Aadhav Arjuna Vijay : விஜய்க்கு வேலைபார்க்கும் ஆதவ்? 2026ல் விசிக யார் பக்கம்! திருமா போடும் கணக்கு என்ன?
Thirumavalavan : ஆதவ் அர்ஜூனாவுக்கு எதிராக திருமா எடுக்கப்போகும் நடவடிக்கையே 2026ல் அவர் யாருடன் கூட்டணி எனபதை தெளிவுப்படுத்தும் வகையில் அமையும் என்று கூறப்படுகிறது
விசிகவில் முக்கிய பொறுப்பில் இருக்கக் கூடிய ஆதவ் அர்ஜூனா விஜய்க்காக வேலை பார்க்கிறாரா என்ற சந்தேகம் அந்தக் கட்சியினருக்கே வந்துள்ளது. விஜய்யும், விசிகவின் எந்த அடையாளமும் இல்லாமல் ஆதவ் அர்ஜூனாவை அறிமுகம் செய்துள்ளார். இத்தனை நாட்களாக திருமா நடவடிக்கை எடுக்காததன் பின்னணி என்ன என்று பேச்சு ஆரம்பமாகியுள்ளது.
உதயநிதியை குறிவைக்கும் ஆதவ்?
துணை முதலமைச்சர் உதயநிதியை குறிவைத்தே விஜய்யின் அரசியல் பிரவேசம் இருப்பதாக ஆரம்பத்தில் இருந்தே பேச்சு இருக்கிறது. அதனை வைத்தே விசிக துணை பொதுசெயலாளர் ஆதவ் அர்ஜூனாவும் விஜய்க்கு ஆதரவாக காய்களை நகர்த்துவதை புத்தக வெளியீட்டு விழா காட்டுகிறது. இந்த புத்தக வெளியீட்டு விழா விஜய்க்கான அரசியல் விழாவாக மாறியுள்ளதாக பேச்சு இருக்கிறது. 2026 தேர்தலில் மன்னராட்சி முறை ஒழிக்கப்பட வேண்டும்; பிறப்பால் இனி முதலமைச்சர் தமிழ்நாட்டில் உருவாகக் கூடாது என துணை முதலமைச்சர் உதயநிதியை மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார் ஆதவ் அர்ஜூனா. கூட்டணியில் இருக்கக் கூடிய திமுகவை தொடர்ந்து விமர்சிப்பதையே ஆதவ் கடந்த சில நாட்களாக செய்து வருகிறார்.
விஜயுடன் இணையும் ஆதவ்?
விஜய்க்காக தான் அவர் இதனை செய்கிறாரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. விஜய்க்காக வேலை பார்ப்பவராக ஆதவ் அர்ஜூனா மாறியிருக்கிறார் என்று விசிக எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸே சொல்லியிருக்கிறார். புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் பேச ஆரம்பிக்கும் போது கூட மற்றவர்களை அவரவர் அடையாளத்துடன் சொல்லிவிட்டு ஆதவ் அர்ஜூனாவை விசிக துணை பொதுச்செயலாளர் என சொல்லாமல் பெயரை மட்டும் சொல்லிவிட்டு நகர்ந்தார். 2026 தேர்தலில் விஜய்யின் தேர்தல் வியூக வகுப்பாளராக ஆதவ் அர்ஜூனா இருப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படிங்க:Aadhav Arjuna : ஆதவ் பற்றவைத்த நெருப்பு.. கோபத்தில் விசிக சீனியர்ஸ் கட்சியை காப்பாற்றுவாரா திருமா?
அமைதி காக்கும் திருமா:
இந்த விவகாரத்தில் திருமா, ஆதவ் மீது எந்த ஆக்ஷனும் எடுக்காமல் அமைதி காப்பதன் பின்னணியில் 2 முக்கிய காரணங்கள் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு இருக்கிறது. ஒன்று, ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என பேசிய விஜய்யுடன் கூட்டணி வைப்பதற்காக ஆதவ்-ஐ வைத்து திருமா காய்களை நகர்த்தி வருவதாக சொல்கின்றனர். புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள முடியாத அளவுக்கு திருமாவுக்கு பிரஷர் இருக்கிறது அவரது மனசு முழுக்க நம்முடன் தான் இருக்கும் என விஜய் மேடையில் பேசியதும் இணக்கமான சூழல் இருப்பதை காட்டுவதாகவே அமைந்திருப்பதாக சொல்கின்றனர்.
மற்றொன்று, ஆதவ் விஜய்க்கு வேலை பார்க்கிறார் என ஆளூர் ஷாநவாஸ் பேசியதை பார்த்தால் ஆதவ்-ஐ விசிகவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே திருமா எந்த ஆக்ஷனும் எடுக்காமல் அமைதியாக இருக்கிறார் என்ற பேச்சு இருக்கிறது. ஏற்கனவே திமுக மற்றும் விசிகவுக்காக தேர்தல் வேலைகளில் ஈடுபட்ட ஆதவ் அர்ஜூனா 2 கட்சிகளின் பலம் மற்றும் பலவீனத்தை நன்கு தெரிந்து வைத்திருக்கிறார். அவர் விஜய்யுடன் சேர்ந்துவிட்டால் அது திமுக கூட்டணிக்கு சிக்கலை கொடுக்கும் என திருமா நினைப்பதாக சொல்கின்றனர்.
எல்லாம் திருமாவின் கையில்:
புத்தக வெளியீட்டு விழாவை தொடர்ந்து திருமா எடுக்கப்போகும் நடவடிக்கையே 2026ல் அவர் யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறார் என்பதை தெளிவுபடுத்தும் வகையில் இருக்கும் என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சு இருக்கிறது.