Air Quality Life Index Report: ‛எய்ட்ஸை விட பயங்கரம்..உங்கள் வாழ்நாளில் 9 ஆண்டுகள் பறிபோகும் அபாயம்!’ - ஒரு அலர்ட்!
காற்று மாசு காரணமாக டெல்லி, கொல்கத்தா போன்ற நகரங்களில் வசிப்பவர்களது வாழ்நாள் எத்தனை ஆண்டுகள் வரை குறைகிறது தெரியுமா?
எய்ட்ஸ் நோயை விட காற்று மாசு ஏற்படுவதால்தான் மனிதர்களின் ஆயுள் வெகுவாகக் குறைவதாக அண்மையில் வெளியான காற்றுத் தரமதிப்பீட்டு அறிக்கை (Air Quality Life Index) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாட்டில் இயங்கிவரும் சுற்றுச்சூழல் அமைப்பான பூவுலகின் நண்பர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தற்பொழுது நிலவிவரும் காற்று மாசின் அளவுகள் அப்படியே தொடர்ந்தால், ஏற்கனவே மோசமான காற்று மாசுபாட்டில் உள்ள இந்தியப் பெருநகரங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் வாழ்நாளில் 9 ஆண்டுகளை இழக்க நேரிடும் என்கிறது அண்மையில் வெளியான AQLI (Air Quality Life Index ) ஆய்வறிக்கை.
உலக மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கு இருக்கும் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம் போன்ற நாடுகள் மிக மோசமாக காற்று மாசடைந்த நாடுகளின் பட்டியலில் தொடர்ச்சியாக முதல் ஐந்து இடங்களில் உள்ளன. உலகின் மிகவும் மாசுபட்ட 40 நகரங்களின் பட்டியலில் 37 நகரங்கள் தெற்காசியப் பிராந்தியத்தில்தான் உள்ளது. குறிப்பாக இந்த மிகவும் மோசமான காற்று மாசுபட்ட நகரங்களில் 185 கோடி மக்கள் வசிக்கிறார்கள். இவர்கள் தங்கள் ஆயுட்காலத்தில் சராசரியாக 5 ஆண்டுகளை இழப்பதாகவும், உலகம் முழுவதும் காற்று மாசு காரணமாக மனித ஆயுள் சராசரியாக 2.2 ஆண்டுகள் குறைவதாகவும், டெல்லி , கொல்கத்தா போன்ற இந்திய நகரங்களில் காற்று மாசு காரணமாக மனித ஆயுள் காலம் 9 ஆண்டுகள் வரை குறைவதாகவும் இந்த AQLI ஆய்வறிக்கை கூறுகிறது. இது சிகரெட் பிடித்தலை விட, காச நோய் அல்லது எய்ட்ஸ் போன்ற வியாதிகளை விட அதிகமாகப் பாதிப்பாகும்.
காற்றிலிருக்கும் நச்சு வாயுக்களைக் காட்டிலும் நுண் துகள்களை சுவாசிப்பத்தன்மூலமே மக்களின் ஆயுள் காலம் குறைவதாக இந்த ஆய்வறிக்கை கூறுகிறது. காற்றில் நுண்துகள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பது அனல் மின் நிலையங்கள் மற்றும் வாகனப் புகை, என்ற அடிப்படையில் இந்த காற்று மாசினால் ஏற்படும் உயிரிழப்புகள், புதைப்படிம எரிபொருள் பயன்பாட்டினால் உந்தப்படும் ஒரு பேராபத்தாக தான் கருதப்பட வேண்டும்.
