Farmer Protest Tractor March: விவசாயிகள் போராட்டத்தின் ஓராண்டு நிறைவு.. நாடாளுமன்றம் நோக்கி டிராக்டர் பேரணி அறிவித்த விவசாயிகள்!
டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் ஓராண்டு நினைவாக நாடாளுமன்றத்தை நோக்கி அனைத்து விவசாயிகளும் பேரணியில் கலந்துகொள்ள சம்யுக்தா கிஸான் மோர்ச்சா என்ற அனைத்திந்திய விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் ஓராண்டு நினைவாக நாடாளுமன்றத்தை நோக்கி அனைத்து விவசாயிகளும் பேரணியில் கலந்துகொள்ள சம்யுக்தா கிஸான் மோர்ச்சா என்ற அனைத்திந்திய விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடரின் போது, ஒவ்வொரு நாளும் 500 விவசாயிகள் அமைதியான முறையில் டிராக்டர் பேரணியில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் வரும் நவம்பர் 29 முதல் டிசம்பர் 23 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, நவம்பர் 26 அன்று, மத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தொடங்கினர். சம்யுக்தா கிஸான் மோர்ச்சா என்ற அமைப்பின் கீழ் நாடு முழுவதும் இருந்து வந்த 40 விவசாயச் சங்கங்கள் இயங்கி வருகின்றன. இந்த அமைப்புகள் விவசாயிகளின் போராட்டங்களை ஒருங்கிணைத்து நடத்தி வருகின்றன. இந்தப் போராட்டங்கள் தொடங்கப்பட்டு வரும் நவம்பர் 26 அன்று ஓராண்டு முடியும் நிலையில் அதனையொட்டி டிராக்டர் பேரணி அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் நவம்பர் 29 தொடங்கி, நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் முடியும் வரையில், ஒவ்வொரு நாளும் 500 விவசாயிகள் அமைதியாகவும், கட்டுப்பாட்டுடனும், தங்கள் போராட்ட உரிமையை நிலைநாட்டவும் டிராக்டர்களில் பேரணி நடத்துவார்கள் என சம்யுக்தா கிஸான் மோர்ச்சா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு மீதான அழுத்தத்தை அதிகரிக்கவும், அதன் மூலமாக நாடு முழுவதும் விவசாயிகள் போராடி முன்வைக்கும் கோரிக்கையை அரசை ஏற்றுக் கொள்ளச் செய்வதற்காகவும் இந்த டிராக்டர் பேரணியை நடத்தவுள்ளதாக விவசாயிகள் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம், விவசாயிகள் நாடாளுமன்றத்தை நோக்கி நடைபயணம் மேற்கொண்டு விவசாய சட்டங்கள் மீதான தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
நவம்பர் 26 அன்று டெல்லியின் அனைத்து எல்லைகளிலும் பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், உத்தராகாண்ட், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அனைத்து விவசாய சங்கங்களும் கலந்துகொள்ள இருப்பதாகவும் விவசாயிகள் சங்கம் தரப்பில் கூறப்படுகிறது. டெல்லியின் எல்லைகளில் அன்று மிகப்பெரிய பொதுக் கூட்டங்கள் நடைபெறும் எனவும், கடந்த ஒரு ஆண்டுப் போராட்டத்தின் போது உயிரிழந்த 650 விவசாயிகள் நினைவுகூரப்படுவர் எனவும் சம்யுக்தா கிஸான் மோர்ச்சாவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நவம்பர் 26 அன்று நாடு முழுவதும் மாநிலத் தலைநகரங்களில் பெரியளவிலான மகாபஞ்சாயத்துகளை நடத்த வேண்டும் எனவும் சம்யுக்தா கிஸான் மோர்ச்சா கோரியுள்ளது.
பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து பிரதானமாகவும், பிற மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஒன்றிணைந்து டெல்லியின் எல்லைகளில் தங்குமிடங்கள் அமைத்து விவசாயச் சட்டங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.