Air Train Update: ஏர் ட்ரெயின் திட்டம் - நாட்டில் முதன்முதலில் எங்கு அமைகிறது தெரியுமா? அதுவும் இலவச சேவை?
Air Train Update: இந்தியாவில் விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ள ஏர் ட்ரெயின் திட்டம் தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
Air Train Update: நாட்டின் முதல் ஏர் ட்ரெயின் திட்டம் டெல்லியில் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது.
ஏர் ட்ரெயின் திட்டம்:
இந்தியாவின் முதல் ஏர் ட்ரெயின் திட்டம் டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில்(ஐஜிஐ), டெர்மினல்களுக்கு இடையிலான இணைப்பை மேம்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தானியங்கி அமைப்பை அடிப்படையாகக் கொண்டது. விமான நிலையத்தின் டெர்மினல் 2/3 மற்றும் 1ஐ இணைக்கும் 7.7 கிமீ நீளத்திற்கு, தானியங்கி முறையில் மக்கள் பயணிப்பதற்கான சேவை இதுவாகும்.
ஏர் ட்ரெயின் திட்டம் நோக்கம் என்ன?
உலகெங்கிலும் உள்ள பல விமான நிலையங்களில் பெரும்பாலும் ஸ்கை ரயில் என்று குறிப்பிடப்படும் ஏர் ட்ரெயின் சேவை பயன்பாட்டில் உள்ளது. இந்த ரயில் ஒரு தானியங்கி மக்கள் இயக்கம் (APM) அமைப்பின் உதவியுடன் இயங்குகிறது. இதன் முக்கிய நோக்கம் ஒரு முனையத்திலிருந்து மற்றொரு முனையத்திற்கு பயணிகளின் இயக்கத்தை எளிதாக்குவதாகும், இதன் மூலம் விமான நிலைய பயணிகள் ஒரு முனையத்தில் இருந்து மற்றொரு முனையத்திற்கு செல்ல எடுத்துக்கொள்ளும் நேரம் கணிசமாக குறைக்கப்படுகிறது.
திட்ட விவரம் என்ன?
இதுவரை வெளியாகியுள்ள தகவல்களின்படி, இந்தியாவின் முதல் ஏர் ட்ரெயின் சேவை 2028 ஆம் ஆண்டுக்குள் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் உயரமான டாக்ஸிவேயில் ஓடும் விமான ஓடுபாதைகளுக்கு அடியில் அமையும். டெல்லி சர்வதேச விமான நிலையம் லிமிடெட் (DIAL) 7.7 கிமீ தானியங்கி மக்கள் நகர்வு கட்டமைப்பு பணிகளுக்கான டெண்டர்களை வெளியிட்டுள்ளது..
ஏர் ட்ரெயின் சேவைக்கான ஓடுபாதையானது முதன்மையாக 5.7 கிமீ உயரத்திற்கு உயர்த்தி அமைக்கப்படும். அதனை தொடர்ந்து தரை மட்டத்தில் 2 கிமீ தூரத்திற்கு அமைக்கப்படும். தரைமட்டப் பகுதி ஓடுபாதையானது டெர்மினல் 1 க்கு முன் மற்றும் உயர்த்தப்பட்ட டாக்ஸிவேக்கு கீழே இருக்கும். ஏர் ட்ரெயின் சேவையை சரக்கு முனையத்துடன் இணைக்க சரக்கு நிலையத்தில் ஸ்கைவாக் திட்டமிடப்பட்டுள்ளது. மற்ற நாடுகளில் உள்ள ஏர் ட்ரெயின் சேவைகளில் பயணிகளுக்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை என்பதால், இந்தியாவிலும் டெர்மினல்களுக்கு இடையே பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் ஏர் ட்ரெயின் இலவசமாக கிடைக்கும் என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பட்ஜெட் விவரம்:
ஏர் ட்ரெயின் திட்டத்துக்கு ரூ.1,500-1,600 கோடி வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில், விமானப் போக்குவரத்து அமைச்சகம் திட்டத்திற்கு நிதியளிக்க பயணிகளிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்க அனுமதிக்கவில்லை, மேலும் விமான நிலைய இயக்க நிறுவனத்தை முதலில் ஏர் ட்ரெய்ன் சேவைக்கான உட்கட்டமைப்பு கட்டி எழுப்பவும், பின்னர் பயணிகளிடமிருந்து செலவை வசூலிக்கவும் அறிவுறுத்தியது. டெல்லி ஏர் ட்ரெயின் திட்டத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, சென்னை உள்ளிட்ட நாட்டின் பிற பிரதானா விமான நிலையங்களுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படலாம்.