![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Unemployment | வேலைவாய்ப்பு இல்லை.. அதிகரிக்கும் தற்கொலை.. வருத்தமடைய வைக்கும் புள்ளிவிவரம்!
தமிழ்நாட்டில் மட்டும் 2016-19 வரையிலான நான்காண்டுகளில் 1,118 பேர் வேலைவாய்ப்பின்மை காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளானர்
![Unemployment | வேலைவாய்ப்பு இல்லை.. அதிகரிக்கும் தற்கொலை.. வருத்தமடைய வைக்கும் புள்ளிவிவரம்! 10,294 cases of suicide due to unemployment were reported during the period 2016 -19 centre reply in parliament Unemployment | வேலைவாய்ப்பு இல்லை.. அதிகரிக்கும் தற்கொலை.. வருத்தமடைய வைக்கும் புள்ளிவிவரம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/02/e29f8cdefa92635eba34b87b5464eb69_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் படி 2016ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் வேலைவாய்ப்பின்மை காரணமாக 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் 10,294 பேர் தற்கொலை செய்து கொண்டதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. கொரோனா பெருந்தொற்று பரவல் தொடங்குவதற்கு முன்பாகவே, 2019ல் வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தினால் தற்கொலை செய்து கொண்டோரின் எண்ணிக்கை 24% (2016-ல் ஒப்பிடுகையில்) சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது.
தமிழ்நாட்டில் மட்டும் 2016-19 வரையிலான நான்காண்டுகளில் 1,118 பேர் வேலைவாய்ப்பின்மை காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளானர். தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்து அரசுப் பணிக்காகக் காத்திருப்போரின் எண்ணிக்கை மட்டும் 67.76 லட்சமாக உள்ளது. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 58 வயதைக் கடந்துவிட்டனர் என்பது வேதனை தரும் உண்மை. கலை, அறிவியல் படிப்பு, வணிகம், பொறியியல் படிப்பு, வேளாண்மை உள்ளிட்டப் பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்ற 9.34 லட்சம் பேரும் அரசுப் பணிக்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பித்துக் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள்தொகை அதிகம் கொண்ட கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. அதேபோன்று, வடகிழக்கு மாநிலங்களில் குறைந்தளவிலான மக்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கொரோனா பெருந்தொற்றின் காரணமாக அதிக அளவிலான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பினர். குறிப்பாக, பீகார், உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அதிகம் பாதிப்படைந்தனர்.
புள்ளியியல் மற்றும் திட்ட செயலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகத்தால் வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பின்மை குறித்து வருடாந்திர மற்றும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொழிலாளர் ஆய்வு நடத்தப்படுகிறது (Periodic Labour Force Surveys , annual PLFS data ). ஏப்ரல்-ஜூன் 2020-க்கான குறிப்பிட்ட கால இடைவெளி தொழிலாளர் ஆய்வின் காலாண்டு அறிக்கையின் படி, ஜூலை-செப்டம்பர் 2019, அக்டோபர்-டிசம்பர் 2019, ஜனவரி-மார்ச் 2020 மற்றும் ஏப்ரல்-ஜூன் 2020 காலாண்டுகளுக்கான 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை விகிதம் 8.3%, 7.8%, 9.1% மற்றும் 20.8% ஆக உள்ளது. 2018-19-ஆம் ஆண்டுக்கான வருடாந்திர தொழிலாளர் ஆய்வின் படி, 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் நிலவும் வேலைவாய்ப்பின்மை விகிதம் 5.8 சதவீதமாகும். அதற்கு பிந்தைய ஆண்டுக்கான தரவுகள் மத்திய அரசிடம் இல்லை.
இந்தியாவில் வேலையின்மை வீதமானது நாடளாவிய பொது முடக்கத்தால் உச்சபட்சமாக கடந்த ஆண்டு மே மாதத்தில் 23.5 சதவீதத்துக்குச் சென்றது. அதைவிட அதிகமாக கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் கொண்டுபோய் விட்டுள்ளது என்றும் இதிலிருந்து மீள்வதற்கும் வழக்கமான சராசரி பொருளாதார ஆக்கச் செயல்பாட்டுக்குத் திரும்புவதற்கும் கணிசமான காலம் எடுக்கும்; மாநிலங்கள் மெதுமெதுவாகத்தான் அந்த இடத்தை நோக்கி நகரத் தொடங்கும் என்றும் பொருளியல் வல்லுநர்கள் கணிக்கின்றனர்.
இந்தியப் பொருளியல் கண்காணிப்பு மையம்- சி.எம்.ஐ.இ.-யின் முதன்மைச் செயல் அலுவலர் மகேஷ் வியாஸ் இது பற்றிக் கூறுகையில், “ வேலையை இழந்தவர்கள் மீண்டும் இன்னொரு வேலையைப் பெறுவது கடினமானதுதான். இதே சமயம், அமைப்பாக்கப்படாத துறைகளில் பணியாற்றியவர்கள் ஓரளவுக்கு வேகமாக வேலையைப் பெற்றுவிட முடியும்; அமைப்பாக்கப்பட்ட துறைகளில் பணியாற்றுவோருக்கும் சிறந்த தரமான நிலையில் உள்ள வேலைகளை விரும்புவோருக்கும் இது காலம் பிடிக்கக்கூடியது. அதிகபட்சம் ஓர் ஆண்டுகூட ஆகலாம்.” என்று தெரிவித்தார்.
மேலும், வாசிக்க:
67 லட்சம்.. இது தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்து காத்திருப்போரின் எண்ணிக்கை!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)