'திமுகவில் மாற்றுக் கட்சியினர் இணைவது போல திமுகவினர் பாஜகவில் இணைகிறார்கள்’- வானதி சீனிவாசன்
பாஜகவினர் திமுகவில் இணைந்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், ”திமுகவில் மாற்றுக் கட்சியினர் இணைவது போல எங்கள் கட்சியிலும் திமுகவிலிருந்து பலரும் இணைந்து வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.
சட்டமன்ற தொகுதிகளில் நீண்ட நாட்களாக நிறைவேற்றப்படாத 10 முக்கிய பிரச்சினைகளை பட்டியலை எம்.எல்.ஏக்கள் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்ப வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரிவித்து இருந்தார். இதன்படி கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தொகுதியில் உள்ள முக்கிய பிரச்சனைகள் அடங்கிய பட்டியலை கோவை மாவட்ட கலெக்டர் சமீரனிடம் வழங்கினார. அதில், கோவை தெற்கு தொகுதி முழுவதும் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக சேதம் அடைந்துள்ளது. அனைத்து சாலைகளையும் உடனடியாக சரி செய்து வேண்டும், ஸ்மார்ட் சிட்டி திட்டதிற்குட்பட்ட பணிகளை விரைந்து முடிக்கப்பட வேண்டும்.
பெரிய கடை வீதி, ராஜவீதி ரங்கே கவுண்டர் வீதி மற்றும் ஒப்பணக்கார வீதியின் ஒருங்கிணைந்த மல்டி லெவல் பார்க்கிங் வசதி அவசியம் வேண்டியுள்ளது. டி.கே மார்க்கெட்டின் உட்கட்டமைப்பு மற்றும் மல்டி லெவல் பார்க்கிங் வசதியுடன் மேம்படுத்த வேண்டும். கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை விரைவு படுத்த வேண்டும். உக்கடம் பகுதியில் பிரதான தொழிலாக தங்க நகை பட்டறைகள் உள்ளதால் அவர்களின் மேம்பாட்டுக்காக ஒருங்கிணைந்த தொழில் வளாகம் மற்றும் குடியிருப்பு வசதி செய்யப்பட வேண்டும்.உலகத்தரம் வாய்ந்த பல்லுயிர் தாவரவியல் பூங்கா நகரின் மையப் பகுதியில் உள்ள சிறைச்சாலை வளாகத்தில் அமைக்கப்பட வேண்டும். உள்ளிட்ட 14 கோரிக்கைகளை குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக கோவை காந்திபுரம் 48வது வார்டில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 15 லட்சம் மதிப்பீட்டில் நவீன அங்கன்வாடி மையம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜையில் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ”அங்கன்வாடி மையங்களுக்கு கூடுதலாக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அத்தொகுதிகளில் உள்ள 10 முக்கிய கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்குமாறு முதல்வர் தெரிவித்ததன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து தெற்கு தொகுதிக்குட்பட்ட 10 முக்கிய பிரச்சனைகளை அளிக்க உள்ளேன். குறிப்பாக மழையினால் சேதம் அடைந்த பகுதிகளான லங்கா கார்னர் அவிநாசி மேம்பாலம் ஆகிய இடங்களில் மழை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு திமுக தலைவராக ஸ்டாலின் வாழ்த்துக்களை கூறவில்லை என்றாலும், மாநிலத்தின் முதல்வராக அவர் வாழ்த்து தெரிவித்திருக்க வேண்டும். இந்து பண்டிகைகளுக்கு மட்டும் அவர் வாழ்த்துகளை தெரிவிக்காமல் உள்ளார்” எனத் தெரிவித்தார். பொள்ளாச்சியில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் பாஜகவினர் திமுகவில் இணைந்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், ”திமுகவில் மாற்றுக் கட்சியினர் இணைவது போல எங்கள் கட்சியிலும் திமுகவிலிருந்து பலரும் இணைந்து வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்