கொளுத்தும் வெயில்! மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் - கோவை அருகே விநோத வழிபாடு
மழை வேண்டி கிராம மக்கள் கழுதைகளுக்கு அலங்காரம் செய்து மேளதாளங்கள் முழங்க சீர்வரிசையுடன் விமர்சையாக திருமணம் நடத்தி வைத்த விநோத சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோடை காலம் என்பதால் தமிழ்நாடு முழுவதும் கடும் வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நீர் நிலைகள் வறண்டு காணப்படுகிறது. மழை இல்லாததால் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. குறிப்பாக, கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியத்தில் மழை இல்லாமல் நுாற்றுக்கணக்கான ஆழ்துளை கிணறுகள் வறண்டு விட்டன.
மானாவாரி பயிர் செய்வது குறைந்து விட்டது. ஆடு, மாடுகளுக்கு தீவனம் இல்லாததால் பலர் விற்று வருகின்றனர். இந்தநிலையில், அக்கரை செங்கப்பள்ளி, லக்கேபாளையம், எல்.கோவில்பாளையம் ஆகிய கிராம மக்கள் ஒன்றுகூடி ஊர் கூட்டம் நடத்தினர். அதில் மழை வேண்டி கழுதைகளுக்கு பஞ்ச கல்யாணி திருமணம் நடத்தி வைக்க முடிவெடுத்தனர்.
கழுதைகளுக்கு விமர்சையாக திருமணம்:
லக்கேபாளையம் பகுதியைச் சேர்ந்த பெண் கழுதை மணமகளாகவும், பக்கத்து கிராமமான கோவில்பாளையத்தைச் சேர்ந்த ஆண் கழுதை மணமகனாகவும் தேர்வு செய்யப்பட்டன. பெண் கழுதைக்கு புடவை கட்டி வளையல், பாசி அணிவித்து உதட்டுச் சாயம்,நெகச்சாயம் பூசி மணமகள் அலங்காரம் செய்யப்பட்டது. இதேபோல ஆண் கழுதைக்கு வேஷ்டி அணிவித்து மணமகன் அலங்காரம் செய்யப்பட்டது.
தொடர்ந்து மணமகன் மற்றும் மணமகள் அழைப்பு நடைபெற்றது. மேளதாளம் முழங்க கிராம மக்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர். பின்னர் சீர்வரிசை பொருட்கள் கோவிலில் வைத்து பூஜை செய்யப்பட்ட பின்னர், வேத மந்திரங்கள் முழங்க மேளதாளங்களுடன் பெண் கழுதைக்கு தாலி அணிவித்து திருமணம் விமரிசையாக நடத்தி வைக்கப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த கிராம மக்கள் கழுதைகளுக்கு அட்சதை தூவி வாழ்த்தினர்.
மழை பெய்யும் என நம்பிக்கை:
தொடர்ந்து மறுவீடு அழைப்பு சடங்கும் நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மொய்ப்பணம் கொடுத்து சென்றனர். மேலும் திருமண விருந்தாக கிராம மக்களுக்கு கம்மங்கூழ் வழங்கப்பட்டது. மனிதர்களுக்கு திருமணம் நடைபெறுவது போலவே மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கழுதைகளுக்கு திருமணம் நடத்தி வைத்தால் மழை பெய்யும் என்பது ஐதீகம் எனவும், கடுமையான வறட்சி காலங்களில் இது போல கழுதைகளுக்கு திருமணம் நடத்தி வைத்ததால் மழை பெய்ததாகவும், தற்போது கழுதைகளுக்கு திருமணம் நடத்தி வைத்துள்ளதால் விரைவில் மழை பெய்யும் எனவும் கிராம மக்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர்.
இதேபோல வறட்சி காலங்களில் கழுதைகளுக்கு திருமணம் செய்து வழிபாடு நடத்திய போது, நல்ல மழை பெய்ததாகவும், அதனால் வறட்சி காலங்களில் இவ்வாறு கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர். கழுதைகளுக்கு விமர்சையாக திருமணம் நடத்தி வைத்த விநோத சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.