Aishwarya Rai| பனாமா பேப்பர் வழக்கு: ஐஸ்வர்யா ராயிடம் அமலாக்கத்துறை விசாரணை !
பனாமா பேப்பர் வழக்கில் நடிகை ஐஸ்வர்யா ராய் தற்போது அமலாக்கத்துறையில் நேரில் ஆஜராகியுள்ளார்.
வெளிநாடுகளில் சட்டவிரோதமாக முதலீடு செய்தவர்களின் பட்டியல் பனாமா பேப்பரில் வெளியானது. இந்த பட்டியலில் பிரபல நடிகையும், பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனின் மருமகளான ஐஸ்வர்யா ராய் பெயரும் இடம்பெற்றிருந்தது. பனாமா ஆவணங்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு ஐஸ்வர்யா ராய்க்கு சமமன் அனுப்பப்பட்டது. இந்த பட்டியலில் ஐஸ்வர்யா ராயின் சகோதரர் மற்றும் குடும்பத்தினர் பெயரும் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அமலாக்கத்துறை அளித்த சம்மனை ஏற்று நடிகை ஐஸ்வர்யா ராய் தற்போது அமலாக்கத்துறையில் நேரில் ஆஜராகியுள்ளார். அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணையை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, கடந்த 2016 ம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர்கள், செல்வந்தர் கள் பனாமா நாட்டில் கருப்பு பணத்தை முதலீடு செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, பனாமாவில் முதலீடு செய்தவர்களின் பெயர் பட்டியலை ஜெர்மனியை சேர்ந்த பத்திரிகை ஒன்று வெளியிட்டது. அதில், நடிகை ஜஸ்வர்யா ராய் உள்பட 500 பேரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தனர்.
Delhi | Aishwarya Rai Bachchan appears before the Enforcement Directorate in the Panama Papers case
— ANI (@ANI) December 20, 2021
(file photo) pic.twitter.com/LjpXyN0Ivp
இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம் பிரிவு 37ன் கீழ் கடந்த டிசம்பர் 9ஆம் தேதி மும்பையில் உள்ள ஐஸ்வர்யா ராயின் வீட்டிற்கு சம்மன் அனுப்பப்பட்டது. டிசம்பர் 20 ஆம் தேதி ஆஜராகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். ஆனால் அவர் ஆஜராகவில்லை. அவரது தரப்பில் இருந்து எவ்வித பதிலும் இல்லை. அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை முடிவெடுக்கும்” எனத் தெரிவித்தார்.
இதனிடையே ராஜ்யசபாவின் கேள்வி நேரத்தின் போது பதில் அளித்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி “பனாமா மற்றும் பாரடைஸ் பேப்பர்ஸ் ஊழல் வழக்குகளில், 2021 அக்டோபர் நிலவரப்படி, 930 இந்திய நிறுவனங்களின் 20,353 கோடி ரூபாய் கணக்கில் வராத வரவுகள் கண்டறியப்பட்டுள்ளன.முறைகேடில் ஈடுபட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது வருமான வரி சட்டம் மற்றும் கறுப்பு பண சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நேரடி வரிச் சட்டத்தின் கீழ் சோதனைகள் மற்றும் பறிமுதல், ஆய்வுகள், விசாரணைகள், வருமானத்தை மதிப்பீடு செய்தல் மற்றும் மறுமதிப்பீடு செய்தல், வட்டியுடன் வரி விதித்தல், அபராதம் விதித்தல், கிரிமினல் நீதிமன்றங்களில் வழக்கு தொடரும் புகார்களை பதிவு செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் அடங்கும். இதில், 153.88 கோடி ரூபாய் வரியாக வசூல் செய்யப்பட்டுள்ளன. பனாமா மற்றும் பாரடைஸ் பேப்பர்ஸ் ஊழலில் 52 வழக்குகள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், 130 வழக்குகளில் கறுப்பு பணம் மற்றும் வரி விதிப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: