தருமபுரியில் குழந்தையின் பாலினம் கண்டறியும் கும்பல்! சுகாதாரத் துறை இணை இயக்குனரிடம் சிக்கியது எப்படி?
பென்னாகரம் அருகே மலை அடிவாரத்தில், வீட்டில் வைத்து நடமாடும் ஸ்கேன் இயந்திரம் மூலம் கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை தெரிவித்த கும்பலைச் சேர்ந்த 4 பேரை சுகாதார துறையினர் கையும், களவுமாக பிடித்தனர்.
தருமபுரி மாவட்டத்தில் நடந்து வந்த பெண் சிசுக் கொலைகளை தடுக்க தமிழக அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால் பெண் சிசுக் கொலை மிகக் கணிசமான அளவில் தடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை கண்டறிந்து, கருக்கலைப்பு செய்யும் கும்பல், கடைத்தரகர்கள் மூலம் தருமபுரி மாவட்டத்தில் முகாமிட்டு மலை மற்றும் வனப் பகுதியில் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கருவிலே பாலினத்தை கண்டுபிடிக்கும் கும்பல்:
கடந்த ஓராண்டில் தருமபுரி அடுத்த ராஜாபேட்டை, காரிமங்கலம், கம்பைநல்லூர், பரிகம் ஆகிய 4 இடங்களில் இவ்வாறு செயல்பட்ட கும்பல் சுகாதாரத் துறையினரின் நடவடிக்கையால் கைது செய்யப்பட்டனர். மேலும் ஸ்கேன் இயந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆனால் கருவின் பாலினம் தெரிவிக்கும் கும்பல் மீண்டும் தருமபுரி மாவட்டத்தில் இயங்குவது சுகாதாரத் துறையினருக்கு தெரிய வந்தது. இதனை தொடர்ந்து இடைத்தரகர்களின் தொடர்பு எண்களை சேகரித்து,தொடர் கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.
சிக்கியது எப்படி?
இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த நெற்குந்தி முத்தப்பா நகரைச் சேர்ந்த லலிதா என்பவர், அருகிலுள்ள நத்த தள்ளி அரசு நடுநிலைப் பள்ளியில் சமையலராக பணியாற்றிக் கொண்டு, கருக்கலைப்பு கும்பலுடன் தொடர்பு வைத்துக்கொண்டு கர்ப்பிணிகளை ரகசிய இடத்திற்கு அழைத்து வருவதாக ஊரக நலப் பணிகள் துறை இணை இயக்குநர் மருத்துவர் சாந்திக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து லலிதாவின் செல்போன் நம்பருக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அப்பொழுது லலிதா இன்று ஸ்கேன் செய்வதாகவும் சொல்லுகின்ற இடத்திற்கு பணத்துடன் வருமாறு தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சுகாதார துறையில் பணியாற்றுகின்ற செவிலியரை கருவில் உள்ள சிசுவின் பாலினம் கண்டறிவதற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அப்பொழுது பென்னாகரம் செல்லும் வழியில் உள்ள சோம்பட்டி என்ற இடத்திற்கு லலிதா வரவழைத்து இருசக்கர வாகனத்தில் நெற்குந்தி அடுத்த முத்தப்பா நகருக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு, முத்தப்பா நகரில் சிறிய மலை அடிவாரத்தில் அமைந்துள்ள தனி வீட்டில் ஸ்கேன் இயந்திரம் வைத்து , கள்ளக்குறிச்சியை சேர்ந்த முருகேசன் என்பவர், கர்ப்பிணி பெண்களுக்கு கருவில் உள்ள சிசிவின் பாலினம் கண்டறிந்து தெரிவித்துள்ளார். இதற்காக ஒருவருக்கு ரூ.13 ஆயிரம் பெற்றுக் கொண்டு 5 நிமிடத்தில் கருவின் பாலினம் கண்டறிந்து தெரிவித்தது அனுப்பியுள்ளனர்.
