கோவை: வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம்; பரிசல்களில் ஆற்றைக் கடக்கும் கிராம மக்கள்
சிறுமுகை அருகே லிங்காபுரம் பகுதியில், மலையடிவார கிராமங்களை நகர பகுதியோடு இணைக்கும் பாலம் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், கடந்த மாதத்தில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்தது. இதனைத் தொடர்ந்து கடந்த சில வாரங்களாக மழை குறைந்து காணப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் மழை பெய்து வருகிறது. கோவை மாநகர் பகுதிகளில் மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் பல்வேறு இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுமுகை அருகே லிங்காபுரம் பகுதியில், மலையடிவார கிராமங்களை நகர பகுதியோடு இணைக்கும் பாலம் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மலையடிவார கிராமங்களான காந்தவயல், காந்தையூர், ஆளூர், உளியூர் என நான்கு கிராம மக்கள் பவானி ஆற்றின் கிளை ஆறான காந்தையாற்றை கடந்தே சிறுமுகை வந்தடைய வேண்டும். பவானிசாகர் அணையின் நீர் தேக்கப் பகுதியில் அமைந்துள்ள இக்கிராமங்கள் அணையின் நீர்மட்டம் நூறு அடியை கடந்தாலே வெள்ளம் சூழ்ந்து, இப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்க துவங்கி விடும்.
உயர்மட்ட பாலம் இல்லாததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நான்கு கிராம மக்கள் மிகவும் ஆபத்தான முறையில் பரிசல்கள் மூலம் காட்டாறான காந்தையாற்றை கடந்து நகர பகுதிக்கு சென்று திரும்பி வருகின்றனர். விவசாயம், மருத்துவம், கல்வி, வேலை என அனைத்திற்கும் இப்பகுதி மக்கள் லிங்காபுரம் வழியே நகரப் பகுதிக்கு வந்தாக வேண்டிய சூழலில், வேறு வழியின்றி இம்மக்கள் பரிசல் பயணத்தையே நம்பி உள்ளனர். இதில் பள்ளி செல்லும் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாலம் தண்ணீரில் மூழ்கியதால் பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. கிராமத்தில் இருந்து பரிசல் மூலம் ஆற்றை கடந்து இரண்டு கிலோமீட்டர் தூரம் வனப்பகுதி வழியாக மாணவர்கள் நடந்து சென்று பேருந்து ஏற வேண்டிய சூழல் உள்ளது. இதனால் அப்பகுதியில் தரைப்பாலத்திற்கு பதிலாக ஆற்றைக் கடக்கும் வகையில் உயர் மட்ட பாலம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், ”தங்களுடைய கிராமம் அடர் வனப்பகுதியில் அமைந்துள்ளதால் வனப்பகுதி வழியாக நடந்து செல்வது என்பது மிகவும் ஆபத்தானது. யானை எப்போது வேண்டுமானாலும் வரலாம். மழைக்காலங்களில் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்குவதால், பரிசல்களில் பயணம் செய்து வருகிறோம். வருடத்தில் ஒரு சில மாதங்கள் மட்டுமே தண்ணீர் குறைவதால், பாலம் வழியாக போக்குவரத்து சேவை இருக்கும். மற்ற நேரங்களில் பரிசலை மட்டுமே நம்பியுள்ளோம். இப்பகுதியில் விரைந்து உயர்மட்ட பாலம் கட்டித் தர வேண்டும்” எனத் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்