விமான சீட் அடியில் மறைத்து வைத்திருந்த 6 கிலோ தங்கம் சென்னையில் பறிமுதல்
துபாயிலிருந்து சென்னை வந்த ஏா்இந்தியா விமானத்தில் சீட்டுக்கு அடியில் மறைத்து வைத்திருந்த ரூ.2.9 கோடி மதிப்புடைய 6 கிலோ தங்கம் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
துபாயிலிருந்து சென்னை சா்வதேச விமானநிலையத்திற்கு ஏா்இந்தியா சிறப்பு விமானம் இன்று அதிகாலை வந்தது. அந்த விமானம் மீண்டும் உள்நாட்டு விமானமாக சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டு செல்ல தயாரானது. அதற்காக ஏா் இந்தியா ஊழியா்கள் விமானத்தை தூய்மை செய்யும் பணியில் ஈடுப்பட்டனா். அப்போது ஒரு விமானத்தில் பயணிகள் அமரும் ஒரு சீட் உயர்ந்திருந்ததை கண்டனர். அதை சரிசெய்ய முயன்ற போது, சீட்டிற்கு அடியில் வெள்ளை நிற பாா்சல் ஒன்று இருந்தது.
சந்தேகம் அடைந்த பணியாளர்கள், தூய்மை பணியை நிறுத்திவிட்டு விமானநிலைய மேலாளருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விமான பாதுகாப்பு அதிகாரிகள் பாதுகாப்பு கருவிகளுடன் விரைந்து வந்து சோதனையிட்டனா். முதலில் வெடிபொருட்களாக இருக்குமோ என சந்தேகிக்கப்பட்ட நிலையில், சோதனைக்கு பின் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை என தெரியவந்தது. இதையடுத்து பாா்சலை பிரித்து பாா்த்தபோது உள்ளே தங்கக் கட்டிகள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து விமானநிலைய சுங்கத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவா்கள் விரைந்து வந்து தங்கக்கட்டிகளை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் ஒரு கட்டி ஒரு கிலோ வீதம் 6 தங்கக் கட்டிகள் அதனுள் இருந்தன. அதனுடைய சா்வதேச மதிப்பு ரூ.2.9 கோடி என நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெளிநாட்டிலிருந்து தங்கத்தை கடத்தி வந்து, அதை உள்ளூர் பயணத்தில் சோதனையின்றி மாற்ற முயற்சி நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சிசிடிவி காட்சிகள் பதிவை வைத்து கடத்தல் ஆசாமியை தேடும் பணிகள் நடந்து வருகிறது.