‘ஒட்டுமொத்த திரைத்துறையையும் திமுகவினர் கையில் வைத்துள்ளனர்’ - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
"திரைத்துறையை வைத்துக்கொண்டு திமுகவினர் செழிப்பாக உள்ளனர். அதை தாண்டி யாராவது படத்தை விட்டார்கள் என்றால் அவர்களுக்கு தியேட்டர் கிடைக்காது. இதற்கு லியோ திரைப்படம் ஒரு முன் உதாரணம்."
கோவை டாடாபாத் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் மியாவாக்கி முறையில் குறுங்காடுகள் வளர்க்கும் விருட்சம் எனும் திட்டத்தை, கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் மரக்கன்றுகளை நடவு செய்து துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பள்ளி குழந்தைகளுக்காக கோவை தெற்கு தொகுதியில் பல்வேறு திட்ட பணிகளை செயல்படுத்தி வருகிறோம், தற்போது விருட்சம் என்ற திட்டத்தின் மூலம் கோவை மாநகராட்சியில் உள்ள 7 பள்ளிகளில் குறுங்காடுகள் வளர்க்கும் இந்த திட்டத்தை துவக்கி உள்ளோம்.
இதன் மூலம் குழந்தைகளுக்கு மரம் நடும் ஆர்வம் பொறுப்பும் உருவாகிறது. கரியமல வாயு வெளியிடு அதிகமாகி வருகிறது. இதற்கு சமமாக கார்பன் நியூட்ரல் உருவாக்க வேண்டும். இதற்கு தகுந்தாற் போல் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் மரம் நட வேண்டும். மாநகராட்சி இது மாதிரியான திட்டத்தை செயல்படுத்த வேண்டும். குறுங்காடுகள் வளர்ப்பதில் நீடித்து வளர்வது உள்ளூர் மரங்கள் மட்டுமே. சாலை விரிவாக்கத்திற்கு எடுக்கபடும் மரங்கள் இன்னொரு இடத்தில் வைக்க வேண்டும் என்பது எனது கோரிக்கை” எனத் தெரிவித்தார்.
அமைச்சர் சேகர்பாபு அண்ணாமலை குறித்து விமர்சனம் செய்ததற்கு பதிலளித்த வானதி சீனிவாசன், ”திமுக பைல்ஸ், எக்ஸ்பிரஸில் ஏறுகிறதா, ஜெட்டில் ஏறுகிறதா என்பதை பார்க்கத்தான் போகிறோம். மாநகராட்சி பள்ளியில் மாணவர்களுக்கு சொல்லி கொடுப்பதற்கு ஆசிரியர்களே இல்லை, அடிப்படை வசதிகளும் இல்லை. டெங்கு காய்ச்சல் பரவதை தடுப்பு கொசு மருந்து அடித்ததை நான் பார்த்ததே இல்லை. எனது சட்டமன்ற அலுவலகத்தில் கொசு அடிப்பதே என்னுடைய வேலையாக இருக்கின்றது” எனத் தெரிவித்தார்.
கோவை மாநகராட்சி ஆணையாளர் மாற்றம் குறித்த கேள்விக்கு, “அரசு அதிகாரிகள் தன்னுடைய வேலையை செய்வதற்கு முன்னரே அதிகாரிகள் தொடர்ச்சியாக மாற்றப்பட்டு வருகின்றனர். அடிக்கடி அதிகாரி மாற்றத்தை கைவிட வேண்டும்” எனத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “திரைத்துறையை வைத்துக்கொண்டு திமுகவினர் செழிப்பாக உள்ளனர். அதை தாண்டி யாராவது படத்தை விட்டார்கள் என்றால் அவர்களுக்கு தியேட்டர் கிடைக்காது. இதற்கு லியோ திரைப்படம் ஒரு முன் உதாரணம். இவர்கள் ரெட் ஜெயண்டுக்கு சாதகமாக இருக்கிறார்கள். மற்றவர்களுக்கு பலனில்லை. ஒட்டுமொத்த திரைத்துறையையும் திமுகவினர் கையில் வைத்துள்ளனர். இதற்கு முன்னர் இப்படி இருந்ததால் தான் இவர்களின் ஆட்சி தூக்கி எறியப்பட்டது. அதே தவறை தான் திரும்ப செய்து கொண்டிருக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.