(Source: ECI/ABP News/ABP Majha)
Agnipath Scheme: பற்றியெரியும் இந்தியா: அக்னி பாதையா, அழிவுப் பாதையா?- அப்படி என்னதான் இருக்கிறது?- முழு விவரம்
பற்றி எரியும் போராட்டங்களுக்கு மத்தியில், அக்னி பாதை திட்டத்தை அறிமுகம் செய்ததற்காகப் பிரதமர் மோடிக்கு, அமைச்சர் அமித் ஷா நன்றி தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவ வீரர்களைத் தேர்வு செய்வதற்காக, அக்னிபத் என்று இந்தியில் அழைக்கப்படும் ‘அக்னி பாதை’ என்ற புதிய திட்டத்தை பாஜக தலைமையிலான மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதற்கா மத்திய அமைச்சரவை, ஜூன் 14 ஆம் தேதி ஒப்புதல் அளித்தது.
அக்னி பாதை திட்டத்தின்கீழ் சேரும் வீரர்கள், அக்னி வீரர்கள் (அக்னி வீர்) என்று அழைக்கப்படுவார்கள் எனவும் இந்த வீரர்கள் மொத்தம் 4 ஆண்டுகள் இந்திய ராணுவத்தின் முப்படை எனப்படும் தரைப் படை, கப்பல் படை, விமானப் படைகளில் பணியாற்றுவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அக்னி பாதை திட்டம்: ஒரு பார்வை
இந்தியா முழுவதும் அனைத்து வகுப்புகளிலும் இருந்து 46 ஆயிரம் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். 90 நாட்களுக்குள் அக்னி வீரர்கள் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது மொத்த ராணுவப் படைகளில் 3 சதவீதம் மட்டுமே. இதனால் ராணுவத்தின் பிற பிரிவினருக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அக்னி வீரர்களுக்கு 4 ஆண்டுகள் பணி
17.5 வயது முதல் 23 வயது வரையிலான ஆண்களும் பெண்களும் அக்னி பாதை திட்டத்தில் சேரலாம். ஏற்கெனவே உள்ள கல்வித் தகுதி, உடல் தகுதி நடைமுறைகள் பின்பற்றப்படும்.
அக்னிபத் திட்டத்தில் இணைபவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். பின்னர் 4 ஆண்டுகளுக்கு அக்னி வீரர்கள் பணியாற்றுவர். அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை ஊதியம் அளிக்கப்படும். அதுமட்டுமின்றி, மருத்துவ மற்றும் காப்பீட்டு பலன்கள் வழங்கப்படும். 4 ஆண்டுகால சேவைக்குப் பிறகு, பணிக்கால செயல்திறன் அடிப்படையில், அதிகபட்சமாக 25% பேர் இந்திய ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவர். 4 ஆண்டு காலப் பணிக்குப் பிறகு வெளியேறும் வீரர்களுக்கு, சேவை நிதியும் திறன் சான்றிதழும் வழங்கப்படும்.
என்ன ஊதியம்?
ஆண்டு ஊதியம் | பிடித்தம் போக கைக்குக் கிடைப்பது | வீரர்களிடம் பிடித்தம் செய்வது | அரசு செலுத்துவது |
முதல் ஆண்டு - ரூ.30,000 | ரூ.21,000 | ரூ.9000 | ரூ.9000 |
2 ஆம் ஆண்டு- ரூ.33,000 | ரூ.23,100 | ரூ.9,900 | ரூ.9,900 |
3 ஆம் ஆண்டு- ரூ.36,500 | ரூ.25,580 | ரூ.10,950 | ரூ.10,950 |
4 ஆம் ஆண்டு- ரூ.40,000 | ரூ.28,000 | ரூ.12,000 | ரூ.12,000 |
மொத்தம் | ரூ.5.02 லட்சம் | ரூ.5.02 லட்சம் |
அக்னி வீரர்களின் நிதியும், மத்திய அரசு நிதியும் வட்டியுடன் சேர்த்து ரூ.11.71 லட்சம் அளிக்கப்படும்.
பிற பயன்கள்
பங்களிப்பு இல்லாத ரூ.48 லட்சம் மதிப்பிலான காப்பீட்டுத் தொகை அளிக்கப்படும். பணியின்போது மரணமடைந்தால் ரூ.44 லட்சம் வழங்கப்பட உளது.
மத்திய அரசு என்ன சொல்கிறது?
அக்னிபத் ஆள்சேர்ப்புக் கொள்கையின் முக்கிய நோக்கம், இந்திய ராணுவத்தில் அதிகரித்து வரும் ஊழியர்களுக்கான ஊதியத்தையும், ஓய்வுதியச் செலவுகளையும் குறைப்பதுதான் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து, அக்னிபத் திட்டத்தின் மூலம் ராணுவத்தில் பணியாற்றும் இளைஞர்களின் துடிப்பும், திறமையும் பயன்படுத்திக்கொள்ளப்படும் என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் தகுதி அடிப்படையில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இதன்மூலம் தகுதி உள்ளோருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய திட்டம் பல்வேறு உலக நாடுகளில் உள்ளதுதான் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இஸ்ரேல், சீனா, அமெரிக்கா, ஃப்ரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளின் ராணுவ மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டு, அக்னிபத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தது.
அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், பாஜக எம்.பி. வருண் காந்தி உள்ளிட்ட பலர் அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இந்தியா இரு முனைகளில் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வேளையில், இது தேவையற்ற நடவடிக்கை என்று ராகுல் விமர்சித்துள்ளார்.
