Amit Shah : "இத்தாலிய பூர்வீகமாக கொண்டவங்களுக்கு இது புரியாது" அட்டாக் மோடில் இறங்கிய அமித்ஷா
இத்தாலியை பூர்வீகமாக கொண்ட சகோதர சகோதரிகளால் நரேந்திர மோடி அரசாங்கத்தின் வளர்ச்சி பணியை புரிந்து கொள்ள முடியாது என விமர்சித்தார்.
பாஜகவின் கோட்டையாக கருதப்படும் மாநிலங்களில் ஒன்று மத்திய பிரதேசம். கடந்த 20 ஆண்டுகளில் 19 ஆண்டுகள் பாஜகதான் ஆட்சி புரிந்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும், முதலமைச்சர் பதவியை பெறுவதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல் நாத், இளம் தலைவரான ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோருக்கிடையே தொடர் போட்டி நிலவியது.
கமல் நாத்துக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டதையடுத்து, சொந்த கட்சிக்கு எதிராக போர்க்கோடி தூக்கிய சிந்தியா, தன்னுடைய ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜகவில் இணைந்தார். இதனால், ஆட்சி அமைத்த 13 மாதங்களில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. பாஜகவின் சிவராஜ் சிங் சவுகான் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்று, ஆட்சி நடத்தி வருகிறார்.
தேர்தலுக்கு தயாரான மத்திய பிரதேசம்:
மத்திய பிரதேச சட்டப்பேரவையின் பதவிக்காலம் இன்னும் 2 மாதங்களில் முடிவடைய உள்ள நிலையில், அதற்கான தேர்தல் நவம்பர் 17ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. அங்கு ஆட்சியை தக்க வைக்க பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இரண்டு தொகுதிகளை தவிர அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. பாஜக தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சிந்த்வாரா மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட மத்திய உள்துறை அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான அமித் ஷா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை மறைமுகமாக சாடினார்.
அட்டாக் மோடில் இறங்கிய அமித் ஷா:
இத்தாலியை பூர்வீகமாக கொண்ட சகோதர சகோதரிகளால் நரேந்திர மோடி அரசாங்கத்தின் வளர்ச்சி பணியை புரிந்து கொள்ள முடியாது என விமர்சித்தார். தொடர்ந்து பேசிய அவர், "இந்திய மக்களால் வளர்ச்சியை தெளிவாக புரிந்து கொள்ள முடியும். இந்தியாவின் வளர்ச்சியை உலகமே பாராட்டி வரும் நிலையில், காங்கிரஸால் நாட்டில் எந்த ஒரு நேர்மறையையும் காண முடியவில்லை.
அண்ணன், தங்கை இருவர் (ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி) தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் சுற்றி திரியும்போது, (பாஜக தலைமையிலான மத்திய அரசு) என்ன செய்தது என்று கேட்கிறார்கள். ஆனால், அவர்களால் இதை (வளர்ச்சி) புரிந்து கொள்ள முடியாது. ஏன் என்றால், அவர்களின் பூர்வீகம் இத்தாலி. இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள் இதைத் தெளிவாகப் புரிந்துகொள்வார்கள்.
அயோத்தி கோயில் பற்றி மட்டுமே பாஜக பேசும், ஆனால், அதன் தேதியை அறிவிக்காது என்று ராகுல் கூறி வருகிறார். இப்போது பாருங்கள், கோவிலை கட்டியது மட்டும் இன்றி (கும்பாபிஷேகம்) தேதியையும் மோடி சொல்லிவிட்டார். அங்கு சென்று ஆசிர்வாதம் பெற்று திருப்தி அடையுங்கள்.
மத்தியப் பிரதேச மக்கள் இந்த ஆண்டு மூன்று தீபாவளிகளைக் கொண்டாடுவார்கள். ஆண்டுதோறும் நடைபெறும் தீபத் திருவிழாவைத் தவிர, மத்தியப் பிரதேச தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையும், அயோத்தியில் ராம் லல்லா சிலை பிரதிஷ்டை செய்யப்படுவதையும் மக்கள் கொண்டாடுவார்கள்" என்றார்.