தமிழ்நாட்டிற்கு 9 லட்சத்து 49 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பாஜக அரசு அந்த தொகையை 3 மடங்காக உயர்த்தி வழங்கியுள்ளது. இந்த நிதியெல்லாம் தமிழகத்தின் கடைக்கோடி வரை சென்று இருக்கிறதா என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும். அரசின் ஒவ்வொரு துறையிலும் திமுக அதிகப்படியான ஊழலை செய்து வருகிறது. பாஜக கூட்டணி அரசு 45 ஆயிரம் கோடி ரூபாயை தமிழ்நாடு சாலை மேம்பாட்டிற்காக கொடுத்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்காக 73 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கியுள்ளது. பிற ரயில் திட்டங்களுக்காக 34 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளோம். சென்னை - மைசூரு, சென்னை - கோவை என இரண்டு மார்க்கங்களில் வந்தே பாரத் ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கான முதலீடுகள்:
பாஜக அரசு தமிழ்நாட்டிற்காக மின்னணு சாதனங்கள் உற்பத்தியிலே 100 கோடி ரூபாய் முதலீட்டை கொண்டு வந்துள்ளது. ராணுவ தளவாடங்கள் உற்பத்திக்காக 1000 கோடி ரூபாய் முதலீட்டை கொண்டு வந்துள்ளது. அதோடு, இன்னும் பல திட்டங்களையும் பாஜக கூட்டணி அரசு தமிழகத்திற்கு வழங்கியுள்ளது. ஏழைகளுக்கு உதவி செய்யும் விதமாக விவசாயிகளுக்கு ஆண்டிற்கு ரூ.6000 வழங்கும் திட்டத்தையும், ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தையும், 1.86 கோடி மக்களுக்கு அவர்களது மருத்து செலவை அரசே ஏற்கும் திட்டத்தையும், 62 லட்சம் குடும்பங்களுக்கு கழிவறைகளையும் பிரதமர் மோடி கொடுத்துள்ளார்” என பல்வேறு சாதனைகளையும் அமித் ஷா பட்டியலிட்டார்.
”ஸ்டாலினுக்கு கேள்வி”
தொடர்ந்து “தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினிடம் ஒரே ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறேன். கடந்த 9 ஆண்டுகளில் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்திற்கு என்ன மாதிரியான திட்டங்களையும், நிதியையும் ஒதுக்கியுள்ளது என்ற விவரங்களை நான் கொடுத்துள்ளேன். காங்கிரஸ் அரசு என்ன செய்தது என்பதை நீங்கள் சொல்லுங்கள். அண்ணாமலை தனது பாதயாத்திரயை முடிக்கும்போது 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பெற்று மீண்டும் பிரதமராவார். தமிழ்நாட்டிலும் மாற்றம் நடக்கும். தமிழ்நாட்டிலிருந்து பாஜக கூட்டணி சார்பில் அதிகப்படியான எம்.பிக்களை டெல்லிக்கு அனுப்ப வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” எனவும் அமித் ஷா பேசினார்.