ஏர் இந்தியாவுக்கு நேரம் சரி இல்ல! டெக் ஆப் செய்வதற்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட கோளாறு.. பதற்றம்
மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது ஏர் இந்தியா விமானம். ஹிண்டன் விமான நிலையத்திலிருந்து புறப்படவிருந்த விமானம் (விமான எண் - IX 1511), ஓடுபாதையில் நின்று கொண்டிருந்தபோது எதிர்பாராத தொழில்நுட்பக் கோளாறை சந்தித்தது.

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமான நிலையத்திலிருந்து மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவுக்குச் செல்லவிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்படுவதற்கு சற்று முன்பு அடையாளம் காணப்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று தாமதமானது.
ஏர் இந்தியாவுக்கு நேரம் சரி இல்ல!
ஏர் இந்தியா விமான நிறுவனம் மீது பயணிகள் புகார் கூறுவது தொடர் கதையாகி வருகிறது. உடைந்த இருக்கைகள், தாமதமான விமானங்கள் உள்பட பல காரணங்களால் ஏர் இந்தியா விமான நிறுவனம் பெரும்பாலும் பயணிகளிடமிருந்து விமர்சனங்களை எதிர்கொள்கின்றன.
சமீபத்தில் கூட, தனக்கு உடைந்த இருக்கையை ஒதுக்கியதற்காக மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானின் கோபத்தை ஏர் இந்தியா எதிர்கொண்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக, கடந்த வியாழக்கிழமை, அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புறப்படவிருந்த ஏர் இந்தியா விமானம், டெக் ஆப் செய்த 40 வினாடிகளில் கீழே விழுந்து நொறுங்கியதில் 241 பயணிகளும், விமானம் மோதியதில் 33 பேரும் என 274 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் உலக நாடுகள் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
டெக் ஆப் செய்வதற்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட கோளாறு:
இந்த நிலையில், மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது ஏர் இந்தியா விமானம். ஹிண்டன் விமான நிலையத்திலிருந்து புறப்படவிருந்த விமானம் (விமான எண் - IX 1511), ஓடுபாதையில் நின்று கொண்டிருந்தபோது எதிர்பாராத தொழில்நுட்பக் கோளாறை சந்தித்தது.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக டெக் ஆப் செய்யாமல் ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது. இந்த விமானம் முதன்மையாக பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. சமீபத்தில்தான், பயணிகள் சேவைக்கு விடப்பட்டது.
விமானத்தில் பதற்றம்:
ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், தாமதத்தை ஒப்புக்கொண்டு, பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக ஒரு அறிக்கையை வெளியிட்டது.
விமானம் ஓடுபாதையில் தரையிறங்கி, புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தபோது, கடைசி நிமிடத்தில் தொழில்நுட்ப கோளாறு விமானக் குழுவினரால் கண்டறியப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறின் தன்மை உடனடியாக வெளியிடப்படவில்லை. ஆனால் நிலைமையை மதிப்பிடுவதற்கு பொறியாளர்கள் அழைக்கப்பட்டனர். இதனால் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.
இதுகுறித்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செய்தி தொடர்பாளர் கூறுகையில், "முதலில் ஒதுக்கப்பட்ட விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, எங்கள் ஹிண்டன்-கொல்கத்தா விமானம் தாமதமாக இயக்கப்பட்டது. விருந்தினர்களுக்கு மாற்று விமானம் அல்லது முழு கட்டணமும் திரும்ப அளிக்கப்பட்டது. சிரமத்திற்கு வருந்துகிறோம்" என்றார்.




















