ஜூன் 15 இன்று உலக முதியோர் அவமதிப்பு விழிப்புணர்வு தினம்
ஜூன் 15 இன்று உலக முதியோர் அவமதிப்பு விழிப்புணர்வு தினம்: இந்தியாவில் முதியோருக்கு எதிரான கொடுமைகள் 50 சதவீதம் அதிகரிப்பு.. மேம்பாட்டு அமைப்புகள் வேதனை
குழந்தைகளை தெய்வத்துக்கு நிகரானவர்கள் என்பார்கள் அதேபோல் முதியவர்களை குழந்தைகள் என்று சொல்வார்கள். இந்த வகையில் பார்த்தால் மழலைகளும், முதியவர்களும் தெய்வத்தின் அம்சங்கள்தான் இதனால் குழந்தைகளைப் போல முதியவர்களையும் நாம் கொண்டாட வேண்டும்.
ஆனால் இயந்திரம் ஆகிவிட்ட இன்றைய வாழ்க்கை சூழலில் முதியவர்களை எதற்கும் உதவாதவர்களாக கருதும் மனநிலையே பெரும்பான்மை மக்களிடம் உள்ளது. அவர்களை அரவணைத்து பாதுகாக்காமல் புறக்கணித்து துன்புறுத்தும் நிகழ்வுகளே அதிக அளவில் அரங்கேறி வருகிறது.
அதிலும் குடும்பத்திற்காக மாடாய் உழைத்து ஓடாகத் தேய்ந்து நோய்வாய்ப்பட்ட நிலையில் அவர்களை புறக்கணிப்பது கொடுமையின் உச்சம். இதுபோன்று அவர்களுக்கு தீர்வு காணவும் நமது முன்னோடிகளாக முதியவர்களை போற்றவும் உலக சுகாதார நிறுவனம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் ஜூன் 15-ஆம் தேதி இன்று உலக முதியோர் அவமதிப்பு விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் முதியோர் நலன் மற்றும் அவர்களின் உரிமை சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளை தன்னார்வ அமைப்புகள் நடத்தி வருகிறது. இது குறித்து முதியோர் நலன் சார்ந்த மேம்பாட்டு அமைப்புகளின் நிர்வாகிகள் கூறியதாவது:-
வரும் 2050 ஆம் ஆண்டில் இளைஞர்களை விட 60 வயதுக்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கை பெரும் அளவில் இருக்கும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளது.
இந்த வகையில் அதிகரித்து வரும் முதியோர் தொகையானது அவர்களுக்கு உடல் மட்டும் இன்றி மனரீதியான பல்வேறு பிரச்சனைகளையும் உருவாக்குகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் ஐக்கிய நாடுகளின் சபையானது ஆண்டுதோறும் ஜூன் 15 -ஆம் தேதியை உலக முதியோர் அவமதிப்பு தடுப்பு விழிப்புணர்வு நாளாக அனுசரித்து வருகிறது.
உலக அளவில் முதியோருக்கு பல்வேறு கொடுமைகள் நிகழ்கிறது. அதே நேரத்தில் இந்தியாவைப் பொறுத்தவரை முதியோர் அவமதிக்கப்படும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் முதியோருக்கான கொடுமை சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 23 சதவீதம் என்று இருந்த நிலையில் தற்போது 50 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதில் ஆண்களை பொறுத்தவரை 48% பேரும் பெண்களைப் பொருத்தவரை 53 சதவீதம் பேரும் அவமதிப்பிற்கு ஆளாகின்றனர். இதில் பெருநகரங்களில் தான் 75 சதவீத முதியோர் கொடுமைகளும் அவ மதிப்புக்கு ஆளாகின்றனர்.
இதில் பெருநகரங்களில் தான் 75 சதவீதம் முதியோர் கொடுமைகளும் அவமதிப்புகளும் ஏராளமாக நடக்கிறது. குறிப்பாக முதியோர் புறக்கணிப்பு என்பது 25 சதவீதமும், அவமதிப்பு என்பது 33 சதவீதமும், வசை மொழிகள் 41% நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர உடல் ரீதியாகவும் முதியோர் துன்பப்படுத்துகின்றனர். தங்களுக்கும் நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக காவல்துறை புகார் தெரிவிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு 67% பேரிடம் உள்ளது. ஆனாலும் அவர்கள் முழு மனதோடு புகார் தெரிவிப்பதற்கு முன் வருவதில்லை. 12 சதவீதம் முதியவர்கள் மட்டுமே புகார் தெரிவிப்பதற்கு முன் வருகின்றனர் என்றும் ஆய்வுகள் தெரிவித்துள்ளது.
விஞ்ஞானத்திலும், தொழில் வளர்ச்சியும் நாடு அசுரவேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் இங்கே மனிதர்களுக்கு எதிரான கொடுமைகளும் பல்வேறு நிலைகளில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
அதிலும் குறிப்பாக நமது வாழ்க்கையின் வழிகாட்டிகளாக திகழ்ந்த முதியோரை அவமதிப்பதும் புறக்கணிப்பதும் கொடுமையின் உச்சம். பிள்ளைகள் உறவினர்கள் சமூகம் என்று அனைத்து நிலைகளிலும் முதியோர் குறித்த பார்வை மாற வேண்டும். பயனற்ற பொருள்களாக அவர்களை நினைப்பதை தவிர்க்க வேண்டும். பண்போடு அரவணைத்து பாதுகாக்க வேண்டும் இது மட்டுமே தொடரும் துயரங்களுக்கு தீர்வு தரும் இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.