கோவையில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தொற்று – காரணம் என்ன?
கோவையில் ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையிலும், கொரோனா பாதிப்புகள் குறையாமல் உயர்ந்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் மற்ற மாவட்டங்களை காட்டிலும் கூடுதலாக, கோவையில் கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. இதனிடையே கடந்த ஒரு மாத காலமாக கொரோனா தொற்று பாதிப்புகள் ஏறுவதும், இறங்குவதுமாக இருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கோவையில் கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. நாள்தோறும் மீண்டும் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.
இதன் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், கோவையில் ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டார். இருப்பினும் கொரோனா பாதிப்புகள் குறையாமல் உயர்ந்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் நேற்று ஒரே நாளில் 239 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 2134 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றில் இருந்து 187 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று 3 பேர் உயிரிழந்தனர். மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்புகள் வெகுவாக குறைந்துள்ள நிலையிலும், கோவையில் தொடர்ந்து தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.
தொற்று அதிகரிப்பதற்கான காரணங்கள்
அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில், அதன் தாக்கம் கோவை மாவட்டத்திலும் காணப்படுகிறது. நாள்தோறும் பலர் இரு மாநில எல்லைகளை கடந்து வந்து செல்கின்றனர். இதனால் எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கோவை மாவட்டத்திற்கு வரும் கேரள பயணிகள், விமானம், ரயில் பயணிகள் அனைவரும் 72 மணி நேரத்திற்குள் எடுக்கபட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது 2 தவணை தடுப்பூசி செலுத்திய சான்று கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நகரப் பகுதிகளில் மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதும், கடை வீதிகள், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அதிக அளவிலான நபர்கள் கூடுவதும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றாததும் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க காரணமென சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.
கோவையில் கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரித்துவருவது குறித்து கோவை அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் நிர்மலாவிடம் கேட்டோம். அப்போது பேசிய அவர், “கோவையில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டு இருப்பது முக்கிய காரணம். அதேபோல மக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றாமல் அலட்சியமாக இருப்பதும் காரணமாக உள்ளது.
கேரள மாநிலத்தை ஒட்டி கோவை இருந்தாலும், அங்கிருந்து வருபவர்கள் முறைகளை வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றினால் தொற்று பரவாது. மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிதல், தனி மனித இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடித்தால் தான், தொற்று பாதிப்புகள் குறையும்” என அவர் தெரிவித்தார்.