ABP-CVoter Karnataka Opinion Poll: கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் யார்? முடிசூடா மன்னராகிறாரா சித்தராமையா..? கருத்துகணிப்பு முடிவுகளால் பாஜக ஷாக்..!
கர்நாடகாவின் முதலமைச்சராக நீங்கள் யாருக்கு வாய்ப்பளிப்பீர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு 39.1 சதவிகிதத்தினர் காங்கிரஸ் கட்சியின் சித்தராமையா என பதில் அளித்துள்ளனர்.
கர்நாடகாவில் வரும் மே மாதம் 10ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. மே 13ஆம் தேதி, முடிவுகள் வெளியாக உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. தென்னிந்தியாவை பொறுத்தவரையில் பாஜக ஆளும் ஒரே மாநிலம் கர்நாடகம் என்பதால், இது முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக கருதப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், ABP News - CVoter team இணைந்து தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளை இன்று வெளியிட்டுள்ளது. அதில், பல தகவல்கள் வெளியாகி அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. குறிப்பாக, அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்விக்கு மக்கள் அளித்துள்ள பதில் வியப்பை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளது.
முடிசூடா மன்னனாக மாறுகிறாரா சித்தராமையா..?
ஏன் என்றால், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் பாஜக தேர்தலை சந்திக்க உள்ள போதிலும், பாஜக ஆட்சி அமைக்கும் பட்சத்தில் முதலமைச்சர் பதவி வேறு ஒருவருக்கு அளிக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. அதேபோல, காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர்கள் சித்தராமையா, டி.கே. சிவகுமார் ஆகியோருக்கு இடையே அதிகார போட்டி நிலவி வந்தது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், கருத்துக்கணிப்புகளில் தெளிவான பதிலை மக்கள் அளித்துள்ளனர். கர்நாடகாவின் முதலமைச்சராக நீங்கள் யாருக்கு வாய்ப்பளிப்பீர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு 39.1 சதவிகிதத்தினர் காங்கிரஸ் கட்சியின் சித்தராமையா என பதில் அளித்துள்ளனர்.
பாஜகவின் தோல்விக்கு காரணம் பசவராஜ் பொம்மையா?
அதற்கு அடுத்தபடியாக, 31.1 சதவிகிதத்தினர் பாஜகவின் பசவராஜ் பொம்மையே முதலமைச்சராக வர வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர். மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவரும் கர்நாடக முன்னாள் முதலமைச்சரான எச். டி. குமாரசாமிக்கு ஆதரவாக 21.4 சதவிகித மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதேபோல, கர்நாடக காங்கிரஸின் மாநில தலைவரான டி.கே. சிவகுமார், முதலமைச்சராக வர வேண்டும் என 3.2 சதவிகித மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சித்தராமையா அரசியல்:
இந்த கருத்துகணிப்புகளில் மூலம், மக்களின் ஏகோபித்த ஆதரவு சித்தராமையாவுக்கு இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், காங்கிரஸ் ஆட்சி அமைத்ததை தொடர்ந்து, 2013ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை, கர்நாடகாவின் முதலமைச்சராக பதவி வகித்தவர் சித்தராமையா.
தேசிய பிரச்னைகளை முன்வைத்து பாஜக அரசியல் செய்தபோது, பிராந்திய பிரச்னைகளை பேசி காங்கிரஸ் கட்சியை ஆட்சி கட்டிலில் அமரவைத்தவர் சித்தராமையா. குறிப்பாக, தமிழ்நாட்டில் பேசி வந்த இந்தி திணிப்பு எதிர்ப்பு விவகாரத்தை கையில் எடுத்து பாஜகவை தோற்கடித்தவர் சித்தராமையா.
அதேபோல, இவர் முதலமைச்சராக பதவி வகித்தபோதுதான், கர்நாடகாவுக்கு என தனி கொடி வடிவமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
மேலும் தகவல்களை நேரலையில் காண:
பொறுப்பு துறப்பு: இந்த கருத்துக்கணிப்பு, சி வோட்டர் நிறுவனத்தால் கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி முதல் மார்ச் 26ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. கர்நாடக முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட 24,759 பேரிடம் இந்த கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டது. இதில், ±3 to ±5% வரை மாற்றம் இருக்க வாய்ப்பு.