Valparai: வால்பாறையில் சிறுத்தை தாக்கி இருவர் படுகாயம் - வெளியில் நடமாட மக்கள் அச்சம்..! விரைவில் பிடிக்க கோரிக்கை..!
கூலாங்கல் ஆற்றுப்பகுதியில் மேய்ச்சலுக்கு விடப்படும் மாடுகளை வேட்டையாட வரும் சிறுத்தை, மனிதர்களை தாக்கி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் காட்டு யானை, சிறுத்தை, புலி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
சிறுத்தை நடமாட்டம்:
இந்நிலையில் சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் கடந்த சில நாட்களாக ஒரு சிறுத்தை நடமாடி வருகிறது. நேற்று அப்பகுதியில் தேயிலை எஸ்டேட்டில் பணி புரிந்து கொண்டிருந்த போது வட மாநிலத்தைச் சேர்ந்த அணில் ஓரான் (27) என்பவரின் காலை, தேயிலைக் காட்டிற்குள் பதுங்கி இருந்த சிறுத்தை திடீரென பாய்ந்து தாக்கியது. அப்போது அந்த சிறுத்தை அவருடைய காலை கடித்து குதறியது. இதில் அவருடைய வலது கால் முறிவு ஏற்பட்டு, இரத்த வெள்ளத்தில் இருந்துள்ளார்.
அவரது அலறல் சத்தத்தை கேட்டு வந்த தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் அவரை மீட்டனர். அப்போது அப்பகுதிக்கு ஆய்வுக்கு வந்த வால்பாறை நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவள்ளி செல்வம் அப்பகுதியில் பணியில் இருக்கும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூற சென்ற போது, அப்பகுதியில் பணிபுரிந்த தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் கூக்குரலிட்டனர். அங்கு சென்று அவர் பார்த்த போது, அணில் ஓரானை வனத்துறை ஊழியர்கள் மற்றும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் உதவியுடன் தூக்கிக் கொண்டு வந்தனர். இதையடுத்து நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவள்ளி தன்னுடைய வாகனத்தில் ஏற்றி உடனடியாக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். அங்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
தொடர் தாக்குதல்:
நேற்று முன்தினம் அதே பகுதியில் பணி புரிந்த சீதா முனி குமாரி என்ற பெண்மணியை அதே சிறுத்தை தாக்கியது. அதில் அவரது விரலில் காயம் ஏற்பட்டது. இதனால் சிறுகுன்றா எஸ்டேட், நல்லகாத்து எஸ்டேட், நடுமலை எஸ்டேட், சோலையார் எஸ்டேட் தேயிலை தோட்ட தொழிலாளர்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. கூலாங்கல் ஆற்றுப்பகுதியில் மேய்ச்சலுக்கு விடப்படும் மாடுகளை வேட்டையாட சிறுத்தை வரும் நிலையில் மனிதர்களை தாக்கி வருவதாகவும், இதுவரை 3 மாடுகளை வேட்டையாடிய சிறுத்தை இருவரை தாக்கியுள்ளது எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
அந்த சிறுத்தையை உடனடியாக கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்