'நிலக்கரி ஆலையால் அரசுக்கு துளியும் லாபமில்லை.. அபாயம் தான்' - எச்சரிக்கும் அறிக்கை!
80 சதவிகித புதிய நிலக்கரி மின்சக்தி ஆலைகள் அமைக்கப்படும் 5 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.
உலகளவில் பருவநிலை மாற்றத்திற்கு முக்கியமான காரணமாக கருத்தப்படுபவது நிலக்கரி மின்சக்தி தயாரிப்பு தான். இந்த ஆலைகள் மூலம் வெளியாக கார்பன் சுற்றுச்சூழலை மாசுப்படுத்துகிறது. அத்துடன் பூமியின் வெப்பத்தை அதிகரிக்கவும் செய்கிறது. இந்த நிலையை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் பாரீஸ் பருவநிலை மாற்றத்திற்கான ஒப்பந்தத்தில் உறுதி எடுத்தன.
எனினும் அந்த உறுதியை நாடுகள் தங்களுடைய கொள்கைகள் மூலம் செயல்படுத்த தவறி வருகின்றன. இந்தச் சூழலில் கார்பன் ட்ராக் என்ற தன்னார்வு அமைப்பு ‘டூ நாட் ரீவைவ் கோல்’ என்ற பெயரில் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி உலகத்தில் புதிதாக அமைய உள்ள நிலக்கரி மின்சக்தி ஆலைகளில் 80 சதவிகிதம் 5 ஆசிய நாடுகள் அமைய உள்ளது. அதன்படி சீனா, இந்தியா, ஜப்பான், இந்தோனேஷியா மற்றும் வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் இந்த நிலக்கரி ஆலைகள் அமைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தப் புதிய நிலக்கரி ஆலைகளில் 92 சதவிகிதம் பொருளாதாரத்திற்கு ஏற்புடையதாக இருக்காது என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. அதாவது இந்த ஆலைகள் அனைத்தும் லாபத்தை விட நஷ்டத்தையே அரசுக்கு தரும் என்று கூறுகிறது. இந்த நஷ்டம் அனைத்தும் சாமானிய மனிதர்கள் மற்றும் வரி செலுத்தும் மக்கள் மீது கூடுதல் சுமையாக வந்து சேரும் என்று அறிக்கை எச்சரிக்கை விடுக்கிறது.
உலகளவில் மொத்தமாக 150 பில்லியன் கோடி டாலர் நஷ்டம் ஏற்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் உலகத்தில் தற்போது செயல்பட்டு வரும் நிலக்கரி மின்சக்தி ஆலைகளில் 80 சதவிகிதத்தை புதுப்பிக்க கூடிய எரிசக்தியை (Renewable energy) கொண்டு மாற்றலாம் என்றும் அறிக்கை தெரிவித்துள்ளது. அதாவது நிலக்கரிக்கு பதிலாக சூரிய ஒளி, காற்று உள்ளிட்டவற்றை வைத்து மின்சாரம் தயாரிக்க முடியும் என்று குறிப்பிடுகிறது. 2024ஆம் ஆண்டிற்குள் நிலக்கரி வைத்து மின்சக்தி தயாரிப்பது மிகவும் விலை உயர்ந்து இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது உலகளத்தில் உள்ள நிலக்கரி ஆலைகளில் 12 சதவிகிதம் உள்ளது. உலகளவில் நிலக்கரி மின்சக்தி உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் 450 ஜிகா வாட் மின்சாரத்தை புதுப்பிக்க கூடிய எரிசக்தி மூலம் 2030 ஆண்டிற்குள் தயாரிக்கும் என்று கூறியுள்ளது. அந்த இலக்கை அடைய வேண்டும் என்றால் தற்போது இருக்கும் அளவைவிட ஆண்டிற்கு 5 மடங்கு புதுப்பிக்க கூடிய எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். அதற்கு இந்தியா முழு முயற்சி எடுக்க வேண்டும். உலகத்தில் அதிகமாக நிலக்கரி மூலம் அபாயத்தை ஏற்படுத்தும் 10 நிறுவனங்களில் 7 இந்தியாவை தலைமையிடமாக கொண்டுள்ளது. அவற்றில் என்டிபிசி மற்றும் ஆதானி நிறுவனும் ஒன்றாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி ஏன் கட்டாயம்? அரசு முடிவுக்கு இது தான் காரணம்!