(Source: ECI/ABP News/ABP Majha)
Agriculture Budget 2024: பால் உற்பத்தியாளர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்... பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு
Agriculture Budget 2024 Highlights: அடிப்படைத் தேவைகளை வழங்குவதன் மூலம் கிராமப்புறங்களில் வருமானம் அதிகரித்துள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான அரசு, தனது கடைசி மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்துள்ளது. தேர்தல் நடக்கவிருப்பதால் முழு பட்ஜெட்டுக்கு பதில் இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார்.
சவால்களை சந்தித்து வரும் வேளாண் துறை:
தீவிர காலநிலை மாற்றங்களாலும், பருவநிலை மாற்றம் ஏற்படுத்தி வரும் தாக்கத்தாலும், பணவீக்கத்தாலும் விவசாயத்துறை பெரும் சவால்களை சந்தித்து வருகிறது. எனவே, தேர்தலுக்கு முன்பாக, விவசாயத்திற்கு சிறப்பு திட்டங்கள் ஏதேனும் அறிவிக்கப்படுமா என பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியது.
அந்த வகையில், பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அவ்வப்போது உரிய முறையில் உயர்த்தப்பட்டு வருகிறது. அடிப்படைத் தேவைகளை வழங்குவதன் மூலம் கிராமப்புறங்களில் உண்மையான வருமானம் அதிகரித்துள்ளது. விவசாயிகளின் வருமானம் அதிகரிக்க புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஒரே பாரதம் வளமான பாரதம் என்ற தாரக மந்திரத்துடன் சவால்களை அரசாங்கம் முறியடித்தது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "நமக்கு விவசாயிகள்தான் உணவு அளிக்கின்றனர். சிறு, குறு விவசாயிகள் உட்பட 11.8 கோடி விவசாயிகளுக்கு நேரடி பணப் பரிமாற்றம் மூலம் உதவி வழங்கப்படுகிறது. 4 கோடி விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்கப்படுகிறது.
பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்:
நமது செழுமை என்பது இளைஞர்களை ஆயத்தப்படுத்துவதையும், அவர்களை மேம்படுத்துவதையும் சார்ந்துள்ளது. அனைத்து திசைகளிலும் ஏற்பட்டுள்ள வளர்ச்சியின் தாக்கம் தெளிவாக தெரிகிறது. மேக்ரோ பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மை உள்ளது. முதலீடுகள் வலுப்பெற்றுள்ளன. பொருளாதாரம் நன்றாக உள்ளது. எதிர்காலத்திற்கான உயர்ந்த லட்சியங்களுடன் மக்கள் சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளில், அரசின் நிர்வாகம் மக்களை மையப்படுத்தி இருந்தது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை பூர்த்தி செய்துள்ளது. தொற்றுநோயால் உலகில் உணவு, உரம், எரிபொருள் மற்றும் நிதி நிலைமையில் நெருக்கடி ஏற்பட்டது. அதே நேரத்தில் இந்தியா வெற்றிப்பாதையில் சென்றது.
கரீப் கல்யாண் யோஜனா திட்டம் என்பது தேசிய திட்டம். ஏழை, பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் ஆகி.ய நான்கு தூண்களில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது. பிரதம மந்திரி ஃபசல் பீமா யோஜனா மூலம் 4 கோடி விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது" என்றார்.
பால் பண்ணையாளர்களை ஆதரிப்பதற்கும், கால்நடைகளுக்கு கால் மற்றும் வாயில் ஏற்படும் நோயைக் கட்டுப்படுத்துவதற்கும் விரிவான திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.