Exclusive: Gujrat ABP C-Voter Opinion Polls: ஏபிபி-சிவோட்டர் தேர்தல் கருத்துக் கணிப்பு: குஜராத்தில் ஆட்சியமைக்கப்போவது யார்? சாதிக்குமா ஆம் ஆத்மி?
குஜராத்தில் எந்தக் கட்சி வெற்றி பெற வாய்ப்பு என்பது குறித்து ஏபிபி நியூஸ்-சிவோட்டர் இணைந்து குஜராத்தில் தேர்தல் கருத்துக் கணிப்பு செய்துள்ளது.
குஜராத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இந்நிலையில், ஏபிபி நியூஸ்-சிவோட்டர் இணைந்து குஜராத்தில் தேர்தல் குறித்து கருத்துக் கணிப்பு செய்துள்ளது.
வாக்குப் பங்கு சதவீதம்
இந்த தேர்தல் கருத்துக் கணிப்பில் பாஜக அதிக வாக்குகளை பெற்றுள்ளது. பாஜக 45.4 சதவீதம் வாக்குகளை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 2017 தேர்தலைக் காட்டிலும் 3.7 சதவீதம் குறைவாகும். கடந்த தேர்தலில் பாஜக 49.1 சதவீத வாக்குகளைப் பெற்றது.
அடுத்த பிரதான கட்சியான காங்கிரஸ் 29.1 சதவீத வாக்குகளே பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த தேர்தலில் 41.4 சதவீத வாக்குகளை இக்கட்சி பெற்றது. டெல்லியில் ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து, பஞ்சாபில் காங்கிரஸை தோற்கடித்து ஆட்சியைப் பிடித்தது ஆம் ஆத்மி கட்சி. தற்போது குஜராத்தையும் அக்கட்சி குறிவைத்துள்ளது. பல இலவச வாக்குறுதிகளை ஆம் ஆத்மி அளித்துள்ளது. இந்தத் தேர்தலில் அக்கட்சி 20.2 சதவீத வாக்குகளை பெறும் என்று கருத்துக் கணிப்பு சொல்கிறது.
பிற கட்சிகள் 5.4 சதவீத வாக்குளை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2017 தேர்தலில் இதர கட்சிகள் 9.5 சதவீத வாக்குகளைப் பெற்றன. தற்போது 4.2 சதவீத வாக்குகள் குறையும் என்று கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
ஏபிபி நியூஸ்-சிவோட்டர் குஜராத் தேர்தல் கருக்குக் கணிப்பு 2022-இன் படி, குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 131 முதல் 139 தொகுதிகள் வரை கைப்பற்றி ஆட்சியைத் தக்க வைக்கும் என்று தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கட்சி 31 முதல் 39 சட்டசபைத் தொகுதிகள் வரை கைப்பற்றும் என்று கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. ஆம் ஆத்மி 7 முதல் 15 தொகுதிகள் வரை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எத்தனை வாக்குச்சாவடிகள்?
மாநிலத்தில் 51,700 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. குஜராத் சட்டமன்றத் தேர்தலில் 4.6 லட்சம் புதிய வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தத் தேர்தலில் 4.90 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் 1998-ஆம் ஆண்டு முதல் பாஜக ஆட்சியில் இருந்து வருகிறது. 24 ஆண்டுகளாக குஜராத்த்தில் ஆட்சியில் தொடரும் பா.ஜ.க. கட்சிக்கு இம்முறை சவால் மிகுந்த தேர்தலாக இருக்கும்.
பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி, குஜராத்திலும் வரும் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
பாஜக - காங்கிரஸ் - ஆம் ஆத்மி கட்சிகளுக்கிடையே மும்முனைப் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இம்முறை தேர்தல் களம் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
[பொறுப்புத்துறப்பு: தற்போதைய கருத்துக் கணிப்பு/சர்வே சிவோட்டரால் நடத்தப்பட்டது. நிலையான RDD இலிருந்து பெறப்பட்ட 18 வயதுக்கு மேற்பட்டோரிடம் தேர்தல் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இது ±3 முதல் ±5% வரை பிழையாக இருக்கவும் வாய்ப்புள்ளது. மேலும் அனைத்து அளவுகோல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளபடியே முடிவுகள் இருக்க வேண்டியது அவசியமில்லை.]