Watch Video: டெல்லியில் இடமாற்றம் செய்யப்பட்டது அமர் ஜவான் ஜோதி
டெல்லியில் கடந்த 2019ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட போர் நினைவுச்சின்ன விளக்குடன் அமர் ஜவான் ஜோதி இணைக்கப்படுகிறது.
டெல்லியில் இந்தியா கேட்டில் உள்ள அமர் ஜவான் ஜோதி என்கிற அணையா விளக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. முப்படை அதிகாரிகளின் மரியாதையுடன் போர் நினைவுச் சின்ன விளக்குகடன் அமர் ஜவான் ஜோதி இணைக்கப்பட்டது. டெல்லியில் கடந்த 2019ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட போர் நினைவுச்சின்ன விளக்குடன் அமர் ஜவான் ஜோதி இணைக்கப்படுகிறது.
அமர் ஜவான் ஜோதி, டெல்லி இந்தியா கேட்டில் கடந்த 50 ஆண்டுகளாக போரில் உயிர்நீத்த வீரர்களின் நினைவாக ஒளிரும் ஜோதி. இந்த ஜோதி அணைக்கப்பட்டு தேசிய போர் நினைவுச் சின்னத்துடன் இணைக்கப்பட்டது.
#WATCH | Delhi: Amar Jawan Jyoti flame at India Gate merged with the flame at the National War Memorial. pic.twitter.com/Nd1dnfvWYW
— ANI (@ANI) January 21, 2022
இந்தத் தருணத்தில் நாம் அமர் ஜவான் ஜோதியின் வரலாற்றை சற்று அறிந்து கொள்வோம்! "அமர் ஜவான்" என்றால் அழிவில்லாத படை வீரன் என்று பொருள். அந்தப் நினைவுச் சின்னத்தின் நான்கு பக்கங்களிலும் அமர் ஜவான் என்று தங்கத்தால் செதுக்கி வைக்கப்பட்டுள்ளது. அதன் உச்சியின் மீது எல் 1 ரக துப்பாக்கி நின்ற நிலையில் காணப்படுகிறது. அதில் அடையாளம் காணமுடியாத படை வீரர் ஒருவரின் தலைக்கவசமும் காணப்படுகிறது. இந்த பீடம் நான்கு அடுப்புகளால் பிணைக்கப்பட்ட நிலையில் அமைந்துள்ளது, அவற்றில் ஒன்று தொடர்ந்து எரியும் சுடரைக் கொண்டுள்ளது.
இது தான் வரலாறு:
1971 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் போரில் இந்தியா வெற்றி கண்டது. இந்தப் போர் தான் வங்கதேசம் உருவாகக் காரணமாக இருந்தது. இந்தப் போரில் உயிர் நீத்த வீரர்களின் நினைவாக அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் இந்த நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டது. 1972ல் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தின நாளன்று இந்திரா காந்தி இந்த அமர் ஜவான் நினைவுச் சின்னத்தை நிறுவினார். இந்த பீடம் நான்கு அடுப்புகளால் பிணைக்கப்பட்ட நிலையில் அமைந்துள்ளது. அவற்றில் ஒன்று தொடர்ந்து எரியும் சுடரைக் கொண்டுள்ளது. சுதந்திரம் தினம், குடியரசு தின நாளன்று இங்கு மற்ற ஜோதிகளும் ஏற்றப்படும். 2006 ஆம் ஆண்டுவரை எல்பிஜி கேஸ் மூலம் இந்த ஜோதி எரியச் செய்யப்பட்டது. அதன் பின்னர் இன்றுவரை பைப் மூலமாக இயற்கை எரிவாயு செலுத்தப்படுகிறது.
அணைக்கவில்லை..இணைக்கிறோம்:
அமர் ஜவான் ஜோதி அணைக்கப்படுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், ஜோதி அணைக்கவில்லை, இணைக்கப்படுகிறது என அரசு வட்டாரம் தெரிவிக்கின்றது. தேசிய போர் நினைவுச் சின்னம் 2019ல் நிறுவப்பட்டது. இதில் 1971 போர் மட்டுமல்ல அதற்கு முந்தைய போரில் உயிர் நீத்த அனைத்து வீரர்களின் பெயரும் பொரிக்கப்பட்டுள்ளது. இரண்டு அணையா ஜோதிகளை தொடர்ந்து பாதுகாப்பதில் உள்ள நடைமுறை சிக்கலாலேயே ஒரே ஜோதியாக ஐக்கியமாக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தின விழாவின்போது அமர் ஜவானில் பிரதமர் அஞ்சலி செலுத்துவது மரபு. ஆனால் கடந்த ஆண்டே பிரதமர் மோடி இந்த மரபை மாற்றிவிட்டார். இந்நிலையில் இந்த ஆண்டு குடியரசு நாளுக்கு முன்னதாகவே அமர் ஜவான் ஜோதி, போர் நினைவுச் சின்ன ஜோதியுடன் இணைக்கப்பட்டுள்ளது.