Air India: லட்சம் கோடிகளை கொட்டும் டாடா நிறுவனம், வான்பரப்பை ஆக்கிரமிக்க திட்டம் - களமிறங்கும் 100 விமானங்கள்
Air India: டாடா குழுமத்தின் கீழ் இயங்கும் ஏர் இந்தியா நிறுவனம் புதியதாக 100 விமானங்களை கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளது.
Air India: டாடா குழுமத்தின் கீழ் இயங்கும் ஏர் இந்தியா நிறுவனம், ஏர் பஸ் நிறுவனத்திடம் இருந்து 100 விமானங்களை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
100 விமானங்களை கொள்முதல் செய்யும் ஏர் இந்தியா:
டாடா குழுமத்தால் இயக்கப்படும் ஏர் இந்தியா, ஐரோப்பிய தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 100 விமானங்களுக்கான கூடுதல் ஆர்டரை திங்களன்று அறிவித்தது. இதில் 90 குறுகிய-உடல் A320 குடும்ப விமானங்கள் மற்றும் 10 அகல-உடல் A350 விமானங்கள் ஆகியவை அடங்கும். இந்த கொள்முதல் திட்டமானது கடந்த ஆண்டு செய்த 470-விமான ஆர்டரின் தொடர்ச்சியாக அமைகிறது. ஏர்பஸ் A320 விமானத்தின் தொடக்க விலை ரூ. 856 கோடி, ஏர்பஸ் A350 விமானத்தின் தொடக்க விலை ரூ.2,700 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி 2023 இல், ஏர்பஸ்ஸிலிருந்து 250 மற்றும் போயிங்கிலிருந்து 220 விமானங்களைக் கொண்ட உலகின் இரண்டாவது பெரிய விமான ஆர்டரை ஏர் இந்தியா செய்தது. அந்த நேரத்தில், அந்த நிறுவனத்தின் தலைமை வணிக மற்றும் உருமாற்ற அதிகாரியாக இருந்த, நிபுன் அகர்வால், விமான நிறுவனம் மேலும் 370 விமானங்களுக்கான விருப்பங்களைப் பெற்றுள்ளதாகவும், மொத்த ஆர்டரை 840 விமானங்களாக உயர்த்த முடிவு செய்துள்ளதாக கூறினார். அதில் 470 ஃபிர்ம் ஆர்டர்கள் மற்றும் 370 விமானங்களை ஆப்ஷனாக வைத்திருப்போம் என்றும் தெரிவித்தார்.
ஏர்பஸ் நிறுவன ஒப்பந்தம்:
விமான நிறுவனம் இப்போது அதன் ஏர்பஸ் ஆப்ஷனின் ஒரு பகுதியைப் பயன்படுத்தியுள்ளது. டாடா சன்ஸ் மற்றும் ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் நடராஜன் சந்திரசேகரன் இதுகுறித்து தெரிவிக்கையில், “இந்தியாவின் பயணிகள் வளர்ச்சி உலகின் பிற நாடுகளை விட அதிகமாக உள்ளது, அதன் உள்கட்டமைப்பை கணிசமாக மேம்படுத்துவது மற்றும் ஆர்வமுள்ள இளைஞர்கள் அதிகரித்து வருவதால், ஏர் இந்தியா தனது எதிர்காலத்தை விரிவுபடுத்துவதற்கான தெளிவான சூழ்நிலையை நாங்கள் காண்கிறோம். இந்த கூடுதல் 100 ஏர்பஸ் விமானங்கள் ஏர் இந்தியாவை அதிக வளர்ச்சிக்கான பாதையில் நிலைநிறுத்த உதவுவதோடு, உலகின் ஒவ்வொரு மூலையிலும் இந்தியாவை இணைக்கும் உலகத் தரம் வாய்ந்த விமான நிறுவனமாக ஏர் இந்தியாவை உருவாக்கும் எங்கள் பணிக்கு பங்களிக்கும்" என்று தெரிவித்தார்.
ஏர் இந்தியா அறிக்கை:
ஏர் இந்தியா குழுமம் அதிகாரப்பூர்வ அறிக்கையில், "100 கூடுதல் விமானங்களுக்கான ஆர்டருடன், ஏர் இந்தியா தற்போது மொத்தம் 344 புதிய விமானங்களை ஏர்பஸ்ஸிலிருந்து உள்வாங்கியுள்ளது, இதுவரை ஆறு ஏ350 விமானங்களைப் பெற்றுள்ளது. ஏர் இந்தியா 2023 இல் 220 ஆர்டர்களை வழங்கியது. போயிங்குடன் கூடிய பரந்த-உடல் மற்றும் குறுகிய-உடல் விமானங்கள், அவற்றில் 185 விமானங்கள் விரைவில் நிறுவனத்துடன் இணைய உள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா, முழு-சேவை கேரியர் மற்றும் அதன் குறைந்த கட்டண துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகியவை தற்போது முறையே சுமார் 210 மற்றும் 90 விமானங்களை இயக்குகின்றன. கடந்த மாதம், ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் கேம்ப்பெல் வில்சன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”ஏர் இந்தியா குழுமத்தின் மொத்த விமானங்களின் எண்ணிக்கை 2027 க்குள் 300 லிருந்து 400 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என தெரிவித்தார்.