75 வருட சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக மின்சாரம் பெறும் கிராமம் இது; மகிழ்ச்சியில் கண்ணீர் சிந்தும் மக்கள்..
சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்குப்பிறகு ஒரு கிராமத்திற்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
மின்சாரம் என்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. அதிலும், குறிப்பாக அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்றபடி மனிதர்களது வாழவினை அமைத்துக் கொள்ள மின்சாரம் அடிப்படையாக உள்ளது. ஒட்டு மொத்த இந்தியாவின் பெரும்பான்மை பகுதி 5ஜி நெட்வொர்க்கிற்கு தயாராகிக்கொண்டு இருக்கையில், ஒரு கிராமத்திற்கு இப்போது தான் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது என்ற நிலையையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது.
தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள தூரு பிளாக்கில் உள்ள டெத்தனில் பழங்குடியினர் வசிக்கும் ஒரு குக்கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு மின் இணைப்பு இந்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. நகரத்தில் இருந்து தொலைதூரத்தில் உள்ள கிராமத்திற்கு மத்திய அரசு வழங்கும் பிரதமர் மேம்பாட்டுத் தொகுப்பு திட்டத்தின் கீழ் தற்போது மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
அனந்த்நாக் மலையில் அமைந்துள்ள டெதன் கிராமத்தில் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக முதல் மின் விளக்கு எரிந்ததால் அந்த குக்கிராமத்தில் வசிப்பவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். கடந்த 75 ஆண்டுகளாக, இந்த கிராம மக்கள் தங்கள் தேவைக்காக மரத்துண்டுகளையே நம்பியிருக்க வேண்டி இருந்தது. இதோடு எண்ணெய் விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்தியை பயன்படுத்தி வந்துள்ளனர்.
இதுகுறித்து அந்த கிராமத்தினைச் சேர்ந்த ஃபசுல்-உ-தின் கான் கூறுகையில், "இன்று முதல் முறையாக மின்சாரத்தைப் பார்த்தோம். எங்கள் குழந்தைகள் இப்போது மின்சார வெளிச்சத்தில் படிப்பார்கள். அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். மின்சாரம் இல்லாததால் பல பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. இதுவரை எங்களின் தேவைகளுக்கு மரத்தையே நம்பியிருந்தோம். தற்போது எங்களது பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுள்ளன. மின்சாரம் வழங்கியதற்காக அரசு மற்றும் சம்பந்தப்பட்ட துறைக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என அவர் கூறினார்.
மற்றொரு கிராமவாசி ஜாஃபர் கான் என்பவர் கூறுகையில், "எனக்கு 60 வயதாகிறது. இன்று தான் முதல் முறையாக மின்சாரத்தைப் பார்த்தேன். எல்.ஜி. சஹாப் மற்றும் டி.சி. சஹாப் ஆகியோருக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருப்போம். மின்சாரத் துறைக்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம். முந்தைய தலைமுறையினரால் முடியவில்லை. மின்மயமாக்கலின் அதிசயத்தைப் பாருங்கள், இன்று அரசாங்கம் மின்சாரம் வழங்கியது எங்களுக்கு அதிர்ஷ்டம்" என அவர் கூறினார்.
மின்சாரத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அயராத முயற்சியால், அனந்த்நாக் நகரத்திலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தக் கிராமத்துக்கு மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: விரைவு நடவடிக்கை மூலம் கிராமத்திற்கு மின்சாரம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அனந்த்நாக் மின் மேம்பாட்டுத் துறையின் தொழில்நுட்ப அதிகாரி ஃபயாஸ் அஹ்மத் சோஃபி ANI இடம் கூறுகையில், "நாங்கள் 2022-ல் நெட்வொர்க்கிங் செயல்முறையைத் தொடங்கினோம். ஆனால் உயர் அழுத்தக் கம்பியைத் இணைப்பதில் சிக்கல் இருந்தது. ஆனால் இன்று இந்த தொலைதூர பகுதிக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இங்கு 63 (KV) டிரான்ஸ்ஃபார்மர் உள்ளது. இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் 75 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக மின்சாரத்தைப் பார்த்துள்ளனர், இதுவே எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்த கிராமத்தில் ஒரு டிரான்ஸ்ஃபார்மர், 38 உயர் அழுத்தக் கம்பங்கள் மற்றும் 57 மின்சாரக் கம்பங்கள் (மொத்தம் 95 மின்கம்பங்கள்) நிறுவப்பட்டு, 60 வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது, எனவும் அவர் கூறினார்.