Terrorist Attack: மேலும் அதிர்ச்சி! தீவிரவாதிகள் தாக்குதல் - ராணுவ வீரர்களின் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு
Terrorist Attack: ஜம்மு & காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை, 5 ஆக உயர்ந்துள்ளது.
Terrorist Attack: ஜம்மு & காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 6 ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
ராணுவ வீரர்கள் மீது தாக்குதல்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் உள்ள மச்சேடி பகுதியில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்களின் வாகனங்களை குறிவைத்து, தங்கள் வாகனத்தில் பதுங்கியிருந்து தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் தாக்குதல் நடத்தினர். கதுவா நகரத்தில் இருந்து 150 கிமீ தொலைவில் உள்ள லோஹாய் மல்ஹரில் உள்ள பத்னோடா கிராமத்திற்கு அருகில் மாலை 3.30 மணியளவில் மச்செடி-கிண்ட்லி-மல்ஹர் சாலையில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு:
முதலில் இந்த தாக்குதலில் சில ராணுவ வீரர்கள் காயமடைந்ததாகவே தகவல் வெளியானது தொடர்ந்து சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து 4 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மேலும் ஒருவர் உயிரிழக்க மொத்த பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஆறு பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
STORY | Four soldiers injured as terrorists ambush security vehicle in J-K’s Kathua
— Press Trust of India (@PTI_News) July 8, 2024
READ: https://t.co/YZq2nedVNn
VIDEO: Security tightened following a terror attack on an Army vehicle in the remote Machedi area of Jammu and Kashmir's Kathua district earlier today, which left… pic.twitter.com/eH6fqYZdhB
தேடுதல் வேட்டை தீவிரம்:
தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பாதுகாப்புப் படையினர் உடனடியாக பதிலடி கொடுத்தனர், ஆனால் தீவிரவாதிகள் அருகிலுள்ள காட்டுக்குள் தப்பிச் சென்றுள்ளனர். கடைசியாக கிடைத்த தகவல் அடிப்படையில், தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது. அப்பகுதிக்கு மேலும் சில வீரர்களும் விரைந்துள்ளனர். இதனால், பதுங்கியுள்ள தீவிரவாதிகளை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ராகுல் காந்தி இரங்கல்:
தீவிரவாதிகள் தாக்குதல் தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “ ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவாவில் இந்திய ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. தாய் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த தியாகிகளுக்கு எனது உணர்வுபூர்வமான அஞ்சலியை செலுத்தும் அதே வேளையில், அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த ராணுவ வீரர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். நமது ராணுவத்தின் மீதான இந்த கோழைத்தனமான தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஒரு மாதத்திற்குள் நடந்த ஐந்தாவது தீவிரவாத தாக்குதல் நாட்டின் பாதுகாப்புக்கும் நமது ராணுவ வீரர்களின் உயிருக்கும் பெரும் அடியாகும். இடைவிடாத பயங்கரவாதத் தாக்குதல்களுக்குத் தீர்வு வலுவான நடவடிக்கையிலிருந்து வரும், வெற்றுப் பேச்சுகள் மற்றும் பொய்யான வாக்குறுதிகளால் அல்ல. இந்த துக்க நேரத்தில் நாங்கள் நாட்டோடு உறுதியாக நிற்கிறோம்” என பதிவிட்டுள்ளார்.