ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு - பெற்றோர்களை அலைகழிக்கும் செவிலியர்கள்
பச்சிளம் குழந்தைகளை தூக்கி வருபவர்களை செவிலியர்கள் அலைக்கழிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை செல்வபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தடுப்பூசி போட பச்சிளம் குழந்தைகளை தூக்கி வருபவர்களை செவிலியர்கள் அலைக்கழிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஆரம்ப சுகாதாரா நிலையங்கள் பொதுமக்களுக்கு பொது சுகாதாரச் சேவைகளை வழங்கிடும் அடிப்படை மருத்துவ நிலையமாகும். முக்கியமாக கிராமப்புறங்களில் அனைவருக்கும் எந்நேரமும் எளிதாக சென்று ஆரம்பநிலை மருத்துவ வசதிகளை அமைத்துத் தருவதே இந்நிலையங்களின் நோக்கமாகும். கோவை செல்வபுரம் பத்ரகாளியம்மன் கோவில் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்துக்கு பச்சிளம் குழந்தைகளை தூக்கிக் கொண்டு தடுப்பூசி போட வரும் தாய்மார்களை அங்குள்ள செவிலியர்கள் அலைக்கழிப்பதாக கூறப்படுகிறது. ஆரம்ப சுகாதார நிலையத்தை சேர்ந்த செவிலியர், சுகாதார மையத்தில் இல்லாமல் வேறு இடங்களில் இருக்கும் பொழுது அந்த இடத்திற்கு தடுப்பூசி போட குழந்தைகளை தூக்கி வர செல்கின்றனர்.
பொதுமக்கள் கோரிக்கை
ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி கைவசம் இல்லை எனவும், சுகாதார மையத்தின் செவிலியர் இருக்கும் இடத்தில் ஊசி இருப்பதாகவும் கூறி ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை அலை கழிப்பதாக கூறப்படுகின்றது. தடுப்பூசி போட குழந்தையை தூக்கிக் கொண்டு வந்த நபர் ஒருவர் இந்த காட்சிகளை செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த காட்சிகள் வைரலாகி வருகின்றது. பச்சிளம் குழந்தைகளை தூக்கி வந்த பெற்றோர், ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே மருந்து இல்லை என சொல்கின்றனர் என ஆதங்கத்தை தெரிவிக்கும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக பொதுமக்கள் அலைகழிக்கப்படுவதாகவும், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதிய தடுப்பூசியை கையிருப்பு வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்து உள்ளனர்.