கார்த்தி சிதம்பரம், செந்தில் பாலாஜி வரிசையில் ஆம் ஆத்மி எம்பி.. அதிரடி காட்டிய அமலாக்கத்துறை
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் சத்யேந்தர் ஜெயின், மணிஷ் சிசோடியா, காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டவர்களுக்கு எதிராக அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
மத்திய அரசின் கீழ் இயங்கும் முக்கியத்துவம் வாய்ந்த புலனாய்வு அமைப்புகளில் ஒன்றாக உள்ளது அமலாக்கத்துறை இயக்குநரகம். பணமோசடி, அந்நியச் செலாவணி மீறல்கள் மற்றும் நிதி குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் அமலாக்கத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளை டார்கெட் செய்கிறதா ED?
ஆனால், இந்த அமைப்பின் மூலம் பாஜக அரசு, எதிர்க்கட்சிகளை மிரட்டப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பல எதிர்க்கட்சி தலைவர்களின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி கைது செய்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் சத்யேந்தர் ஜெயின், மணிஷ் சிசோடியா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் நவாப் மாலிக், அனில் தேஷ்முக், காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி அபிஷேக் பானர்ஜி உள்ளிட்டவர்களுக்கு எதிராக அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த நிலையில், டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி கட்சி எம்பி சஞ்சய் சிங்கின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று காலை டெல்லியில் உள்ள அவரது வீட்டுக்கு சென்ற அதிகாரிகள் தொடர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆம் ஆத்மி கட்சி எம்பி வீட்டில் ரெய்டு:
டெல்லியின் முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவும் இதே வழக்கில் கைது செய்யப்பட்டுதான், சிறையில் உள்ளார். கடந்த பிப்ரவரி மாதம், இவரை சிபிஐ கைது செய்தது. இதை தொடர்ந்து, அமலாக்கத்துறையும் அவருக்கு வழக்கு பதிவு செய்துள்ளது. இதே வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலிடமும் 9 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
பல மாதங்களுக்கு முன்பே, தனது வீட்டின் வெளியே அமலாக்கத்துறை அதிகாரிகளை வரவேற்பதாக சஞ்சய் சிங் போஸ்டர் ஒட்டியிருந்தார்.
அமலாக்கத்துறை அதிகாரிகளை வரவேற்கும் போஸ்டருடன் சஞ்சய் சிங் இருக்கும் புகைப்படத்தை ஆம் ஆத்மி, தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
சஞ்சய் சிங்கின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள டெல்லி அமைச்சர் சௌரப் பரத்வாஜ், "இது ஒரு கற்பனையான மோசடி வழக்காகும். இதில் கடந்த 15 மாதங்களாக விசாரணை நடைபெற்று வருகிறது. அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ குறைந்தது 1,000 இடங்களில் சோதனை நடத்தியும், எங்கிருந்தும் 1 ரூபாய் கூட பறிமுதல் செய்யவில்லை. சஞ்சய் சிங்கின் வீட்டிலும் அவர்களுக்கு எதுவும் கிடைக்காது. தேர்தலில் பா.ஜ.க தோற்கிறது. இதுதான் உண்மை" என்றார்.
ஆம் ஆத்மியின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி அளித்துள்ள பாஜக, "டெல்லி மக்களை ஆம் ஆத்மி கொள்ளையடித்துள்ளது. இந்த மதுபான கொள்கையின் மூலம் கோடிகளை ஈட்டியுள்ளார்கள்" என விமர்சித்துள்ளது.
சமீபத்தில், தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்த சம்பவம் தேசிய அளவில் அதிர்வலைகளை கிளப்பியது. தற்போது, அவர் சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.