இந்தியாவில் கடந்த இருபது ஆண்டுகளில் காற்றில் நுண்துகள்களின் பெருக்கம் அபாயகரமான அளவுகளில் நாடு முழுவதும் பரவலாக அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக வட இந்தியாவில் உள்ள 480 மில்லியன் மக்கள் உலகத்தில் பிற இடங்களில் இருப்பதைக் காட்டிலும் பத்து மடங்கு அதிக மாசடைந்த காற்றை சுவாசிக்கிறார்கள். வட இந்திய மாநிலங்கள் மட்டுமல்லாமல் தற்பொழுது மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வசிக்கும் மக்களும் தற்பொழுது நுண்துகள் காற்று மாசின் பேராபத்தால் தங்களில் வாழ்நாளில் 2.2 முதல் 2.9 வருடங்களை இழக்கிறார்கள் என்று இந்த ஆய்வறிக்கை எச்சரிக்கிறது.
இது நுண்துகள் அளவுகள் பல மடங்கு அதிகரித்துக் காணப்படும் சென்னைப் போன்ற தமிழக நகரங்களுக்கும் சேர்த்தே விடப்பட்டிருக்கும் எச்சரிக்கை ஆகும்.
சென்னையின் காற்றின் தரம் எப்படி இருக்கிறது?
இந்திய காற்று தர நிர்ணய அளவீட்டின் படி காற்றில் நுண்துகளின் அளவு 60 µg/m3 க்கு உள்ளாக இருத்தல் வேண்டும். இதுவே உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) காற்று தர நிர்ணய அளவீட்டின் படி 25 µg/m3 க்கு உள்ளாக இருத்தல் வேண்டும். ஆனால் சென்னையின் பல பகுதிகளில் நுண் துகளின் அளவு 60 µg/m3 அளவை விட அதிகமாக உள்ளதாக Health Energy Initiative நடத்திய ஆய்வின் முடிவில் நமக்கு தெரிகிறது.
குறிப்பாக திருவொற்றியூர், காசிமேடு, மீஞ்சூர், கொடுங்கையூர், வல்லூர், எண்ணூர், மணலி, அம்பத்தூர், தி.நகர், வேளச்சேரி, ஆகியப் பகுதிகளில் இந்த ஆய்வின் பொழுது நுண்துகள் 60 µg/m3 முதல் 128 µg/m3 வரை இருந்துள்ளன. அதே போல் பாரிமுனை , வியாசர்பாடி போன்ற பகுதிகளில் நுண்துகளில் அளவு 176 µg/m3 முதல் 228 µg/m3 வரை பதிவாகியுள்ளது.
சென்னையின் காற்றின் தரம் இப்படி இருக்கையில், நுண்துகளின் அளவை உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள 25 µg/m3 அளவுக்கு குறைத்தால் தற்பொழுது இருப்பதை விட மனித ஆயுளை 5 ஆண்டுகள் அதிகரிக்கலாம் என்று AQLI அறிக்கை வலியுறுத்துகிறது.
இது நடைமுறையில் சாத்தியமா என்ற கேள்விக்கு, சீனாவின் காற்று மாசுக்கு எதிரான நடவடிக்கைகள் நமக்கான பதிலாக நிற்கின்றன. 2013ம் ஆண்டு தொடங்கி காற்று மாசை சீன அரசு தீவிரமாக கட்டுப்படுத்தியதன் விளைவாகத் தற்பொழுது 29% வரை நுண்துகளைக் கட்டுப்படுத்தியுள்ளது. இதேப் போல இந்தியாவும் அனல் மின் நிலையங்கள் மற்றும் வாகனப் புகை ஆகியவற்றை கட்டுக்குள் கொண்டு வருமானால் இந்திய மக்களின் ஆயுட்காலமும் 5 ஆண்டுகள் அதிகரிக்க கூடும். இதற்கு பல்வேறு ஒருங்கிணைந்த காற்று மாசுக் குறைப்பு முன்னெடுப்புகள் தேவை என்றாலும் காற்று மாசு குறைக்க குறிப்பிட்ட சில துறை சார்ந்த கொள்கைகளை வகுப்பதும் இந்தியாவிற்கு அவசியாமாக உள்ளது. முக்கியமாக இந்தியாவின் மின் கொள்கை புதைப்படிம எரிசக்தியில் இருந்து புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கி மாறுவது தற்போதைய அவசரத் தேவையாக உள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள நகரங்களில் காற்றின் தரத்தை உயர்த்த அரசு உடனடியாக செய்ய வேண்டியவை:
1. வருடத்தில் 130 நாட்களுக்கு மேல் காற்றின் தரம் மோசமான நிலையில் உள்ள சென்னை நகரத்தையும் ஒன்றிய அரசின் NCAP-National Clean Air Program திட்டத்தின் கீழ் இணைக்க வேண்டுமென தமிழக அரசு கோரிக்கை வைக்க வேண்டும்.
