கூகுள் மீட்ஸ் திருமண நிகழ்ச்சி.. ஜொமாட்டோவில் உணவு டெலிவரி.. டிஜிட்டல் திருமண நிகழ்ச்சி நடத்தும் வங்கத் தம்பதி!
மேற்கு வங்கத்தில் திருமணம் செய்துகொள்ள உள்ள தம்பதி ஒன்று சுமார் 450 விருந்தினர்களுடன் திருமண நிகழ்ச்சியைக் கொரோனா விதிமுறைகள் எதுவுமின்றி நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
மேற்கு வங்கத்தில் திருமணம் செய்துகொள்ள உள்ள தம்பதி ஒன்று சுமார் 450 விருந்தினர்களுடன் திருமண நிகழ்ச்சியைக் கொரோனா விதிமுறைகள் எதுவுமின்றி நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர். வரும் ஜனவரி 24 அன்று, திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ள சந்தீபன் சர்க்கார், அதிதி தாஸ் ஆகியோர் கூகுள் மீட்ஸ் பயன்படுத்தி விருந்துனர்களை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வைப்பதோடு, ஜோமாட்டோ பயன்படுத்தி விருந்தினர்களின் வீடுகளுக்கு உணவு டெலிவரியும் செய்யவுள்ளனர்.
`கடந்த ஆண்டே திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டோம்; ஆனால் இந்தப் பெருந்தொற்று பிரச்னையாக மாறியுள்ளது’ எனக் கூறுகிறார் சந்தீப் சர்க்கார். தங்கள் விருந்தினர்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும், மாநில அரசு வெளியிட்டுள்ள 200 பேர் கலந்துகொள்ளலாம் என்ற கட்டுப்பாட்டையும் கணக்கில் கொண்டு, சந்தீப் தனது திருமண நிகழ்ச்சியை கூகுள் மீட்ஸ் மூலம் நடத்தவுள்ளார். இதன்மூலம் திருமணத்தில் கலந்துகொள்ள விரும்பும் விருந்தினர்கள் தங்கள் வீட்டில் அமர்ந்தபடி, ஜோமாட்டோ மூலமாக அனுப்பப்படும் உணவை ருசித்தபடி திருமண விழாவைப் பார்வையிடலாம்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சுமார் 4 நாள்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சந்தீப் சர்கார், தனக்கு தொற்று ஏற்பட்டதே இந்த ஏற்பாடுகளுக்குக் காரணம் எனக் கூறியுள்ளார்.
`நான் என் குடும்பம், திருமணத்தில் கலந்துகொள்ளும் விருந்தினர்கள் ஆகியோரின் பாதுகாப்பின் மீது கவனம் கொள்கிறேன். எனவே பெரியளவிலான கூட்டங்களைத் தவிர்க்க ஒரு வழியைச் சிந்திக்கத் தொடங்கினேன்’ என அவர் கூறியுள்ளார். கடந்த ஜனவரி 2 முதல் 4 வரை, கொரோனா தொற்று ஏற்பட்டு சந்தீப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்தத் திருமண விழாவில் சுமார் 100 முதல் 120 விருந்தினர்கள் நேரடியாகக் கலந்துகொள்ள இருப்பதாகவும், லைவ் மூலமாக இணையத்தில் சுமார் 300 பேர் திருமண விழாவைப் பார்வையிடவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. திருமண நிகழ்ச்சிக்கு ஒரு நாள் முன்பாக, விருந்தினர்கள் அனைவருக்கும் திருமண நிகழ்ச்சியைப் பார்வையிடுவதற்கான லிங், அதன் பாஸ்வேர்ட் ஆகியவை அனுப்பி வைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த டிஜிட்டல் திருமணம் குறித்து பேசியுள்ள ஜொமாட்டோ நிறுவன அதிகாரி ஒருவர், `எங்களுக்கு இது மிகவும் நல்ல ஐடியாவாகத் தோன்றுகிறது. எங்கள் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளுடன் இதுகுறித்து கலந்துரையாடிய போது, அவர்களும் இதனைப் பாராட்டினர். திருமணத்திற்கான உணவு டெலிவரிகளைக் கண்காணிக்க எங்களிடம் ஏற்கனவே குழுக்கள் உண்டு. பெருந்தொற்றுக் காலத்தில் இப்படியான முடிவை எடுத்த தம்பதியை வாழ்த்துவதோடு, இந்தத் திருமண நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாக விளம்பரப்படுத்தவும் முடிவு செய்துள்ளோம்’ எனக் கூறியுள்ளார்.
பாரம்பரிய முறைப்படி மேற்கொள்ளும் திருமணங்களை மாற்றியமைத்துள்ளது கொரோனா பெருந்தொற்று. தமிழ்நாட்டில் சமீபத்தில் ஒரு தம்பதி வரும் பிப்ரவரி மாதம் மெட்டா தளத்தில் விர்ச்சுவல் ரியாலிட்டியின் மூலம் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.