ஆனால் கருவின் பாலினம் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை அறிவதற்கு மருத்துவமனை சென்றால் தனியார் மருத்துவமனையாக இருந்தாலும் அரசு மருத்துவமனையாக இருந்தாலும் கர்ப்பிணிகளை முழுமையாக பரிசோதனை செய்து அதிக அளவில் தண்ணீர் அருந்த செய்து அதன் பிறகு இந்த பரிசோதனை செய்யப்படுகிறது. இதற்கு ஒரு கர்ப்பிணிகளை பரிசோதனை செய்து முடிப்பதற்கு மூன்று முதல் நான்கு மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் இருந்து வருகிறது. ஆனால் இது பன்ற முறையாக மருத்துவம் படிக்காமல்
இணையதளங்களில் ஸ்கேன் இயந்திரத்தை வாங்கி சிசுவின் பாலினம் கண்டறியும் கும்பல், ஒரு கர்ப்பிணிக்கு ஐந்து நிமிடங்களில் கருவின் பாலினத்தை தெரிவித்து அனுப்பி விடுகின்றனர்.
கையும், களவுமாக பிடித்த சுகாதார இணை இயக்குனர்:
மேலும் நெக்குந்தி அடுத்த முத்தப்பா நகர் வீட்டில் ஸ்கேன் செய்து கொண்டிருந்த போதே, இணை இயக்குனர் சாந்தி தலைமையிலான குழுவினர, கும்பலை கையும் களவுமாக பிடித்தனர். இதனைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் முருகேசன் முறையாக மருத்துவம் படிக்காமல் இயந்திரம் வாங்கிக் கொண்டு தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் போன்ற பகுதிகளில் அவ்வப்போது சென்று ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் கர்ப்பிணிகளை வரவழைத்து கருவில் உள்ள சிசுவின் பாலினம் கண்டறிந்து தெரிவித்து வருவதும், கருவை கலைப்பதற்கு திருப்பத்தூருக்கு அனுப்பி வைப்பதும் தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து பென்னாகரம் காவல் துறையினரை வரவழைத்து கருவில் உள்ள சிசுவின் பாலினம் கண்டறிந்து தெரிவித்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த முருகேசன், இடைத்தரகர் லலிதா, முருகேசன் உடன் வந்த நடராஜன், கார் ஓட்டுநர் சின்ராஜ் உள்ளிட்ட நான்கு பேரையும் ஒப்படைத்தனர். மேலும் நான்கு பேரையும் கைது செய்த காவல் துறையினர் அவர்களிடமிருந்த ஸ்கேன் இயந்திரம், பணம், சொகுசு கார், இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
போலீசார் வலைவீச்சு:
மேலும், ஸ்கேன் பார்க்கும் பணியில் ஈடுபட்டு தற்போது கைதாகியுள்ள கள்ளக்குறிச்சியை சேர்ந்த முருகேசன், இதே குற்றத்திற்காக சில மாதங்கள் முன்பு கைதாகி ஜாமீனில் வெளிவந்துள்ளார். அப்பொழுது நீதிமன்றத்தில் இனிமேல் இதுபோன்று செய்ய மாட்டேன் என எழுத்துப் பூர்வமாக உத்தரவாதம் கொடுத்து விட்டு வந்துள்ளார். ஆனால் மீண்டும் இதே குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளார். மேலும், செல்போன் நம்பரை வைத்து, இந்த கும்பலுடன் தொடர்புடைய மற்றவர்களையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
தருமபுரி மாவட்டத்தில் ஏற்கனவே கடந்த கரண்டாண்டில் தருமபுரி, கம்பைநல்லூர், காரிமங்கலம், தொப்பூர் பகுதிகளில் நான்கு முறை இது போன்ற சட்டவிராத கருக்கலைப்பு கும்பல் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாததால், இது போன்ற சம்பவம் தற்பொழுது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தை தடுப்பதற்கு சட்ட விரோத கருக்கலைப்பு சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளருக்கு பரிந்துரை செய்யப்படுவதாக இணை இயக்குனர் சாந்தி தெரிவித்துள்ளார்.