முன்னாள் அமைச்சர் காமராஜ் நண்பரின் கல்வி நிறுவனத்தில் அதிரடி சோதனை - 2 ஹார்ட் டிஸ்க் பறிமுதல்
சோதனை நடத்தியதில் அவரது கல்வி நிறுவனத்தில் இருந்த இரண்டு ஹார்ட் டிஸ்களை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கைப்பற்றி சந்திரகாசனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
திருத்துறைப்பூண்டியில் முன்னாள் அமைச்சர் காமராஜ் நண்பரான சந்திரகாசன் நடத்தி வரும் கல்வி நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இரண்டு ஹார்ட் டிஸ்கை கைப்பற்றினர்.
தமிழக முன்னாள் உணவுத்துறை அமைச்சரும் திருவாரூர் மாவட்ட அதிமுக செயலாளர் காமராஜ் மற்றும் அவருடைய நண்பர்கள் ஆதரவாளர்கள் என அவர்களுக்கு சொந்தமான வீடுகள் மற்றும் தொழில் நடைபெறும் இடங்கள் என 52 இடங்களில் கடந்த 8ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வடக்கு வீதியில் உள்ள முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை மதுரை டிஎஸ்பி தலைமையில் 10க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதே போன்று திருவாரூரில் உள்ள அம்மா பேரவை மாவட்ட செயலாளர் கலியபெருமாள் இல்லம் மற்றும் மன்னார்குடி அதிமுக நகரச் செயலாளர் குமார் இல்லம் மற்றும் தஞ்சாவூரில் கட்டப்பட்டு வரும் மருத்துவமனை நன்னிலம் அதிமுக ஒன்றிய செயலாளர் அன்பழகன் முன்னாள் அமைச்சர் காமராஜ் உடைய நெருங்கிய நண்பர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அன்று ஒரு நாள் முழுவதும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையின் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் முடிவில் காமராஜ் மற்றும் அவர்களுடைய ஆதரவாளர்கள் இடங்களில் இருந்து 963 சவரன் தங்க நகைகள் 15 லட்சம் ரொக்க பணம் மற்றும் கணினி ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினை தெரிவித்தனர். இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இயங்கி வரும் முன்னாள் அமைச்சர் காமராஜ் அவர்களுடைய நண்பர் சந்திரகாசன் கல்வி நிறுவனத்தை கடந்து எட்டாம் தேதி லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை செய்ய சென்ற பொழுது கல்வி நிறுவனம் பூட்டி இருந்தது அதனையடுத்து அந்த கல்வி நிறுவனத்திற்கு லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சீல் வைத்து சென்றனர்.
இந்நிலையில், நேற்று சந்திரகாசன் ஊர் திரும்பிய நிலையில் இரவு அவரது கல்வி நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்பு துறை காவல்துறையினர் சந்திரகாசன் முன்னிலையில் அவரது கல்வி நிறுவனத்திற்கு வைக்கப்பட்டிருந்த சீலை அகற்றி அதிரடி சோதனை மேற்கொண்டனர். சோதனை நடத்தியதில் அவரது கல்வி நிறுவனத்தில் இருந்த இரண்டு ஹார்ட் டிஸ்களை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கைப்பற்றி சந்திரகாசனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். முன்னாள் அமைச்சர் காமராஜூக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு அவருடைய சொத்துக்கள் குறித்த விவரங்கள் குறித்து சந்திரகாசனிடம் காவல்துறையினர் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. இரவு வரை நடைபெற்ற சோதனையில் இரண்டு ஹார்டுகளை மட்டும் பறிமுதல் செய்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்