இந்தியா கூட்டணி என்பது பெண்களின் கண்ணியத்திற்கு எதிரான கூட்டணி - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
”இந்தியா கூட்டணியில் இருக்கக்கூடிய காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் திராவிடர் முன்னேற்றக் கழகம் கட்சியினர் யாரும் நிதீஷ் குமார் பேச்சுக்கு கருத்து தெரிவிக்காமல் மௌனமாக பார்த்து வருகின்றனர்”
சட்டசபையில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் பேசும்போது மக்கள் தொகை கட்டுப்படுத்துவது குறித்து அவர் பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் தனது பேச்சை திரும்பி பெற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். எனினும் அவர் பேசியதற்கு கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, பாஜக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நிதிஷ் குமார் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், ”பீகார் முதல்வர் நிதீஷ்குமார் பெண்கள் குறித்தும், மக்கள் தொகை கட்டுப்படுத்துவது குறித்தும் அறுவருக்க தகவல் வகையில் பேசியுள்ளார். அவரது பேச்சைக் கண்டித்து பாஜகவினர் கடுமையான கண்டனங்களை பதிவு செய்து நாடு முழுவதும் பாஜக மகளிர் அணி சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து, தனது வார்த்தைகளை திரும்ப பெறுவதாக நிதீஷ்குமார் கூறியுள்ளார். ஒருபுறம் இந்த நாட்டில் உள்ள பெண்களின் கல்வி, உடல் நிலை, பாதுகாப்பு, பெருமை மற்றும் கண்ணியத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மேடையிலும் பெண்களை உயர்வுபடுத்தும் வேலையை செய்து வருகிறார்.
ஆனால், இந்தியா கூட்டணியில் இருக்கக்கூடிய காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் திராவிடர் முன்னேற்றக் கழகம் கட்சியினர் யாரும் நிதீஷ் குமார் பேச்சுக்கு கருத்து தெரிவிக்காமல் மௌனமாக பார்த்து வருகின்றனர். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் திமுக நித்தீஷ்குமார் பேச்சுக்கு சற்றும் குறையாத வகையில் பேசி உள்ளது. இந்தியா கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சி தலைவர்களுடைய பெண்கள் குறித்த பார்வையை இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் பார்க்க முடிகிறது. இவர்கள் சேர்ந்து இந்த நாட்டின் பெண்களின் முன்னேற்றத்திற்காக என்ன செய்ய முடியும் என்பதை இவர்களது பேச்சு காட்டுகிறது. இதை மகளிர் மத்தியில் பாஜக மகளிர் அணியினர் பிரச்சாரமாக எடுத்துச் செல்லும்.
சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் பேசிய பிரதமர், பெண்களை அவ மரியாதை செய்கின்ற வார்த்தையை கூட பயன்படுத்தக் கூடாது என பேசினார். உச்சநீதிமன்றம் இரண்டு மாதங்களுக்கு முன்பு பெண்களை அவமானப்படுத்தும் வார்த்தைகளை மாற்ற வேண்டும் என கூறியுள்ளது. ஆனால் நாட்டின் மூத்த அரசியல்வாதி என பார்க்கக்கூடிய, ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தவர், பலமுறை முதலமைச்சராக இருந்து அனுபவம் பெற்ற ஒருவர் இது போன்ற கேவலமான கருத்துக்களை வெளியிடுவது கண்டிக்கத்தக்கது. ஆணாதிக்க மனநிலையை இந்த பேச்சுக்கள் காட்டுகிறது. இந்தியா கூட்டணி என்பது பெண்களின் கண்ணியத்திற்கும் கௌரவத்திற்கும் எதிரான கூட்டணி என்பதை பாஜக மகளிர் அணி பிரச்சாரத்தில் முன்னிறுத்தும்.
ஒரு சில கல்லூரியில் ராகிங் நடவடிக்கைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது கோவையில் நடந்துள்ள இந்த சம்பவத்தை பொறுத்தவரை அவர்கள் நடந்த பின்பு நடவடிக்கை எடுப்பதை தாண்டி, தவறுகள் நடப்பதற்கு முன்பு கல்லூரி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த விதத்திலும் புதிதாக வரும் கல்லூரி மாணவர்களின் உடலுக்கும் மனதுக்கும் தீங்கு விளைவிக்கும் ராகிங் போன்ற செயல்களை பாஜக ஆதரிக்காது. ஒவ்வொரு மாவட்டத்திலும் சுகாதாரத்துறை சார்பாக கூடுதலாக காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட வேண்டும். தற்போது தேவைக்கு ஏற்ப அளவில் முகாம்கள் நடத்தப்படவில்லை. மருத்துவமனையில் நாள்பட்ட காய்ச்சல் சிகிச்சைக்காக பொதுமக்கள் பலர் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பலருக்கும் கொரோனா ஏற்பட்டு வருகிறது. எனவே மீண்டும் கொரோனா பரிசோதனைகளை தொடங்க வேண்டும். வருமான வரித்துறையினர் சோதனையை பொறுத்த வரை நாடு முழுவதும் எங்கெல்லாம் ஆதாரங்கள் கிடைக்கிறதோ அதன் அடிப்படையில் சோதனைகள் நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.