SI of Varkala: அன்று ஐஸ் விற்பனை.. இன்று காவல் அதிகாரி - வைராக்கியத்தால் வென்ற சிங்கப்பெண்!
ஆச்சரியமான விசயம் என்னவென்றால், எந்த ஊரில் எலுமிச்சை பழமும், ஐஸ்கிரீமும் கூவி கூவி விற்றுக்கொண்டிருந்தாரோ, அதே ஊரில் இன்று காவல் துறை சார்பு ஆய்வாளராக பணியாற்றும் வாய்ப்பை பெற்றுள்ளார்
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் காஞ்சிரங்குளத்தைச் பூர்வீகமாகக் கொண்டவர் எஸ்.பி.,ஆனி சிவா(31). கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் போது, முதலாம் ஆண்டிலேயே ஒருவரை காதலித்தார். பெற்றோருக்கு விஷயம் தெரியவர, கடுமையான எதிர்ப்பு. குடும்பத்தினரை மீறி முதலாம் ஆண்டு மாணவி, காதல் கணவரை கரம் பிடித்து திருமணம் செய்து கொண்டார். பெற்றோர் ஏற்காத நிலையில், காதல் கணவருடன் இன்பமாய் வாழ்க்கையை துவக்கினார் ஆனி. ஆனால் அது நீடிக்கவில்லை. காதல் கசக்க, காதல் கணவன் டார்ச்சர் ஆரம்பமானது. இரண்டே ஆண்டுகளில் காதல் முறிந்து, எட்டு மாத கைக்குழந்தையுடன் கணவன் வீட்டை விட்டு வெளியேறினார் ஆனி. ஆதரவு தேடி பெற்றோர் வீட்டுக்குச் சென்ற அவரை பெற்றோரும் ஏற்வில்லை.
என்ன செய்வது என தெரியாமல், கை குழந்தையுடன் தவித்தார் ஆனி. இறுதியில் தனது பாட்டி வீட்டில் கெஞ்சி கதறி தஞ்சம் புகுந்தார். அது சுற்றுலா பயணிகள் அதிகம் குவியும் வர்கலா. எலுமிச்சை பழம் விற்பது, திருவிழாக்களில் ஐஸ்கிரீம் விற்பது, சுற்றுலாப்பயணிகளுக்கு குளிர்பானம் விற்பது என கிடைத்த வேலைகளை செய்து தன்னையும், தன் குழந்தையையும் பார்த்துக் கொண்டார். இடையில் கல்வியையும் விடாமல் பார்த்துக் கொண்டார். ஏதாவது ஒரு நல்ல வேலை வாங்கி இந்த சமூகத்தில் தன்னை முன்னேற்றி காட்ட வேண்டும், தன்னை இழிவாக பார்த்தவர்கள் ஆச்சரியப்பட வேண்டும் என்பதை வைராக்கியமாக கொண்டிருந்தார் ஆனி. போலீஸ் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அவர், தற்போது எஸ்.ஐ.,ஆக பணி வாய்ப்பை பெற்றுள்ளார்.
இதில் ஆச்சரியமான விசயம் என்னவென்றால், எந்த ஊரில் எலுமிச்சை பழமும், ஐஸ்கிரீமும் கூவி கூவி விற்றுக்கொண்டிருந்தாரோ, அதே ஊரில் இன்று காவல் துறை சார்பு ஆய்வாளராக பணியாற்றும் வாய்ப்பை பெற்றுள்ளார். 14 ஆண்டுகளுக்குப் பின் தன் கம் பேக் குறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்று பகிர்ந்துள்ளார். ‛வர்கலா சிவகிரியில் யாத்திரைக்கு வரும் மக்களுக்கு எலுமிச்சை மற்றும் ஐஸ்கிரீம் விற்ற நான், இன்று அதே பகுதிக்கு எஸ்.ஐ., ஆக திரும்பியிருக்கிறேன் ,’என நெகிழ்ந்துள்ளார். கேரள காவல்துறையின் அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கத்தில், ஆனியின் அந்த பதிவு பகிரப்பட்ட, தற்போது இந்தியா முழுவதும் பாராட்டை பெற்று வருகிறது.
இளம் வயதில் காதல் கணவரால் ஏமாற்றப்பட்டு, பின்னர் அடைக்கலம் இன்றி கடும் சிரமங்களுக்கு மத்தியில் முன்னேறியுள்ள ஆனியை ஆதரித்து சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், காங்கிரஸ் எம்.பி., சசிதரூர் உள்ளிட்ட பலரும் ஆனியை ஆதரித்து தங்கள் பதிவில் பகிர்ந்து வருகின்றனர். இதனால் இந்திய அளவில் பலருக்கும் உந்து சக்தியாக ஆனி மாறியுள்ளார். பெண்களுக்கு நெருக்கடி வரும் போது, அதை எதிர்த்து எதிர்நீச்சல் போட்டால் வெற்றி நிச்சயம் என்பதற்க உதாரணமாக திகழ்ந்துள்ள ஆனியை வர்க்கலா தலைநிமிர்ந்து பார்க்கிறது.