GST Council : அமலாக்கத்துறையிடம் தகவல்களை பகிர்ந்துகொள்ள அனுமதி...ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு எதிர்ப்பு
புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் இறக்குமதி மருந்துகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிப்பதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் ஆதரவு தெரிவித்தது.
தேசிய தலைநகர் டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 50ஆவது கூட்டம் இன்று பிற்பகல் தொடங்கியது. கடந்த 2017ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 1ஆம் தேதி சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த 6 ஆண்டுகளில் இதுவரை ஜிஎஸ்டி கவுன்சிலின் 49 கூட்டம் நடைபெற்றுள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சிலின் 50ஆவது கூட்டம்:
இதை தொடர்ந்து, ஜிஎஸ்டி கவுன்சிலின் 50ஆவது கூட்டம் இன்று பிற்பகல் 12 மணியளவில் தொடங்கியது. மாநில நிதியமைச்சா்கள், மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் உயர் அலுவலர்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டுள்ள நிலையில், தமிழ்நாடு சார்பில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டுள்ளார்.
இணைய விளையாட்டுகள், குதிரைப் பந்தயம், கேசினோ விளையாட்டுகள் ஆகியவற்றுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி, மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் விநியோகிக்கப்படும் உணவுகளுக்கான சரக்கு-சேவை வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைப்பது, புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் இறக்குமதி மருந்துகளுக்கு ஜிஎஸ்டி-யில் இருந்து விலக்களிப்பது உள்ளிட்டவை தொடா்பாகவும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
விவாதிக்கப்பட்ட முக்கிய விவகாரங்கள்:
இதில், புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் இறக்குமதி மருந்துகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிப்பதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் ஆதரவு தெரிவித்தது. ஆனால், அமலாக்கத்துறை இயக்குநரகத்துடன் தகவல்களை பகிர்ந்து கொள்ள ஜிஎஸ்டி நெட்வொர்க்கிற்கு அனுமதி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ள நிலையில், இதற்கு எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.
மத்திய அரசின் முடிவை கடுமையாக விமர்சித்துள்ள பஞ்சாப் நிதியமைச்சர் ஹர்பால் சிங் சீமா, "இது வரி பயங்கரவாதம். சிறு வணிகர்களுக்கு இது அச்சத்தை தரும்" என்றார்.
எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு:
பணமோசடி தடுப்புச் சட்டம் (பிஎம்எல்ஏ), 2002இல், மத்திய அரசு சமீபத்தில் ஒரு திருத்தத்தை கொண்டு வந்தது. அதன்படி, சரக்கு மற்றும் சேவை வரியின் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை நிர்வகிக்கும் பொறுப்பு ஜிஎஸ்டி நெட்வொர்க்கிற்கு வழங்கப்பட்டது. அந்த வகையில், அமலாக்கத்துறையுடன் தகவல்களை பகிர்ந்து கொள்ள அதிகாரம் படைத்த அமைப்புகளின் பட்டியலில் ஜிஎஸ்டி நெட்வொர்க் சேர்க்கப்பட்டது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் இன்று விரிவாக பேசிய டெல்லி நிதியமைச்சர் அதிஷி, "டெல்லி, பஞ்சாப், மேற்கு வங்கம், தமிழ்நாடு, இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, சத்தீஸ்கர், தெலங்கானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் நிதியமைச்சர்கள் இந்தப் பிரச்னையை எழுப்பி, ஜிஎஸ்டி கவுன்சிலில் விவாதிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்" என்றார்.
விண்வெளித் துறையில் தனியாா் நிறுவனங்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில், அத்தகைய நிறுவனங்களால் வழங்கப்படும் செயற்கைக்கோள் ஏவுதல் சேவைகளுக்கு ஜிஎஸ்டி-யில் இருந்து விலக்கு அளிப்பது தொடா்பாகவும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஜிஎஸ்டி மேல்முறையீட்டுத் தீா்ப்பாயத்தை அமைப்பது தொடா்பாகவும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.