Parliament Attack 2001: அசால்ட்டாக வந்த அம்பாசிடர் கார்.. மறக்க முடியாத நாடாளுமன்ற தாக்குதல்.. 22 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்ன?
22 ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் தீவிரவாதிகள் நடத்திய தினம் இன்று அனுசரிக்கப்பட்ட நிலையில், மீண்டும் நாடாளுமன்றத்தில் இரு இளைஞர்கள் அத்துமீறி நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
22 ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய தினம் இன்று அனுசரிக்கப்பட்ட நிலையில், மீண்டும் நாடாளுமன்றத்தில் இரு இளைஞர்கள் அத்துமீறி நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே 2001 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தாக்குதல் பற்றி காணலாம்.
பொதுவாக நாடாளுமன்ற வளாகத்தில் யாரும் அவ்வளவு எளிதில் நுழைய முடியாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் 2001 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி டிஎல்3 சிஜே 1527 என்ற பதிவு எண் கொண்ட ஒரு வெள்ளை நிற அம்பாசிடர் காரானது நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைந்தது. அதில் ஆயுதமேந்திய 5 பயங்கரவாதிகள் கைத்துப்பாக்கிகள், தொடர் குண்டுகள், வெடிபொருட்கள் ஆகியவற்றை அந்த வாகனங்களில் கொண்டு சென்றுள்ளனர்.
மேலும் டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள், காரின் முன்பக்கத்தில் அம்மோனியம் நைட்ரேட் கலந்து தயாரிக்கப்பட்ட அதிநவீன குண்டுகள் என பலவும் இருந்தது. அன்றைய நாள் நாடாளுமன்றத்தின் 11வது நுழைவு வாயிலில் குடியரசு துணை தலைவரை அழைத்து செல்வதற்காக கான்வாய் வாகனம் காத்திருந்தது. இந்த நுழைவு வாயில் மிக மிக முக்கிய பிரமுகர்கள் வந்து செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்படும் பாதையாகும். அவர்களின் பாதுகாப்பு வாகனங்கள் இந்த நுழைவு வாயிலின் வெளிப்பக்கம் நிறுத்தப்பட்டு சம்பந்தப்பட்ட பிரமுகர்கள் செல்லும் வாகனம் மட்டுமே அனுமதிக்கப்படும்.
இப்படியான நிலையில், அன்றைய நாளில் காலை 11.30 மணியளவில் இந்திய ராணுவ சீருடையில் இருந்தவர்களுடன் சிவப்பு சுழல் விளக்குடை கூடிய ஒரு அம்பாசிடர் கார் வந்தது. அதன் முன்பக்க கண்ணாடியில் மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கிய வாகன பதிவுக்கான ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. அந்நேரம் உள்துறை அமைச்சராக இருந்த எல்.கே.அத்வானிக்கு தேசிய பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. அதனால் அந்த வீரர்கள் வந்திருக்கலாம் என கருதிய பாதுகாவலர்கள் வாகனம் உள்ளே செல்ல அனுமதித்தனர்.
அந்த வாயிலில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் நாடாளுமன்ற பிரதான கட்டடத்தின் நுழைவு வாயில் அருகே குடியரசு துணை தலைவரின் கான்வாய் வாகனம் நின்றிருந்தது. இதனைப் பார்த்த அம்பாசிடர் காரில் வந்தவர்கள் நேராக செல்வதற்கு பதில் கான்வாய் இருந்த இடத்தை நோக்கி வாகனத்தை திருப்ப, அங்கிருந்த குடியுரசு துணை தலைவர்களின் பாதுகாவலர்கள் வாகனத்தை அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். இதனை சற்றும் எதிர்பாராத அம்பாசிடர் கார் ஓட்டுநர் காரை பின்னோக்கி எடுக்க முயன்றார். அப்போது குடியரசு துணைத் தலைவரின் பாதுகாப்பு தொடரில் இருந்து ஒரு கார் மீது உரசியது.
இதனால் ஆத்திரமடைந்த பாதுகாவலர்கள் அம்பாசிடர் கார் ஓட்டுநரின் சட்டையை பிடித்து திட்டியுள்ளார்கள். அப்போது திடீரென காருக்குள் ராணுவ சீருடையில் இருந்தவர்கள் சுட தொடங்கினார்கள். நிலைமை விபரீமாவதை உணர்ந்த அங்கிருந்து சிதறி ஓடி பதுங்கினர். பதில் தாக்குதல் நடத்த மத்திய ரிசர்வ் காவல் படையினரும் தயாரானார்கள். இரண்டு பக்கமும் தீவிர தாக்குதல் நடத்தப்பட்டது.
அரைமணி நேரம் நடந்த துப்பாக்கி சூட்டின் முடிவில் நுழைவு வாயில் 1 அருகே ஒருவரும், 5வது நுழைவு வாயில் அருகே ஒருவரும், 9வது வாயில் அருகே 3 பேரும் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடி மருந்துகள், தோட்டாக்கள், ஆவணங்கள் என பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் துப்பு துலங்கியது சம்பந்தப்பட்ட அந்த அம்பாசிடர் காரால் தான்.
அந்த காரை தான் ஒருவரிடம் விற்றதாக நபர் ஒருவர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க, இந்த தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் யார், யார் என்ற தகவல்கள் தெரிய வந்தது. இதில் சம்பந்தப்பட்ட முக்கிய நபரான அஃப்சல் குரு தூக்கிலிடப்பட்டார். இன்றைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ள சிலர் அன்றைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தனர். அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத சம்பவமாக நாடாளுமன்ற தாக்குதல் பதிவாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.