2. காற்றை மாசுப்படுத்தும் நுண் துகள்கள், சாம்பல்கள், சல்பர் டை ஆக்சைட், நைட்ரஜன் ஆக்சைடு போன்ற நச்சு வாயுக்களை அதிக அளவில் வெளியிடும் அனல் மின்நிலையங்களைப் படிப்படியாக மூடுவதற்கான முயற்சிகளையும் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தியில் இருந்து தமிழ்நாட்டின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதை நோக்கிய முன்னெடுப்புகளை எடுக்க வேண்டும்.
3. எண்ணூர்-மணலி தொழிற்பேட்டையில் மேலும் தொழிற்சாலைகளை புதிதாக அமைக்கவோ, விரிவாக்கம் செய்யவோ தடை விதிக்க வேண்டும். சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் காற்று மாசுப்படுத்தும் தொழிற்சாலைகளைக் கண்டறிந்து அதனை குறைக்கும் நடவடிக்கைகளை தமிழ்நாட்டு மாசுக்கட்டுபாட்டு வாரியம் எடுக்க வேண்டும். சென்னையில் புதிதாகக் காற்று மாசுப்படுத்தும் எந்தத் தொழிற்சாலைகளுக்கும் அனுமதி வழங்கப்படாது என்று அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.
4. காற்று மாசைக் கண்காணிப்பதற்கும் அதைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளுக்கு நிதிநிலையில் (budjet) அதிக நிதி ஒதுக்க வேண்டும். காற்று மாசை கண்காணிக்கும் தொடர் கண்காணிப்பு நிலையங்களின் (Continuous Monitoring Stations) எண்ணிக்கையினை அதிகரிக்க வேண்டும்.
5. அரசு நகரத் திட்டமிடுதலின் பொழுது காலநிலை மாற்றம், அப்பகுதியின் தட்பவெட்பம், புவியியல், மக்கள் தொகை, போக்குவரத்து, அதனால் உண்டாகும் மாசு ஆகியவற்றை கணக்கில் கொண்டு சென்னை மற்றும் அதன் துணை நகரங்களை விரிவாக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
6. சென்னை தனிநபர் வாகன பயன்பாட்டினை குறைக்கப் பொதுப் போக்குவரத்தை மேலும் மேம்படுத்த வேண்டும். சென்னை மெட்ரோ ரயில் கட்டணக் குறைப்பு, பாதுகாப்பான சாலைகள், முக்கிய வழித்தடங்களில் அதிக அரசு பேருந்துகளை இயக்குவது போன்ற வாகனப் புகை குறைக்கும் வழிமுறைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
இந்த முன்னெடுப்பகுகள் காற்றுமாசுபாட்டைக் குறைத்து மக்களின் உடல்நலனையும் ஆயுளையும் அதிகரிப்பதோடு நீண்ட கால அளவில் சுகாதாரத்திற்காக அரசு செய்யும் செலவீனங்களின் சுமையைக் குறைக்கும்.
Also Read: உமேஷ் 150: விக்கெட்டோடு தொடங்கிய இந்தியா... டிக்கெட் வாங்கும் இங்கிலாந்து! 2ம் நாள் ஆட்டம் பரபர!