Sanatanam Row: உதயநிதி கருத்துக்கு ஆதரவளிக்கும் திமுக - காங்கிரஸ்: மம்தாவின் பதிலால் I.N.D.I.A கூட்டணியில் சலசலப்பு?
சனாதனம் தொடர்பான அமைச்சர் உதயநிதியின் பேச்சு தொடர்பான கேள்விக்கு, மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பதிலளித்துள்ளார்.
மக்களை காயப்படுத்தும் கருத்துகளை யாரும் தெரிவிக்க வேண்டாம் என, சனாதன விவகாரத்தில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
உதயநிதி பேச்சு:
சென்னையில் நடைபெற்ற நிகழ்சி ஒன்றில் பேசிய அமைச்சர் உதயநிதி, “சனாதனம் சமத்துவத்திற்கும், சமூக நீதிக்கும் எதிராக உள்ளது. அது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்” என பேசியிருந்தார். இதன் மூலம் இந்து மக்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு உதயநிதி அழைப்பு விடுப்பதாக பாஜக குற்றம்சாட்டியது. தொடர்ந்து, பாஜகவை சேர்ந்த பல தலைவர்களும் உதயநிதிக்கு கடும் எதிர்ப்புகளை பதிவு செய்வதோடு, வழக்கும் தொடரப்பட்டுள்ளது. அயோத்தி சாமியார் என்பவர் அமைச்சர் உதயநிதிக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
மம்தா கண்டனம்?
இந்நிலையில் உதயநிதியின் பேச்சு தொடர்பாக எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A. கூட்டணியில் முக்கிய பங்கு வகிக்கும் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியிடம் கேள்வி எழுப்பட்டது. அதற்கு “கண்டனம் என்று சொல்வதற்குப் பதிலாக, பெரிய அல்லது சிறிய பகுதி மக்களை புண்படுத்தும் விதமான கருத்து எதையும் தெரிவிக்க வேண்டாம் என்று அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். சனாதனத்தை நான் மதிக்கிறேன். ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனி உணர்வுகள் உள்ளன. வேற்றுமையில் ஒற்றுமை' என்பது தான் நமது இந்தியாவின் பூர்வீகம். எந்த ஒரு பிரிவினரையும் புண்படுத்தும் எந்த விஷயத்திலும் நாம் ஈடுபடக்கூடாது” என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
காங்கிரஸ் சொன்னது என்ன?
உதயநிதி பேச்சு தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் பேசிய போது, “ஒரு கட்சியாக அனைத்து மதங்களையும் மதிப்பதாகக் கூறியதுடன், மற்றவர்களுக்கும் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க சுதந்திரம் உள்ளது. அனைத்து மதங்களுக்கும் சமமான மரியாதை என்பதே காங்கிரஸின் சித்தாந்தம்” எனவும் கூறினார். அதேநேரம், உதயநிதியின் கருத்துக்கு கர்நாடக அமைச்சரும், காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுன கார்கேவின் மகனுமான பிரியங்க் கார்கே ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர் “சமத்துவத்தை ஊக்குவிக்காத எந்தவொரு மதமும் நோயைப் போன்றது தான்” என பேசினார். இதேபோன்று காங்கிரசை சேர்ந்த ப.சிதம்பரம் போன்ற பல தலைவர்களும் உதயநிதியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
I.N.D.I.A. கூட்டணி:
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் நோக்கில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து I.N.D.I.A. கூட்டணியை உருவாக்கியுள்ளன. இதில் முக்கிய பங்கு வகிக்கும் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு, இந்துக்களின் வாக்கு வங்கி மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இதனால், உதயநிதியின் பேச்சு I.N.D.I.A. கூட்டணியில் சிறிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், இந்த சர்ச்சையை பயன்படுத்தி I.N.D.I.A கூட்டணியை சீர்குலைக்க பாஜக முயல்வதாக திமுகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.