Udhayanidhi Stalin: உதயநிதியின் சனாதனம் குறித்த பேச்சு.. மனதை புண்படுத்துகிறது என உச்சநீதிமன்ற நீதிபதிக்கு பிரபலங்கள் கடிதம்..!
தமிழ்நாடு அரசின் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு சனாதன தர்மத்தை பின்பற்றுவோர் மனதை புண்படுத்துவதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு முன்னாள் நீதிபதிகள் உட்பட 262 பேர் கையெழுத்திட்ட புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு சனாதன தர்மத்தை பின்பற்றுவோர் மனதை புண்படுத்துவதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு முன்னாள் நீதிபதிகள் உட்பட 262 பேர் கையெழுத்திட்ட புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில், “நாங்கள் கையொப்பமிட்டுள்ள இந்த கடிதமானது இந்தியாவின் சாதாரண குடிமக்கள், குறிப்பாக சனாதன தர்மத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களின் இதயங்களிலும் மனதிலும் மிகுந்த வேதனையை ஏற்படுத்திய சமீபத்திய நிகழ்வு குறித்து உங்கள் கவனத்தை ஈர்க்க எழுதியுள்ளோம். சில நாட்களுக்கு முன்,தமிழக அரசின் அமைச்சராகப் பணியாற்றி வரும் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில், சில விஷயங்களை எதிர்க்க முடியாது, ஒழிக்க வேண்டும். டெங்கு, கொசு, மலேரியா போன்றவற்றை எதிர்க்க முடியாது. அதனை ஒழிக்க வேண்டும். அதே வழியில், சனாதனத்தை (சனாதன தர்மத்தை) நாம் எதிர்ப்பதை விட ஒழிக்க வேண்டும். மேலும், சனாதன தர்மம் பெண்களை அடிமைப்படுத்தியது என்றும், அவர்களை வீட்டை விட்டு வெளியே வர அனுமதிக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
நாட்டில் அதிகரித்து வரும் வெறுப்புப் பேச்சு சம்பவங்கள் குறித்து கவலை தெரிவித்த உச்சநீதிமன்றம், இதுபோன்ற வழக்குகளில் முறையான புகார்களை பதிவு செய்யும் வரை காத்திருக்காமல் தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்குமாறு அரசுகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. நாட்டின் மதச்சார்பற்ற தன்மையை பாதுகாக்க இதுபோன்ற நடவடிக்கை தேவை. தனது வெறுக்கத்தக்க பேச்சுக்கு உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்க மறுத்து விட்டார். மாறாக, அவர் தனது கருத்தை நியாயப்படுத்துகிறார்.
உதயநிதி ஸ்டாலினின் இந்தக் கருத்துக்களால் இந்த கடிதத்தில்கையொப்பமிட்ட நாங்கள் மிகுந்த கவலை கொள்கிறோம். இந்த கருத்துக்கள் இந்தியாவின் ஒரு பெரிய மக்கள்தொகைக்கு எதிரான வெறுப்பு பேச்சு மற்றும் ஒரு மதச்சார்பற்ற தேசமாக கருதும் இந்திய அரசியலமைப்பின் மையத்தை தாக்குவதாக உள்ளது. மேலும், தமிழக அரசு உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க மறுத்து, அவரது கருத்துகளை நியாயப்படுத்த முடிவு செய்ததால், சட்டத்திற்கு புறம்பானது.
எனவே உச்ச நீதிமன்றம் எந்த புகாருக்கும் காத்திருக்காமல் உதயநிதியின் இந்த வெறுப்புப் பேச்சுக் குற்றத்திற்கு எதிராக வழக்குத் தொடர வேண்டும். குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாநில அரசு நடவடிக்கை எடுக்க மறுத்து, நீதிமன்றத்தின் உத்தரவை அவமதிக்கும் வகையில் செயல்பட்டுள்ளதால், உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்” என அந்த கடித்ததில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தில் முன்னாள் நீதிபதிகள், வெளியுறவுத்துறை செயலாளர், காவல்துறை, உளவுத்துறை அதிகாரிகள் என பல மாநிலங்களைச் சேர்ந்த பிரபலங்களில் பெயர்கள் இடம் பெற்றுள்ளது.
மேலும் படிக்க: உதயநிதி கருத்துக்கு ஆதரவளிக்கும் திமுக - காங்கிரஸ்: மம்தாவின் பதிலால் I.N.D.I.A கூட்டணியில் சலசலப்பு?