kashmir Terrorist: 2022ல் காஷ்மீரில் அமைதி நிலவரம் எப்படி...? தீவிரவாதிகள் தாக்கம் அதிகமா..? குறைவா..? ஏ.டி.ஜி.பி. விஜயகுமார் பதில்
நடப்பாண்டில் காஷ்மீர் எல்லையில் சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் விவரங்களை, காஷ்மீர் ஏ.டி.ஜி.பி. விஜயகுமார் வெளியிட்டுள்ளார்.
இந்திய ராணுவத்தின் கடும் பாதுகாப்பிற்கு மத்தியிலும், பாகிஸ்தான் தீவிரவாதிகள் அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைவது என்பது தொடர்கதையாகத்தான் உள்ளது. அந்த சமயங்களில் இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட கடும் மோதல்கள் நிகழ்கின்றன. இதில் தீவிரவாதிகள் கொல்லப்படுவதோடு, காயங்களுடன் சிலர் கைது செய்யப்படுகின்றனர். எதிர்பாராத விதமாக இந்திய ராணுவத்திற்கும் அதில் இழப்புகள் ஏற்படுவதுண்டு.
விஜயகுமார் செய்தியாளர் சந்திப்பு:
அந்த வகையில் நடப்பாண்டில் ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் உடன் நடைபெற்ற மோதல்கள் தொடர்பாக, காஷ்மீர் ஏ.டி.ஜி.பி. விஜயகுமார் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது, காஷ்மீரில் 2022-ம் ஆண்டில் 93 என்கவுன்டர்கள் நடத்தப்பட்டன. இதில் 172 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் 42 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். அதில் 108 பேர் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர்கள். 35 பேர் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள். 22 பேர் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகள் ஆவர். மேலும், அல்-பத்ர் அமைப்பை சேர்ந்த 4 தீவிரவாதிகளும் மற்றும் அன்சார் கஜ்வத் உல்-ஹிந்த் அமைப்பை சேர்ந்த 3 தீவிரவாதிகளும் ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர்.
தீவிரவாதிகள் சேர்ப்பு குறைவு:
கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பாண்டில் தீவிரவாத அமைப்புகளுக்கு ஆட்கள் எடுப்பது காஷ்மீரில் குறைந்துள்ளது. குறிப்பாக காஷ்மீரில் இருந்து தீவிரவாத அமைப்புகளில் சேர்வது நட்டப்பாண்டில், 37 சதவிகிதம் குறைந்துள்ளது. 2022ல் காஷ்மீரில் இருந்து 100 பேர் தீவிரவாத அமைப்பில் இணைந்த நிலையில், அவர்களில் 74 பேர் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் இணைந்தனர். அவ்வாறு, தீவிரவாத அமைப்பில் இணைந்தவர்களில் 65 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
360 ஆயுதங்கள் பறிமுதல்:
இந்த ஆண்டு கொல்லப்பட்ட 65 புதிதாக சேர்க்கப்பட்டதீவிரவாதிகளில், 58 பேர் தீவிரவாதிகளாக மாறிய முதல் மாதத்திலேயே கொல்லப்பட்டனர். 18 பேர் தலைமறைவாக இருந்து தீவிரவாதிகளாக செயல்பட்டு வருகின்றனர். நடப்பாண்டில் தீவிரவாதிகளால் அப்பாவி மக்கள் 29 பேர் கொல்லப்பட்டு உள்ளனர், அவர்களில் 3 பேர் காஷ்மீர் பண்டிட் என தெரிவித்தார். இதனிடையே, கொல்லப்பட்ட மற்றும் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளிடமிருந்து இருந்து 360 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
121 AK தொடர் துப்பாக்கிகள், 08 M4 கார்பைன் மற்றும் 231 கைத்துப்பாக்கிகள் ஆகியவை அடங்கும். அதோடு, சரியான நேரத்தில் IED, ஸ்டிக்கி வெடிகுண்டுகள் மற்றும் கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டதால் பெரிய தீவிரவாத சம்பவங்கள் தவிர்க்கப்பட்டன கடந்த ஓராண்டில் தெருக்களில் எந்த வன்முறையும் வெடிக்கவில்லை, என்கவுன்ட்டர் தளங்களில் கல் வீச்சு சம்பவங்கள் இல்லை, இணைய முடக்கம் இல்லை, கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் இறுதி ஊர்வலம் எதுவும் நடைபெறவில்லை என விஜயகுமார் பெருமிதம் தெரிவித்துள்ளார்.