Jalgaon Train Tragedy: ரயிலில் பரவிய வதந்தி தீ..! அடுத்தடுத்து குதித்த பயணிகள், ரயில் மோதி 13 பேர் உயிரிழப்பு
Jalgaon Train Tragedy: மகாராஷ்டிராவின் ஜல்கான் பகுதியில் பயணித்த ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுதள்ளதாக பரவிய வதந்தியால், கீழே குதித்த 13 பேர் மற்றொரு ரயில் இடித்து உயிரிழந்துள்ளனர்.

Jalgaon Train Tragedy: விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
13 பேர் உயிரிழப்பு:
மகாராஷ்டிராவின் ஜல்கான் பகுதியில் சென்றுகொண்டிருந்த ரயிலில் தீ பரவுவதாக ஒரு வதந்தி ஏற்பட்டுள்ளது. இதனால் பதற்றமடைந்த பயணிகள் உயிரை காப்பாற்றிக் கொள்ளும் நோக்கில் ஓடும் ரயிலில் இருந்து குதித்துள்ளனர். அப்போது எதிரே வந்த மற்றொரு ரயில் மோதியில் பல பயணிகள் தூக்கி வீசப்பட்டுள்ளனர். அதில் உடல் சிதறி 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டன. இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 13 ஆக உயர்ந்துள்ளது.
நடந்தது என்ன?
மும்பையில் இருந்து 400 கிமீ தொலைவில் உள்ள பச்சோரா அருகே உள்ள மஹேஜி மற்றும் பர்தாட் நிலையங்களுக்கு இடையே விபத்து நடந்தது. லக்னோ-மும்பை புஷ்பக் எக்ஸ்பிரஸ், லக்னோ-மும்பை இடையே இயக்கப்படும் டெய்லி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகும். மாலை 5 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் பரவ, அதில் பயணித்த யாரோ ஒருவர் திடீரென சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியுள்ளார். உடனே புஷ்பக் எக்ஸ்பிரஸில் இருந்த சில பயணிகள் அருகே இருந்த தண்டவாளத்தில் இறங்கியுள்ளனர். அப்போது, பெங்களூரில் இருந்து டெல்லி நோக்கிச் சென்ற கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரயில், பயணிகள் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இறந்த 13 பேரில், 7 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில், ஆறு பேர் குறித்து எந்த தகவலும் இல்லை. காணாமல் போன உடல் உறுப்புகள் தேடுதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.
”தீ” உண்மையா?
"புஷ்பக் எக்ஸ்பிரஸின் பெட்டிகளில் ஒன்றின் உள்ளே 'ஹாட் ஆக்சில்' அல்லது 'பிரேக்-பைண்டிங்' (ஜாம்மிங்) காரணமாக தீப்பொறிகள் ஏற்பட்டுள்ளது. இதனால் சில பயணிகள் பீதியடைந்தனர். அவர்களில் யாரோ சங்கிலியை இழுக்க, பதற்றமடைந்த பயணிகளில் சிலர் கீழே குதித்தனர் என்பது எங்கள் முதற்கட்ட தகவல். அதே நேரத்தில், கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரயில் தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது," என்று மூத்த ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நிவாரணம் அறிவுஇப்பு
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், "மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கானில் ரயில் தண்டவாளத்தில் நடந்த சோகமான விபத்தால் வேதனை அடைந்துள்ளேன். உயிரிழந்த குடும்பத்தினருக்கு எனது இதயப்பூர்வமான இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர்" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், மாவட்ட நிர்வாகத்துடன் தொடர்பில் இருப்பதாகவும், அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்தார். காயமடைந்த பயணிகளின் சிகிச்சைக்கான முழுச் செலவையும் மாநில அரசே ஏற்கும் என்றும் முதலமைச்சர் மேலும் தெரிவித்தார். ஜல்கான் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1.5 லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும், சிறு காயம் அடைந்தவர்களுக்கு ரூ.5 ஆயிரமும் வழங்கப்படும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

