ம.பியில் தினமும் குடித்துவிட்டு பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள்! பாழாய்ப்போகும் மாணவர்களின் கல்வி!
மத்திய பிரதேசத்தில் பழங்குடியின மாணவர்கள் அதிகம் உள்ள மாவட்டத்தில் தினமும் ஆசிரியர்கள் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வரும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கிராமப்புறங்களில் கல்வி முழு அளவில் சென்று சேர்வதற்கு மத்திய மற்றும் அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு, கேரளா போன்ற தென்னிந்திய மாநிலங்களில் கிராமப்புற மாணவர்களின் கல்வி தரமானதாக அமைந்துள்ளது. ஆனால், வட இந்தியாவைப் பொறுத்தமட்டில் கிராமப்புறங்களில் கல்வி வளர்ச்சி என்பது சற்று பின்தங்கியதாகவே இருக்கிறது.
குடித்துவிட்டு பள்ளி வரும் ஆசிரியர்கள்:
வட இந்தியாவின் முக்கியமான மாநிலங்களில் ஒன்றாக மத்திய பிரதேசம் உள்ளது. இந்த மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் மாவட்டமாக தின்டோரி உள்ளது. பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் மாவட்டமாக இங்கு பழங்குடியின மாணவர்களுக்காக ஏராளமான பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.
ஆனால், இந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் முறையாக வருவதில்லை என்றும், அவர்கள் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வருவதாகவும் குற்றச்சாட்டுகள் இருக்கிறது. மாணவர்களும் இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து முன்வைத்து வந்துள்ளனர். இதையடுத்து, அந்த மாநில பழங்குடியின துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி:
தின்டோரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 15 ஆசிரியர்கள் தினமும் பள்ளிக்கு மது அருந்திவிட்டு வருவது தெரிய வந்துள்ளது. இவர்கள் தாமதமாக பள்ளிக்கு வருவதும், மது போதையில் மாணவர்களுக்கு பாடம் எடுப்பதும், பள்ளி முடியும் முன்பே புறப்பட்டுச் செல்வதும் என வாடிக்கையாக இருந்ததும் அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர்கள் மட்டுமின்றி இன்னும் சில ஆசிரியர்கள் விதிமீறலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. 9 ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக பள்ளிக்கே வராமல் இருந்து வந்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. ஆசிரியர்களின் இந்த மோசமான செயலால் மாணவர்களின் கல்வி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிய வந்துள்ளது. இந்த அதிர்ச்சிகரமான தகவலால் அந்த மாநில கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக திண்டோரி பழங்குடியின துறை உதவி ஆணையர் சந்தோஷ் சுக்லா கூறும்போது, மாவட்டங்களில் உள்ள அரசுப்பள்ளிகளில் கல்வியின் தரத்தை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதுபோன்றவற்றை கண்டறிய விசாரணை அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: 3ஆம் வகுப்பு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை: சிக்கிய 3 சிறுவர்கள்! ஆந்திராவில் அதிர்ச்சி
மேலும் படிக்க: Rahul Gandhi: மணிப்பூர் போங்க; பிரச்சினைகளை கேளுங்க: பிரதமருக்காக வீடியோ வெளியிட்ட ராகுல்