அடுத்தடுத்து மயங்கி விழுந்த மாணவர்கள்! மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் - மும்பையில் ஷாக்!
மகாராஷ்டிராவில் உள்ள பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Maharastra School: மகாராஷ்டிராவில் உள்ள பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் புறநகர் பகுதியில் உள்ள ஷஹாபூர் தாலுகாவில் தொடக்க மற்றும் மேல்நிலைப்பள்ளி (பழங்குடி குழந்தைகளுக்கான குடியிருப்புப் பள்ளி) ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1 முதல் 10ஆம் வகுப்பு வரை 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இவர்களுக்கு நேற்று மதிய உணவு வெளி ஹோட்டலில் இருந்து வழங்கப்பட்டது. பட்சாய் கிராமவாசி ஒருவரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வெளியில் இருந்து மாணவர்களுக்கு உணவு கொண்டு வரப்பட்டது. மாணவர்களுக்கு புலாவ் மற்றும் இனிப்பு உணவான குலாப் ஜாமூன் வழங்கப்பட்டது.
இதனை சாப்பிட்ட மாணவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், பள்ளி ஊழியர்கள் பாதிக்கப்பட்ட மாணவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், 109 மாணவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். ஏழு மாணவர்களுக்கு மட்டும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனை அடுத்து, அலட்சியமாக இருந்த பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவுப் பொருட்களின் மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்குப்பதிவு:
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ”இந்த சம்பவம் தொடர்பாக பள்ளிக் கண்காணிப்பாளர், தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர், மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் மற்றும் வெளியில் இருந்து உணவு கொண்டு வந்தவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 109 மாணவர்களில், ஏழு பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.
குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. உயர் அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று மாணவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்" என்று தெரிவித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, பீகார் மாநிலம் பார்பிஸ்கஞ்ச் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச மதிய உணவில் பாம்பு ஒன்று இறந்து கிடந்த நிலையில் சத்துணவை சாப்பிட்ட 30க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க