இங்கிலாந்து இளவரசரின் சுற்றுசூழல் பாதுகாப்பு விருதுக்கு திருவண்ணாமலை மாணவி தேர்வு
’’சுற்றுசூழல் மாசடைவதை தடுக்குபொருட்டு சூரிய ஒளி மின்சாரத்தால் இயங்கும் இஸ்திரி பேட்டி வண்டியை மாணவி வினிஷா உமாசங்கர் உருவாக்கி உள்ளார்’’
திருண்ணாமலை நகராட்சி வேங்கிக்கால் பகுதியில் உள்ள வானவில் நகர் 3ஆவது தெருவில் வசித்து வரும் உமாசங்கர் (40) ஆன்லைன் ஆலோசகராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சங்கீதா தனியார் பன்னாட்டு பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களின் மகள் வினிஷா உமாசங்கர் (15). இவர் திருவண்ணாமலையில் உள்ள எஸ்கேபி வனிதா தனியார் பன்னாட்டு பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகின்றார். சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்க வேண்டும், என்ற நோக்கத்தில் சிறுவயது முதலே அறிவியல் சார்ந்த புத்தகங்களை படித்து வரும் மாணவி அறிவியல் மீதான நாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு பள்ளியில் இருந்து வீட்டிற்கு சென்ற வினிஷா வீட்டின் அருகாமையில் உள்ள இஸ்திரி கடைக்காரர் கரித்துண்டுகளை சாலையில் கொட்டி வைத்து காய வைத்துள்ளார். அதன்பிறகு அந்த கரிதுண்டுகளை , சிறிது நேரத்தில் கரித்துண்டுகளை குப்பையில் கொட்டி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இருந்ததை கண்டு வேதனையடைந்துள்ளார்.
இதனை அறிவியல் பூர்வமாக செயல்படுத்தும் நோக்கில் 10 மாதங்களுக்கு மேலாக சூரிய சக்தி மூலம் இயங்கும் நடமாடும் இஸ்திரி பெட்டியுடன் கூடிய வாகனத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று எண்ணி பல்வேறு கட்ட முயற்சிகளை செய்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்தில் சூரிய ஒளியில் இயங்கும் நடமாடும் தன்மை கொண்ட இஸ்திரி பெட்டியுடன் கூடிய வாகனத்தை கண்டுபிடித்தார். இந்த வண்டியின் மேல்புறத்தில் சூரிய ஒளித்தகடுகள் பொருத்தப்பட்டு, 100AH திறன்கொண்ட மின்கலன் இணைக்கப்பட்டிருக்கும். இந்த பேட்டரியை 5 மணி நேரம் சூரிய ஒளியைக் கொண்டு சார்ஜ் செய்தால் 6 மணி நேரம் வரை தொடர்ந்து இஸ்திரி செய்யலாம்.
இது குறித்து வினிஷாவிடம் பேசுகையில்;
தற்பொழுது உள்ள இஸ்திரி கடைக்காரர்கள், துணியை இஸ்திரி செய்ய மரங்களை வெட்டி அதிலிருந்து வரும் மரத்துண்டுகளை எரித்து, கரித்துண்டுகளை கொண்டு மாசு ஏற்படுத்தும் வகையில் இஸ்திரி செய்வதை தடுக்கும் வகையில், இதுபோன்ற புதிய கருவி கண்டுபிடித்தேன். இந்த இஸ்திரி வாகனத்தை நீங்கள் ஒருமுறை முதலீடு செய்து வாங்கினால் 7 முதல் 8 ஆண்டுகள் வரை இஸ்திரி கடைக்காரர்கள் துணிகளை இஸ்திரி செய்து பயன்பெறலாம் என்று தெரிவித்த மாணவி, இதற்காக 30 முதல் 40 ஆயிரம் வரை ஒரு முறை முதலீடு செய்தால் போதும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்காக கடந்த 2019ஆம் ஆண்டு டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் இக்நைட் விருதை பெற்றதாகவும், அதனைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு ஸ்வீடன் நாட்டின் குழந்தைகளுக்கான சூழலியல் அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் ஸ்வீடன் நாட்டின் துணைப் பிரதமர் இசபெல்லாலோவிடமிருந்து இணையவழி நிகழ்வில் பட்டயம், பதக்கம் மற்றும் 8.5 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை பெற்றுள்ளார். இந்த கண்டுபிடிப்பிற்காக பாரத பிரதமரின் 18 வயதிற்குட்பட்டவரின் உயரிய விருதான பாரத பிரதமர் பால் சக்தி புரஸ்கார் விருது அப்போது மத்திய அரசால் இந்த மாணவிக்கு அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது இவர் பிரிட்டன் இளவரசர் வில்லியம்ஸின் எர்த்ஷார்ட் (Earthshot) விருதிற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இவ்விருதானது சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்கு புதுமையான தீர்வு வழங்குபவர்களுக்கு கடந்த ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. பிரிட்டனின் இளவரசர் வில்லியம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்திய எர்த்ஷாட் (Earthshot) விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் 15 இறுதி போட்டியாளர்களில் வினிஷா உமாசங்கர் இடம்பெற்றுள்ளார்.
வளர்ந்து வரும் டிஜிட்டல் யுகத்தில் வீணாக காலத்தை கழிக்கும் சில மாணவர்களுக்கு மத்தியில், புத்தக வாசிப்பு, தொடர் முயற்சி காரணமாக பல கண்டுபிடிப்புகளை உலகிற்கு கொண்டுவர நினைக்கும் மாணவி வினிஷாவின் முயற்சி பாராட்டத்தக்கது . இந்த விருது இங்கிலாந்து இளவரசர் வில்லியம் அவர்களால் தொடங்கப்பட்டது. சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் காலநிலை மாற்றங்களை சரி செய்யவும் மற்றும் இயற்கையை பாதுகாக்கவும் தொடங்கப்பட்ட இந்த முயற்சிக்கு உலகெங்கிலும் உள்ள பல அமைப்புகள் ஆதரவு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த விருதிற்காக திருவண்ணாமலை பன்னாட்டு பள்ளி மாணவி வினிஷா உமாசங்கர் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் உருவாக்கிய சோலார் இஸ்திரி பெட்டிக்கு லண்டன் ராயல் பவுண்டேசன் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் இதற்காக தனக்கு உறுதுணையாக, இருந்த பள்ளி ஆசிரியர்கள், முதல்வர்கள், பெற்றோர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்வதாகவும் கூறியவர், இன்னும் பல்வேறு கண்டுபிடிப்புகளை தான் கண்டுபிடிக்க உள்ளதாகவும் மாணவி வினிஷா தெரிவித்தார்.
இது குறித்து பேசிய மாணவியின் பெற்றோர்கள்;
பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் ஊக்கம் அளித்தால் மட்டுமே இது போன்ற பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவார்கள். அனைத்து பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை ஊக்கமளிக்க வேண்டும், என்றும் இது போன்ற இளம் விஞ்ஞானிகளை மத்திய மாநில அரசுகள் ஊக்கமளித்து அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.