மேலே குறிப்பிட்ட காரணிகளால், பிஹார், ஹரியானா, ஜார்க்கண்ட் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் வன்முறை கொப்பளித்துள்ளது. ரயில்களுக்குத் தீ வைக்கப்பட்டு வருகின்றன. போராட்டக்காரர்கள் பிஹாரில் சாலையிலும் தண்டவாளத்திலும் டயர்களைக் கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சில இடங்களில் பேருந்துகளை அடித்து நொறுக்கி வன்முறையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், நாடு முழுவதும் 200-க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. 50-க்கும் மேற்பட்ட ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
என்ன சர்ச்சை? ஏன் போராட்டம்?
இதன்படி, வருங்காலத்தில் இந்திய ராணுவத்தில் 25 சதவீதம் பேர் மட்டுமே நிரந்தரப் பணி வாய்ப்பு பெறுவர். 75 சதவீதத்தினர் வெளியேற்றப்படுவர் என்று எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. அதேபோல இந்திய ராணுவத்துக்கு உடலளவிலும் மனதளவிலும் கடுமையாகத் தயாராகும் இளைஞர்களை, 4 ஆண்டுகள் பணி என்பது ஏமாற்றத்தை ஏற்படுத்தும். ராணுவ வீரர்களின் துணிச்சல், தைரியத்தைக் குலைக்கும் என்றும் மூத்த ராணுவ வீரர்கள் கூறுகின்றனர்.
4 ஆண்டுகளுக்குப் பிறகு எங்களுடன் பள்ளிப் படிப்பை முடித்தவர்கள் எல்லாம் கல்லூரிப் படிப்பையும் முடித்து வேலைக்குச் செல்வர். அந்த நேரத்தில், நாங்கள் ராணுவ வேலையில் இருந்து வெளியேற்றப்பட்டு, வீடு திரும்ப முடியுமா என்று ஏற்கெனவே ராணுவத்துக்குத் தயாராகி வரும் இளைஞர்கள் கொந்தளிக்கின்றனர்.
அதேபோல 4 ஆண்டு கால தற்காலிக, ஒப்பந்த அடிப்படையில் சேரும் பணிக்காக, நாங்கள் எதற்குக் கடினமாக உழைத்துத் தயாராக வேண்டும், எங்களின் வயதைத் தொலைத்துவிட்டு என்ன செய்ய முடியும் எனவும் இளைஞர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
ராணுவத்தை வெறும் சம்பளம் தரும் பணியாகப் பார்க்காமல், வாழ்நாள் கனவாகப் பார்ப்போருக்கும் 4 ஆண்டுகாலப் பணி அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
4 ஆண்டுகள் பணிக்காலத்தை முடித்த இளைஞர்களுக்கு, குறைந்தபட்சமாக 21.5 வயதுக்குப் பிறகும் அதிகபட்சமாக 27.5 வயதுக்குப் பிறகும் உயர்கல்வி என்பது எட்டாக் கனியாகி விடும்.
தமிழ்நாட்டிலும் போராட்டம்
வட மாநிலங்களில் உருவான வன்முறை, தென் மாநிலங்களுக்கும் பரவி உள்ளது. தெலங்கானா மாநிலம், செகந்திராபாத்தில் இன்று ரயிலுக்குத் தீ வைக்கப்பட்டது. தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் இளைஞர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தேசியக் கொடியுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சியில் இன்று அதேபோன்று தேசியக் கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களைக் காவல்துறை கைது செய்தது.
நாளுக்கு நாள் போராட்டத் தீ அனைத்து திசைகளுக்கும் பரவி வருகிறது. இதற்கிடையே பீகார் பாஜக அலுவலகத்துக்கு 500-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் சேர்ந்து இன்று தீ வைத்துக் கொளுத்தி உள்ளனர். ஹரியானாவில் இன்று (ஜூன் 17) மாலை 5.30 மணியில் இருந்து அடுத்த 24 மணி நேரத்திற்கு இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.
பற்றி எரியும் போராட்டங்களுக்கு மத்தியில், அக்னி பாதை திட்டத்தை அறிமுகம் செய்ததற்காகப் பிரதமர் மோடிக்கு, அமைச்சர் அமித் ஷா நன்றி தெரிவித்துள்ளார். விமானப் படைகளுக்கான ஆட்சேர்ப்பு அக்னி பாதை திட்டத்தின்கீழ் ஜூன்24ஆம் தேதி தொடங்கும் என்று விமானப் படை தலைமை தளபதி வி.ஆர்.சவுத்ரி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இளைஞர்களுக்கு குறிப்பிட்ட கால கட்டாய ராணுவப் பயிற்சி என்பது அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இருக்கும் ஒன்றுதான். ஆனால் அதுவும் படிப்படியாக நீக்கப்பட்டு வருகிறது. அப்படி பயிற்சி தரும் நாடுகளில்கூட இளைஞர்களுக்கான எதிர்காலம், அவர்களின் உயர் கல்வி வாய்ப்புகள் உறுதி செய்யப்படுகின்றன.
அப்படி எந்த உறுதியுமே இல்லாமல், அக்னிபத் திட்டத்தைக் கொண்டு வருவது உயர் கல்வியைப் பெருமளவில் பாதிக்கும். இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதை அரசு கருத்தில்கொள்ள வேண்டும்.