Watch Video : பீர் குடிக்கும் குரங்கு ; வனப்பகுதியில் மதுபாட்டில்களை வீசி செல்பவர்களால் விபரீதம்..
மேட்டுப்பாளையத்திலிருந்து கோத்தகிரி செல்லக்கூடிய மலைப்பாதையில் குரங்கு ஒன்று, அங்கு கிடந்த ஒரு பீர் பாட்டிலில் குடிக்கும் காட்சியை அங்கிருந்தவர்கள் படம் பிடித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதை ஒட்டிய வனப்பகுதிகளில் வன விலங்குகளின் புகலிடமாக விளங்கி வருகிறது. அண்மை காலமாக வன விலங்குகள் கிராமப்பகுதிகளுக்குள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வருவது அதிகரித்து வருகிறது. அதே சமயம் வனப்பகுதிகளை ஒட்டிய பகுதிகளில் அத்துமீறி செயல்படும் மனிதர்களின் நடவடிக்கைகளால் வன விலங்குகள் பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் வன விலங்குகளின் உணவு உள்ளிட்ட பழக்கங்களில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. இதனை வெளிப்படுத்தும் வகையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் குரங்கு ஒன்று பீர் பாட்டிலில் குடிக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மேட்டுப்பாளையம் வழியாக நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களுக்கு செல்ல கூடிய பிரதான சாலை உள்ளது. மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர் மற்றும் கோத்தகிரி ஆகிய இரண்டு மலைப்பாதைகள் வழியாக நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பயணித்து வருகின்றனர். சுற்றுலா வரும் சில பயணிகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள சாலைகளிலும், மலை பாதைகளிலும் அமர்ந்து மது அருந்துவது அதிகரித்து வருகிறது. அதேபோல ஆபத்தை உணராமல் வனவிலங்குகளுடன் செல்பி எடுப்பது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இது போன்ற செயல்களை தடுக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும், தொடர்ந்து இச்செயல்கள் நடைபெற்று வருகிறது.
பீர் குடிக்கும் குரங்கு.
— Prasanth V (@PrasanthV_93) January 25, 2022
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி செல்லும் மலைப்பாதையில் மலைப்பாதையில் அத்துமீறி மது பாட்டில்களை வீசி செல்பவர்களால் நேரும் விபரீதம்@abpnadu pic.twitter.com/r3slUtKidP
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேட்டுப்பாளையத்திலிருந்து கோத்தகிரி செல்லக்கூடிய மலைப்பாதையில் குரங்கு ஒன்று, அங்கு கிடந்த ஒரு பீர் பாட்டிலில் குடிக்கும் காட்சியை அங்கிருந்தவர்கள் படம் பிடித்துள்ளனர். மேலும் அருகில் உள்ள மற்றொரு குரங்கு பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலை குடிக்கும் காட்சிகளும் அதில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது குறித்து வன ஆர்வலர்கள் கூறுகையில், ”மலைப்பாதை வழியாக பயணம் மேற்கொள்பவர்கள் அடிக்கடி மதுபாட்டில்களை சாலை ஓரத்திலும், மலைப் பாதையிலும் வீசி செல்கின்கின்றனர். இதனால் அப்பாட்டில்களை எடுத்து வன விலங்குகள் குடிப்பதும் நடக்கிறது. சிலர் மதுபாட்டில்களை உடைத்து வீசி வருகின்றனர். இதனால் யானை உள்ளிட்ட விலங்குகளுக்கு காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து நேர வாய்ப்புள்ளது.
வனத்துறையினர் பகல் பொழுதில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தாலும், இரவு நேரத்தில் ஒரு சிலர் சாலையோரத்தில் மது அருந்திவிட்டு பாட்டில்களை அங்கேயே வீசி விட்டு சென்று விடுகின்றனர். இதன் காரணமாக வனவிலங்குகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனைத் தடுக்க வனத்துறையினர் மலைப்பாதை மற்றும் வனப்பகுதி ஒட்டி உள்ள சாலைகளில் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும். சுற்றுலா பயணிகளும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தனர்.