News Wrap - Abpநாடு | பள்ளிகளுக்கு விடுமுறை..இந்தியா - நியூசி., முதல் டெஸ்ட் டிரா..இன்றைய முக்கியச் செய்திகள்..
News Wrap - Abpநாடு | இன்றைய (29.11.2021) முக்கிய செய்திகளின் தொகுப்பு!
தமிழ்நாடு:
1. நிலநடுக்க தேசிய மையம்(NCS) வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், " வேலூர் மாவட்டத்தில் இருந்து மேற்கு - தென்மேற்கு திசையில் 59 கி.மீ தொலைவில் லேசான நிலநடுக்கம் எற்பட்டது" என்று தெரிவித்தது.
2. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3. எழுவர் விடுதலை தொடர்பான எந்தவொரு அரசாணையும் வெளியிடப்படவில்லை. எனவே,விடுதலை செய்யக் கோரும் நளினியின் மனு சட்டப்படி செல்லாது" என்று தமிழ்நாடு அரசு தெரிவித்தது.
4. தொடர் மழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா:
1. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில், இன்று கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது அமளியில் ஈடுபட்ட 12 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
2. கிரிப்டோகரன்சியை பணமாக அங்கீகரிக்கும் திட்டம் ஏதுமில்லை என்று நாடாளுமன்ற கூட்டத்தில் மத்திய அரசு அறிவித்துள்ளது.
உலகம் :
1. தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றின் புதிய உருமாற்ற ஓமைக்ரான் தொற்று ( பி.1.1529) கவலைக்குரியது என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. கவலையளிக்கக் கூடிய வகை என்றால், பரவும் வேகம் தீவிரமாக இருக்கும் என்று பொருள். உலக முழுவதிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ஓமைக்ரான் தொற்று குறித்து ஆய்வு மேற்கொண்டு வந்தாலும், அதன் தீவிரத்தன்மை தன்மை பற்றி முழுமையாக தெரியவில்லை என உலக சுகாதார மையம் தற்போது தெரிவித்துள்ளது.
2. தாஜ்மகாலை விடப் பெரிய அளவிலான எரிகல் ஒன்று விண்கல் பூமியின் வட்டப்பாதையை நோக்கி வருவதாக நாசா தெரிவித்துள்ளது. இங்கிலாந்தின் பிக் பெண் கடிகாரத்தை விட இரண்டு மடங்கு பெரிய இந்தக் கல் சுமார் 430 அடி உயரம் கொண்டது. இது பூமியின் வட்டப்பாதையை நோக்கித் தற்போது நகர்ந்துகொண்டிருப்பதாக அதனைக் கண்காணிக்கும் நாசா தெரிவித்துள்ளது. இது மோதும் நிலையில் வெளிப்படும் ஆற்றல் அணு ஆயுதத்தை விட பலமடங்கு இருக்கும் என நாசா குறிப்பிட்டுள்ளது.
குற்றம்:
1. கர்நாடகாவில் ஒரு டாக்டர் பெண்கள் சிலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவியது. இதனைத்தொடர்ந்து, மங்களூரு காவல் துறையினர் பணியிடத்தில் தனது சக பெண் ஊழியர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய அரசு மருத்துவரை கைது செய்தனர்.
2. கேளம்பாக்கத்தில் உள்ள சுஷீல்ஹரி இன்டர்நெஷனல் பள்ளியின் நிறுவனரான சிவசங்கர் பாபா மீது பல்வேறு மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்ததன் அடிப்படையில் அவர் மீது அடுத்தடுத்ததாக போக்சோ வழக்குகள் பாய்ந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று சிவசங்கர் பாபாவின் ரகசிய அறையை திறந்து சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சிவசங்கர் பாபாவின் கைரேகை பதிவை வைத்து அவருடைய ரகசிய அறையை காவல்துறையினர் ஜெய்சங்கர் பாபாவை நேரில் அழைத்து வந்து கதவைத் திறந்து பரிசோதித்தனர் .
சினிமா:
1. மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின் கூட்டணியில் உருவாக உள்ள புதிய படத்தில் வைகைப் புயல் வடிவேலு இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2. அஜித் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடைப்பெற்று வருகிறது. இந்த சூழலில் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரும் படம் வருகிற பொங்கல் பண்டிகையை ( ஜனவரி, 2022) முன்னிட்டு வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். இந்நிலையில், ஜனவரி 13-ம் தேதி இத்திரைப்படம் வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது.
விளையாட்டு:
1. கான்பூரில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்துள்ளது. கடைசி வரை பரபரப்பாக சென்ற இந்த போட்டியில், போதிய வெளிச்சம் இல்லாததால் போட்டி முடித்து கொள்ளப்பட்டது. 9 விக்கெட்டுகள் இழந்து கடைசி வரை களத்தில் நின்ற நியூசிலாந்து நூல் இழையில் தோல்வியில் இருந்து தப்பியது
2. 26 வது தேசிய சீனியர் கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் கேரளாவில் நேற்று தொடங்கியிருக்கிறது. தமிழ்நாடு மகளிர் அணி இன்று தனது முதல் போட்டியில் தெலுங்கானா அணிக்கு எதிராக மோதியது. இதில் தமிழ்நாடு அணி 20-0 என பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்